1 நாளாகமம் 17 : 1 (OCVTA)
தாவீதுக்கு இறைவனின் வாழ்த்து தாவீது தன் அரண்மனையில் குடியமர்ந்த பின்பு இறைவாக்கினன் நாத்தானிடம், “நான் கேதுரு மரத்தினால் செய்யப்பட்ட அரண்மனையில் குடியிருக்கிறேன்; யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியோ இன்னும் கூடாரத்தின் கீழேயே இருக்கிறது” என்றான்.
1 நாளாகமம் 17 : 2 (OCVTA)
அதற்கு நாத்தான் தாவீதிடம், “இறைவன் உன்னோடிருக்கிறபடியால், உன் மனதில் என்ன இருக்கிறதோ நீ அதைச் செய்” என்று சொன்னான்.
1 நாளாகமம் 17 : 3 (OCVTA)
அன்று இரவே நாத்தானுக்கு இறைவனின் வார்த்தை வந்தது:
1 நாளாகமம் 17 : 4 (OCVTA)
“நீ போய் என் அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: நான் குடியிருக்க ஒரு வீட்டைக் கட்டுவது நீ அல்ல.
1 நாளாகமம் 17 : 5 (OCVTA)
நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து அழைத்துவந்த நாளிலிருந்து, இன்றுவரை ஒரு வீட்டில் குடியிருக்கவில்லை. நான் ஒரு கூடாரத்திலிருந்து இன்னொரு கூடாரத்திலும், ஒரு இருப்பிடத்திலிருந்து இன்னொரு இருப்பிடத்திலுமாக மாறிமாறி வசித்தேன்.
1 நாளாகமம் 17 : 6 (OCVTA)
நான் இஸ்ரயேல் மக்களுடன் போன இடங்களிலெல்லாம், மக்களை வழிநடத்தும்படி நான் கட்டளையிட்ட இஸ்ரயேலின் தலைவர்கள் யாரிடமாவது, “எனக்கு கேதுரு மரத்தால் ஒரு வீட்டை ஏன் கட்டவில்லை என எப்போதாவது கேட்டதுண்டா?” ’
1 நாளாகமம் 17 : 7 (OCVTA)
“இப்பொழுது எனது அடியவன் தாவீதிடம் சொல்லவேண்டியதாவது: ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஆளுநனாயிருக்கும்படி வயல்வெளியின் ஆடுகளை மேய்ப்பதிலிருந்தும் உன்னைத் தெரிந்தெடுத்தேன்.
1 நாளாகமம் 17 : 8 (OCVTA)
நீ போன இடமெல்லாம் உன்னோடுகூட நான் இருந்தேன். நான் உனது எல்லாப் பகைவர்களையும் உனக்கு முன்பாக வெட்டிப் போட்டேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன்.
1 நாளாகமம் 17 : 9 (OCVTA)
அதோடு எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பேன். அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கும்படியும், அவர்கள் இனி அலையாமலும் நான் அவர்களை நிலைநாட்டுவேன். தொடக்கத்தில் செய்ததுபோல் கொடியவர்கள் இனி ஒருபோதும் அவர்களை ஒடுக்கமாட்டார்கள்.
1 நாளாகமம் 17 : 10 (OCVTA)
இஸ்ரயேல் மக்களுக்கு மேலாக நான் தலைவர்களை நியமித்த காலந்தொடங்கி நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். நான் உனது பகைவர்கள் எல்லோரையும் அடக்குவேன். “ ‘அத்துடன், யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என அறிவிக்கிறேன்:
1 நாளாகமம் 17 : 11 (OCVTA)
உனது காலம் முடிந்து நீ உனது முற்பிதாக்களுடன் சேரும்போது, உனது சந்ததியில் ஒருவனை எழுப்பி உனது சொந்த மகன் ஒருவனுக்கு உனது அரியணையைக் கொடுப்பேன். நான் அவனுடைய அரசாட்சியை நிலைநிறுத்துவேன்.
1 நாளாகமம் 17 : 12 (OCVTA)
அவனே எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; நான் அவனுடைய அரியணையை என்றென்றும் நிலைக்கப்பண்ணுவேன்.
