1 இராஜாக்கள் 1 : 1 (OCVTA)
சாலொமோன் அரசனாதல் தாவீது அரசன் முதிர்ந்த கிழவனாய் படுக்கையிலேயே கிடந்தான். அவனை துணிகளினால் போர்த்தியபோதும் அவனுக்குக் குளிர் தாங்கமுடியாதிருந்தது.
1 இராஜாக்கள் 1 : 2 (OCVTA)
எனவே அவனுடைய பணியாட்கள் அவனிடம், “அரசனைப் பராமரிப்பதற்கு ஒரு கன்னிப் பெண்ணைத் தேடுவோம். அவள் அரசனுக்கு உதவி வேலையைச் செய்யட்டும். அவள் எஜமானாகிய அரசன் சூடாக இருக்கும்படி அவருக்குப் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.
1 இராஜாக்கள் 1 : 3 (OCVTA)
அதன்படியே அவர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதிலும் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் நாட்டைச் சேர்ந்த அபிஷாக் என்னும் அழகிய பெண்ணைக் கண்டு அரசனிடம் கொண்டுவந்தார்கள்.
1 இராஜாக்கள் 1 : 4 (OCVTA)
அவள் அதிக அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவள் அரசனைக் கவனித்து அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்துவந்தாள். ஆனால் அரசன் அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை.
1 இராஜாக்கள் 1 : 5 (OCVTA)
அந்த வேளையில் அரசன் தாவீதின் மகன் அதோனியா முன்வந்து, “நான் அரசனாவேன்” என்றான். அவனுடைய தாயின் பெயர் ஆகீத். எனவே அவன் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் தனக்கு முன் செல்வதற்கு ஆயத்தப்படுத்தினான்.
1 இராஜாக்கள் 1 : 6 (OCVTA)
அவனுடைய தகப்பனான அரசன் தாவீது, “நீ ஏன் இவ்விதம் நடக்கவேண்டும்” என்று கேட்டு அவன் செயல்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. அப்சலோமுக்குப் பின் பிறந்த இவன் மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான்.
1 இராஜாக்கள் 1 : 7 (OCVTA)
அதோனியா செருயாவின் மகன் யோவாபுடனும், ஆசாரியனான அபியத்தாருடனும் ஆலோசித்தான். அவர்கள் அவனுக்குத் தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள்.
1 இராஜாக்கள் 1 : 8 (OCVTA)
ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை.
1 இராஜாக்கள் 1 : 9 (OCVTA)
அதன்பின் அதோனியா என்ரொகேலுக்கு அருகேயிருந்த சோகெலேத் என்னும் கல்லின்மேல் செம்மறியாடுகளையும், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான்.
1 இராஜாக்கள் 1 : 10 (OCVTA)
ஆனால் இறைவாக்கினனான நாத்தானையோ, பெனாயாவையோ, விசேஷ காவலனையோ, தனது சகோதரன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 11 (OCVTA)
அப்பொழுது நாத்தான், சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், “ஆகீத்தின் மகனாகிய அதோனியா எங்கள் தலைவனாகிய தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகியதை நீ கேள்விப்படவில்லையா?
1 இராஜாக்கள் 1 : 12 (OCVTA)
இப்போது உனது உயிரையும், உனது மகன் சாலொமோனின் உயிரையும் காப்பாற்ற நீ விரும்பினால், நான் உனக்கு ஆலோசனை சொல்வேன்.
1 இராஜாக்கள் 1 : 13 (OCVTA)
நீ தாவீது அரசனிடம் போய், ‘என் தலைவனாகிய அரசே, அடியாளாகிய எனக்கு: “உமது மகன் சாலொமோனே உமக்குப்பின் உமது அரியணையிலிருந்து அரசாளுவான் என்று ஆணையிட்டு வாக்களித்தீரல்லவா”? அப்படியிருக்க ஏன் அதோனியா அரசனாகிறான்?’ என்று கேள்.
