1 கொரிந்தியர் 13 : 1 (OCVTA)
அன்பு நான் மனிதரின் மொழிகளிலும், இறைத்தூதரின் மொழிகளிலும் பேசினாலும், அன்புள்ளவனாய் இராவிட்டால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலத் தாளமாகவும், இசையில்லாமல் ஓசையெழுப்பும் கைத்தாளமாகவுமே இருப்பேன்.
1 கொரிந்தியர் 13 : 2 (OCVTA)
நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய் இருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளை இடம் பெயரச் செய்யத்தக்க விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பு உள்ளவனாய் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை.
1 கொரிந்தியர் 13 : 3 (OCVTA)
எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்பு உள்ளவனாய் இராவிட்டால், அதனால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை.
1 கொரிந்தியர் 13 : 4 (OCVTA)
அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது.
1 கொரிந்தியர் 13 : 5 (OCVTA)
அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது.
1 கொரிந்தியர் 13 : 6 (OCVTA)
அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும்.
1 கொரிந்தியர் 13 : 7 (OCVTA)
அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும்.
1 கொரிந்தியர் 13 : 8 (OCVTA)
அன்பு ஒருபோதும் தோல்வியடையாது. ஒருபோதும் அழியாது. எங்கே இறைவாக்குகள் இருக்கின்றனவோ, அவை முடிவுக்கு வரும்; எங்கே ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகள் பேசப்படுகின்றனவோ, அவை ஓய்ந்து போகும்; எங்கே அறிவு இருக்கிறதோ, அது இல்லாமல் போய்விடும்.
1 கொரிந்தியர் 13 : 9 (OCVTA)
ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது.
1 கொரிந்தியர் 13 : 10 (OCVTA)
ஆனால் முழுநிறைவு வரும்போது, முழுநிறைவற்றது மறைந்துபோகும்.
1 கொரிந்தியர் 13 : 11 (OCVTA)
நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறுபிள்ளையைப்போலவே பேசினேன். ஒரு சிறுபிள்ளையைப்போலவே சிந்தித்தேன். ஒரு சிறுபிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான், ஒரு முழு வளர்ச்சிப்பெற்ற மனிதனானபோது, சிறுபிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.
1 கொரிந்தியர் 13 : 12 (OCVTA)
இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம்; அப்பொழுதோ, நாம் முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் ஒரு பகுதியை மட்டுமே அறிந்திருக்கிறேன்; அப்பொழுதோ, நான் முழுமையாக அறிந்துகொள்வேன். நான் அறிந்துகொள்கிறபடியே முழுமையாக அறிந்து கொள்ளப்படுவேன்.
1 கொரிந்தியர் 13 : 13 (OCVTA)
ஆனால் இப்பொழுதோ, நிலைத்து நிற்பவை மூன்று உண்டு. அவை விசுவாசம், எதிர்பார்ப்பு, அன்பு. இவற்றுள், அன்பே பெரியது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13