1 தீமோத்தேயு 5 : 1 (OCVTA)
புத்திமதிகள் முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும்,
1 தீமோத்தேயு 5 : 2 (OCVTA)
பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள்.
1 தீமோத்தேயு 5 : 3 (OCVTA)
உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு.
1 தீமோத்தேயு 5 : 4 (OCVTA)
ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது.
1 தீமோத்தேயு 5 : 5 (OCVTA)
ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள்.
1 தீமோத்தேயு 5 : 6 (OCVTA)
ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.
1 தீமோத்தேயு 5 : 7 (OCVTA)
ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு.
1 தீமோத்தேயு 5 : 8 (OCVTA)
யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன்.
1 தீமோத்தேயு 5 : 9 (OCVTA)
ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
1 தீமோத்தேயு 5 : 10 (OCVTA)
அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 11 (OCVTA)
இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
1 தீமோத்தேயு 5 : 12 (OCVTA)
இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள்.
1 தீமோத்தேயு 5 : 13 (OCVTA)
அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள்.
1 தீமோத்தேயு 5 : 14 (OCVTA)
எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும்.
1 தீமோத்தேயு 5 : 15 (OCVTA)
ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள்.
1 தீமோத்தேயு 5 : 16 (OCVTA)
ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும்.
1 தீமோத்தேயு 5 : 17 (OCVTA)
திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும்.
1 தீமோத்தேயு 5 : 18 (OCVTA)
ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்”* உபா. 25:4 என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” † லூக். 10:7 என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.
1 தீமோத்தேயு 5 : 19 (OCVTA)
ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே.
1 தீமோத்தேயு 5 : 20 (OCVTA)
பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும்.
1 தீமோத்தேயு 5 : 21 (OCVTA)
இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள்.
1 தீமோத்தேயு 5 : 22 (OCVTA)
ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள்.
1 தீமோத்தேயு 5 : 23 (OCVTA)
நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
1 தீமோத்தேயு 5 : 24 (OCVTA)
சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன.
1 தீமோத்தேயு 5 : 25 (OCVTA)
அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
❮
❯