1 இராஜாக்கள் 1 : 14 (OCVTA)
அவ்வாறு நீ அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் வந்து நீ கூறியவற்றை உறுதிப்படுத்துவேன்” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 15 (OCVTA)
அப்பொழுது பத்சேபாள் மிகவும் வயதுசென்றவனாயிருந்த அரசனின் அறைக்குள் அவனைப் பார்க்கச் சென்றாள். அங்கு சூனேம் ஊராளான அபிஷாக், அரசனுக்கு உதவி வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.
1 இராஜாக்கள் 1 : 16 (OCVTA)
பத்சேபாள் அரசனின் முன் தலைகுனிந்து முழங்காற்படியிட்டாள். அரசன் அவளைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டான்.
1 இராஜாக்கள் 1 : 17 (OCVTA)
அதற்கு அவள், “என் தலைவனே, உமக்குப்பின் எனது மகனாகிய சாலொமோனே உமது அரியணையில் இருக்கும் அடுத்த அரசனாவான் என்று, உமது இறைவனாகிய யெகோவாவின் பேரில் உமது அடியவளாகிய எனக்கு நீர் வாக்குப்பண்ணினீரே.
1 இராஜாக்கள் 1 : 18 (OCVTA)
ஆனால் இப்போது அதோனியா அரசனாகிவிட்டான். என் தலைவனாகிய அரசனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.
1 இராஜாக்கள் 1 : 19 (OCVTA)
அவன் பெருந்தொகையான மாடுகளையும், கொழுத்த கன்றுகளையும், செம்மறியாடுகளையும் பலிசெலுத்தினான். அது மட்டுமல்லாமல் அரசனின் எல்லா மகன்களையும் ஆசாரியனான அபியத்தாரையும், இராணுவத் தளபதியான யோவாப்பையும் அழைத்திருந்தான். உமது அடியவனாகிய சாலொமோனையோ அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 20 (OCVTA)
என் தலைவனாகிய அரசே, இப்பொழுது என் தலைவனாகிய அரசனின் அரியணையில் அவருக்குப் பின் யார் அரசனாய் இருப்பான் என்று அறிவதற்காக எல்லா இஸ்ரயேலருடைய கண்களும் உம் மேலேயே இருக்கின்றன.
1 இராஜாக்கள் 1 : 21 (OCVTA)
இல்லாவிட்டால் என் தலைவனாகிய அரசன் உமது முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டபின்பு, நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
1 இராஜாக்கள் 1 : 22 (OCVTA)
அவள் இவ்வாறு அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இறைவாக்கினன் நாத்தான் அங்கு வந்தான்.
1 இராஜாக்கள் 1 : 23 (OCVTA)
அவர்கள் அரசனிடம், “இறைவாக்கினன் நாத்தான் இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது நாத்தான் அரசனிடம் வந்தபோது, அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கினான்.
1 இராஜாக்கள் 1 : 24 (OCVTA)
நாத்தான் அரசனிடம், “தலைவனாகிய அரசனே! உமக்குப்பின் அதோனியாவே அரசனாக உமது அரியணையில் இருப்பான் என்று எப்போதாகிலும் நீர் அறிவித்திருக்கிறீரோ?
1 இராஜாக்கள் 1 : 25 (OCVTA)
இன்று அவன் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அநேகம் செம்மறியாடுகளையும் பலி செலுத்தியிருக்கிறான். அவன் அரசனின் எல்லா மகன்களையும் இராணுவ தளபதிகளையும் ஆசாரியன் அபியத்தாரையும் அழைத்திருக்கிறான். அவர்கள் இப்பொழுது அவனுடன் சாப்பிட்டுக் குடித்து, ‘அரசனாகிய அதோனியா நீடூழி வாழவேண்டும்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
1 இராஜாக்கள் 1 : 26 (OCVTA)
ஆனால் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியன் சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும் உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 27 (OCVTA)
இது, எங்கள் அரசனாகிய தலைவன் தமக்குப்பின்பு யார் அரியணையில் இருக்கவேண்டும் என தமது பணியாட்களுக்கு அறிவிக்காமல் செய்த ஒரு காரியமோ?” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 28 (OCVTA)
தாவீது சாலொமோனை அரசனாகத் தெரிந்தெடுத்தல் அப்பொழுது தாவீது, “பத்சேபாளை இங்கு கூப்பிடுங்கள்” என்று கூறினான். அவள் உள்ளே வந்து அரசனுக்கு முன்பாக நின்றாள்.
