2 கொரிந்தியர் 3 : 1 (OCVTA)
நாங்களே மறுபடியும் எங்களை பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சில மனிதருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுகிறது போல, நாங்கள் உங்களுக்கு நற்சான்றுக் கடிதங்களைக் காட்டவேண்டுமா? அல்லது உங்களிடமிருந்தும் நற்சான்றுக் கடிதங்கள் எங்களுக்குத் தேவையா?
2 கொரிந்தியர் 3 : 2 (OCVTA)
இல்லையே; நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லோராலும் அறிந்து, வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள்.
2 கொரிந்தியர் 3 : 3 (OCVTA)
நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
2 கொரிந்தியர் 3 : 4 (OCVTA)
இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு.
2 கொரிந்தியர் 3 : 5 (OCVTA)
நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது.
2 கொரிந்தியர் 3 : 6 (OCVTA)
அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார்.
2 கொரிந்தியர் 3 : 7 (OCVTA)
புது உடன்படிக்கையின் மகிமை கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது.
2 கொரிந்தியர் 3 : 8 (OCVTA)
அதுவே அப்படியிருந்தது என்றால், பரிசுத்த ஆவியானவரின் பணி எத்தனை அதிக மகிமையுள்ளதாய் இருக்கும்?
2 கொரிந்தியர் 3 : 9 (OCVTA)
மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்?
2 கொரிந்தியர் 3 : 10 (OCVTA)
முந்திய மகிமையுடன் இப்பொழுதுள்ள மகிமையை ஒப்பிடும்போது, இப்பொழுதுள்ள மகிமைக்கு முன்பாக இணையற்றது.
2 கொரிந்தியர் 3 : 11 (OCVTA)
அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது?
2 கொரிந்தியர் 3 : 12 (OCVTA)
ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம்.
2 கொரிந்தியர் 3 : 13 (OCVTA)
நாங்கள் மோசேயைப் போன்றவர்கள் அல்ல. மறைந்துபோகும் மகிமையை, இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டான்.
2 கொரிந்தியர் 3 : 14 (OCVTA)
ஆனால், அவர்களின் மனது மழுங்கிப் போயிற்று. ஏனெனில், இந்நாள்வரை அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது, அந்த முக்காடு நீக்கப்படாமலேயே இருக்கிறது. ஏனெனில் அது கிறிஸ்துவில் மட்டுமே நீக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 3 : 15 (OCVTA)
இன்றுவரை மோசேயின் சட்டங்கள் வாசிக்கப்படும்போது, அவர்களுடைய இருதயங்களை ஒரு முக்காடு மூடிக்கொண்டிருக்கிறது.
2 கொரிந்தியர் 3 : 16 (OCVTA)
ஆனால், யாராவது கர்த்தரிடத்தில் திரும்பும்போது, அந்த முக்காடு நீக்கப்படுகிறது.
2 கொரிந்தியர் 3 : 17 (OCVTA)
இப்பொழுதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே அவர் விடுதலை கொடுக்கிறார்.
2 கொரிந்தியர் 3 : 18 (OCVTA)
நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன், கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18