1 கொரிந்தியர் 16 : 1 (OCVTA)
விசுவாசிகளுக்கான காணிக்கை சேகரிப்பு இறைவனுடைய மக்களுக்காகக் காணிக்கை சேகரிப்பதைக் குறித்து நான் சொல்கிறதாவது: கலாத்தியாவிலுள்ள திருச்சபைகளுக்கு செய்யவேண்டும் என்று நான் சொன்னதை நீங்களும் செய்யுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 2 (OCVTA)
ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளில் நீங்கள் ஒவ்வொருவரும், அவரவருடைய வருமானத்துக்கு ஏற்றபடி, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்படி. அதை சேமித்து வையுங்கள். அப்படிச் செய்தால், நான் வரும்போது பணம் சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
1 கொரிந்தியர் 16 : 3 (OCVTA)
நான் அங்கு வரும்போது, நீங்கள் அங்கீகரிக்கும் மனிதருக்கு அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து, உங்களது நன்கொடையுடன் அவர்களை எருசலேமுக்கு அனுப்புவேன்.
1 கொரிந்தியர் 16 : 4 (OCVTA)
நான் போவது நல்லது என்று காணப்பட்டால், அவர்களும் என்னோடு வரலாம்.
1 கொரிந்தியர் 16 : 5 (OCVTA)
தனிப்பட்ட வேண்டுகோள் எனவே, நான் மக்கெதோனியா நாட்டின் வழியாகப்போக இருக்கிறேன். மக்கெதோனியாவின் வழியாக நான் போனபின், நான் உங்களிடம் வருவேன்.
1 கொரிந்தியர் 16 : 6 (OCVTA)
சிறிதுகாலம் நான் உங்களுடன் தங்குவேன். ஒருவேளை குளிர்க்காலத்தை நான் உங்களுடனேயே கழிக்கலாம். இதனால், நான் எங்குபோக வேண்டியிருந்தாலும் எனது பயணத்தில் நீங்கள் உதவிசெய்யலாம்.
1 கொரிந்தியர் 16 : 7 (OCVTA)
இப்பொழுது உங்களைப் பார்த்துப்போக எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உங்களோடு செலவிட எனக்கு நாட்கள் போதாது. கர்த்தர் அனுமதிப்பாரென்றால், கொஞ்சக்காலம் உங்களுடன் கழிக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 16 : 8 (OCVTA)
ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன்.
1 கொரிந்தியர் 16 : 9 (OCVTA)
ஏனெனில், ஒரு பயனுள்ள பணிக்கான ஒரு பெரியவாசல் எனக்காகத் திறந்திருக்கிறது. ஆனால், என்னை எதிர்க்கிற அநேகர் அங்கிருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 16 : 10 (OCVTA)
தீமோத்தேயு உங்களிடத்தில் வந்தால், அவன் உங்களுடன் இருக்கையில் பயமின்றி வசதியாய் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் செய்கிறதுபோலவே அவனும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்கிறானே.
1 கொரிந்தியர் 16 : 11 (OCVTA)
ஆகவே, ஒருவனும் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. அவன் என்னிடம் திரும்பிவரும்படி, அவனைச் சமாதானத்துடன் வழியனுப்பி வையுங்கள். மற்றச் சகோதரருடன், அவனையும் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
1 கொரிந்தியர் 16 : 12 (OCVTA)
நம்முடைய சகோதரனான அப்பொல்லோவைக் குறித்து நான் சொல்கிறதாவது: மற்றச் சகோதரரோடு அவனும் உங்களிடத்திற்கு வர, அவனை நான் அதிகமாய் ஊக்குவித்தேன். ஆனால் இப்பொழுதோ, உங்களிடத்தில் வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், தக்க வாய்ப்பு கிடைக்கும்போது அவன் உங்களிடத்தில் வருவான்.
1 கொரிந்தியர் 16 : 13 (OCVTA)
கவனமாயிருங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நில்லுங்கள். துணிவுள்ள மனிதராய் இருங்கள்; பலமுள்ளவர்களாய் செயல்படுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 14 (OCVTA)
நீங்கள் செய்வதை எல்லாம் அன்பிலேயே செய்யுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 15 (OCVTA)
ஸ்தேவானுடைய குடும்பத்தினரே அகாயா நாட்டில் முதல் முதலாய் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். பரிசுத்தவான்களுக்குப் பணிசெய்வதற்கென அவர்கள் தங்களையே ஒப்புவித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பிரியமானவர்களே, இப்பொழுதும் நான் உங்களை வேண்டிக்கொள்கிறதாவது:
1 கொரிந்தியர் 16 : 16 (OCVTA)
இப்படிப்பட்டவர்களுக்கு மதிப்புக்கொடுத்து நடவுங்கள். கர்த்தருடைய ஊழியத்தில் அவர்களுடன் இணைந்து பிரயாசப்படுகிற ஒவ்வொருவருக்கும் மதிப்புக்கொடுத்து நடவுங்கள்.
1 கொரிந்தியர் 16 : 17 (OCVTA)
ஸ்தேவானும், பொர்த்துனாத்தும், அகாயுவும் இங்கு வந்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், நீங்கள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.
1 கொரிந்தியர் 16 : 18 (OCVTA)
அவர்கள் உங்களுடைய ஆவியை உற்சாகப்படுத்தியது போலவே, என்னுடைய ஆவியையும் உற்சாகப்படுத்தினார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை உயர்வாய் மதிக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 16 : 19 (OCVTA)
இறுதி வாழ்த்துதல் ஆசியா பகுதியிலுள்ள திருச்சபைகளும், உங்களுக்கும் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும், அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபையோரும், கர்த்தருக்குள்ளான தங்கள் மனப்பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 16 : 20 (OCVTA)
இங்குள்ள எல்லாச் சகோதரரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
1 கொரிந்தியர் 16 : 21 (OCVTA)
பவுலாகிய நான், இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலேயே எழுதுகிறேன்.
1 கொரிந்தியர் 16 : 22 (OCVTA)
யாராவது கர்த்தரில் அன்பாயிருக்காவிட்டால், அவன் சபிக்கப்பட்டவன். கர்த்தாவே வாரும்!
1 கொரிந்தியர் 16 : 23 (OCVTA)
நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களுடன் இருப்பதாக.
1 கொரிந்தியர் 16 : 24 (OCVTA)
கிறிஸ்து இயேசுவில் இருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24