1 இராஜாக்கள் 1 : 29 (OCVTA)
அப்பொழுது அரசன் தாவீது அவளிடம் ஆணையிட்டுச் சொன்னதாவது: “என்னை எல்லா ஆபத்திலிருந்தும் விடுவித்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்,
1 இராஜாக்கள் 1 : 30 (OCVTA)
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் எனக்குப்பின் உன் மகன் சாலொமோனே அரசனாவான் என்றும், அவனே என் அரியணையில் எனக்குப்பின் எனது இடத்தில் இருப்பான் என்றும் முன்பு உனக்கு ஆணையிட்டுச் சொன்னதை நிறைவேற்றுவேன் என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான்.
1 இராஜாக்கள் 1 : 31 (OCVTA)
பின்பு பத்சேபாள் மறுபடியும் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கிய பின், அரசனுக்கு முன் முழங்காற்படியிட்டு, “என் தலைவனாகிய அரசன் தாவீது நீடூழி வாழ்வாராக” என்றாள்.
1 இராஜாக்கள் 1 : 32 (OCVTA)
அப்பொழுது தாவீது, “ஆசாரியனான சாதோக்கையும், இறைவாக்கினனான நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும் அழையுங்கள்” என்றான். அவர்கள் உள்ளே வந்தபோது அவர்களிடம்,
1 இராஜாக்கள் 1 : 33 (OCVTA)
“என் மகன் சாலொமோனை என் சொந்தக் கோவேறு கழுதையில் ஏற்றி, என் ஊழியக்காரருடன் அவனை கீகோனுக்கு அழைத்துப் போங்கள்.
1 இராஜாக்கள் 1 : 34 (OCVTA)
அங்கே ஆசாரியனான சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் பண்ணட்டும். அதன்பின்பு எக்காளங்களை ஊதி, ‘சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரியுங்கள்.
1 இராஜாக்கள் 1 : 35 (OCVTA)
பின்பு அவனோடு நீங்கள் வந்து அவனை அரசனாக எனது அரியணையில் அமர்த்துங்கள். அவன் எனது இடத்தில் அரசனாக வேண்டும். இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் நான் அவனை ஆளுநனாக நியமித்திருக்கிறேன்” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 36 (OCVTA)
யோய்தாவின் மகனான பெனாயா அரசனிடம், “ஆமென், என் தலைவனாகிய அரசனின் இறைவனாகிய யெகோவாவும் அவ்வாறே அறிவிப்பாராக.
1 இராஜாக்கள் 1 : 37 (OCVTA)
யெகோவா என் தலைவனாகிய அரசனோடு இருந்ததுபோல, சாலொமோனோடுங்கூட இருந்து, அவனுடைய அரியணையை என் தலைவனாகிய தாவீது அரசனின் அரியணையைப் பார்க்கிலும் இன்னும் பெரிதாக்குவாராக” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 38 (OCVTA)
அப்படியே ஆசாரியன் சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும், யோய்தாவின் மகனான பெனாயாவும், கிரேத்தியரும், பிலேத்தியரும் போய், சாலொமோனை அரசன் தாவீதின் கோவேறு கழுதையில் ஏற்றி கீகோனுக்கு அழைத்துப் போனார்கள்.
1 இராஜாக்கள் 1 : 39 (OCVTA)
ஆசாரியன் சாதோக் பரிசுத்த கூடாரத்திலிருந்த தைலக் கொம்பை எடுத்து சாலொமோனை அபிஷேகம் பண்ணினான். பின்பு அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா மக்களும், “சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க” என்று ஆர்ப்பரித்தார்கள்.
1 இராஜாக்கள் 1 : 40 (OCVTA)
அதன்பின் சாலொமோனுடன் எல்லா மக்களும் புல்லாங்குழலை ஊதிக்கொண்டு நிலம் அதிரத்தக்க பெரும் குதூகலத்துடன் அவனுக்குப்பின் சென்றார்கள்.
1 இராஜாக்கள் 1 : 41 (OCVTA)
அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகள் யாவரும் தங்கள் விருந்தை முடிக்கும் வேளையில் இதைக் கேட்டார்கள். எக்காள சத்தத்தைக் கேட்டதும் யோவாப், “பட்டணத்தில் கேட்கும் இந்தச் சத்தம் என்ன?” என்று கேட்டான்.
1 இராஜாக்கள் 1 : 42 (OCVTA)
இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆசாரியனான அபியத்தாரின் மகன் யோனத்தான் விரைவாக உள்ளே வந்துசேர்ந்தான். அதோனியா அவனிடம், “உள்ளே வா, உத்தமனான நீ ஒரு நல்ல செய்தியைத்தான் கொண்டுவருவாய்” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 43 (OCVTA)
அதற்கு யோனத்தான், “அப்படியல்ல” என்றான். “எங்கள் தலைவனான அரசன் தாவீது சாலொமோனை அரசனாக்கியிருக்கிறார்.
1 இராஜாக்கள் 1 : 44 (OCVTA)
அரசன் அவனை ஆசாரியனான சாதோக், இறைவாக்கினனான நாத்தான், யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பிலேத்தியர் ஆகியோருடன் அரசனின் கோவேறு கழுதையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்.
1 இராஜாக்கள் 1 : 45 (OCVTA)
ஆசாரியன் சாதோக்கும் இறைவாக்கினனான நாத்தானும் அவனை கீகோனில் அரசனாக அபிஷேகம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் போகிறார்கள். பட்டணத்தில் அச்சத்தம் கேட்கிறது. அந்த ஆர்ப்பரிப்புதான் நீர் கேட்கும் சத்தம் என்றான்.
1 இராஜாக்கள் 1 : 46 (OCVTA)
மேலும், சாலொமோன் அரியணையில் அமர்ந்திருக்கிறான்.
1 இராஜாக்கள் 1 : 47 (OCVTA)
அத்துடன் அரசனின் அதிகாரிகள் அரசன் தாவீதிடம், ‘உமது இறைவன் சாலொமோனின் பெயரை உமது பெயரிலும் புகழுடையதாகவும், அவனுடைய அரியணையை உமது அரியணையிலும் பார்க்க பெரிதாகவும் மேன்மைப்படுத்துவாராக’ என்று சொல்லி தாவீது அரசனை வாழ்த்துகிறார்கள். அப்பொழுது அரசன் தன் படுக்கையிலிருந்து தலைகுனிந்து வழிபட்டார்.
1 இராஜாக்கள் 1 : 48 (OCVTA)
மேலும் அரசன், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. எனக்குப்பின் ஒருவனை எனது அரியணையில் அமர்த்தி, இன்று என் கண்கள் காணும்படியாகச் செய்தாரே’ என்று கூறினார்” என்றான்.
1 இராஜாக்கள் 1 : 49 (OCVTA)
இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறி ஓடினார்கள்.
1 இராஜாக்கள் 1 : 50 (OCVTA)
அதோனியா சாலொமோனுக்கு பயந்து ஓடி பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான்.
1 இராஜாக்கள் 1 : 51 (OCVTA)
பின்பு அதோனியா, அரசன் சாலொமோனுக்குப் பயந்து பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான் என்றும், சாலொமோன் அரசன் வாளினால் தன்னைக் கொல்வதில்லை என இன்றைக்குத் தனக்குச் சத்தியம் பண்ணிக் கூறவேண்டும் என்றும் அதோனியா கேட்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
1 இராஜாக்கள் 1 : 52 (OCVTA)
அதற்கு சாலொமோன் மறுமொழியாக, “அவன் உத்தமனாக நடந்துகொண்டால், அவனுடைய தலைமயிரில் ஒன்றுகூட நிலத்தில் விழமாட்டாது. ஆனால் அவனிடம் தீமை காணப்பட்டால் அவன் சாவான்” என்று கூறினான்.
1 இராஜாக்கள் 1 : 53 (OCVTA)
மேலும் அரசனாகிய சாலொமோன் அவனை பலிபீடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அதன்படி அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தனர். அவன் சாலொமோனின் முன்வந்து தலைகுனிந்து வணங்கினான். அப்பொழுது சாலொமோன் அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டிற்குப் போ” என்றான்.
❮
❯