1 நாளாகமம் 17 : 13 (OCVTA)
நான் அவனுடைய தகப்பனாயிருப்பேன்; அவன் எனது மகனாயிருப்பான். உனக்குமுன் ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, நான் எனது அன்பை ஒருபோதும் அவனைவிட்டு அகற்றமாட்டேன்.
1 நாளாகமம் 17 : 14 (OCVTA)
நான் அவனை என் ஆலயத்திலும், என் அரசாட்சியிலும் என்றென்றைக்குமாக அமர்த்துவேன்; அவனுடைய அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.’ ”
1 நாளாகமம் 17 : 15 (OCVTA)
இவ்வாறு நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லா வெளிப்படுத்தலின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
1 நாளாகமம் 17 : 16 (OCVTA)
தாவீதின் மன்றாடல் அப்பொழுது தாவீது அரசன் உள்ளே போய், யெகோவாவுக்கு முன்னால் உட்கார்ந்து சொன்னதாவது: “யெகோவாவாகிய இறைவனே, இதுவரைக்கும் நீர் என்னை வழிநடத்துவதற்கு நான் யார்? எனது குடும்பத்திற்கு என்ன அருகதை உண்டு?
1 நாளாகமம் 17 : 17 (OCVTA)
இறைவனே, உமது பார்வையில் இதுவும் போதாதென்று அடியவனின் குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் பேசியிருக்கிறீர். யெகோவாவாகிய இறைவனே, எல்லா மனிதரிலும் மேன்மையுள்ளவனாக என்னைக் கணித்தீரே.
1 நாளாகமம் 17 : 18 (OCVTA)
“இவ்வாறு உமது அடியவனைக் கனப்படுத்தியதற்கு இதைவிட வேறு எதை தாவீது உமக்குச் சொல்வான்? உமது அடியவனைப்பற்றி உமக்கே தெரியும்.
1 நாளாகமம் 17 : 19 (OCVTA)
யெகோவாவே, உமது அடியவனுக்காக உமது திட்டத்தின்படி இப்பெரிய செயலைச் செய்து, இந்த எல்லா மேன்மையான வாக்குத்தத்தங்களையும் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
1 நாளாகமம் 17 : 20 (OCVTA)
“யெகோவாவே, நாங்கள் எங்கள் சொந்த காதுகளால் கேட்டவற்றின்படி உமக்கு இணையானவர் யாரும் இல்லை. உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை.
1 நாளாகமம் 17 : 21 (OCVTA)
உமது மக்களாகிய இஸ்ரயேலரைப்போல வேறு யாரும் உண்டோ? இறைவனாகிய நீர், பூமியில் உமக்காக மீட்டுக்கொண்ட இந்த நாட்டைப்போல், வேறு ஒரு நாடு உண்டோ? இந்த மக்களை உமக்கு உரியவர்களாகவும் உமக்கு பெயர் உண்டாகும்படியும் நீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தீர். உமது மக்களுக்கு முன்பாக பிற நாடுகளை வெளியே துரத்தி, ஆச்சரியமும் பயங்கரமுமான அதிசயங்களைச் செய்தீரே.
1 நாளாகமம் 17 : 22 (OCVTA)
நீர் உமது மக்களாகிய இஸ்ரயேலரை என்றென்றும் உமக்குச் சொந்த மக்களாக ஏற்படுத்தினீர். யெகோவாவே! நீரே அவர்களின் இறைவனானீர்.
1 நாளாகமம் 17 : 23 (OCVTA)
“இப்பொழுது யெகோவாவே, உம்முடைய அடியானையும், அவன் குடும்பத்தையும் குறித்து நீர் கொடுத்த வாக்குறுதி என்றென்றைக்கும் நிலைப்பதாக. நீர் வாக்களித்தபடியே செய்யும்.
1 நாளாகமம் 17 : 24 (OCVTA)
அதனால் அது உறுதிப்பட்டு, உமது பெயர் என்றென்றும் மேன்மை அடைந்திருக்கும். அப்பொழுது மனிதர்கள், ‘இஸ்ரயேலின்மேல் இறைவனாயிருக்கிற சேனைகளின் யெகோவாவே இஸ்ரயேலின் இறைவன்!’ என்று சொல்வார்கள். உமக்கு முன்பாக உமது அடியவனாகிய தாவீதின் குடும்பமும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்.
1 நாளாகமம் 17 : 25 (OCVTA)
“என் இறைவனே, நீரே உமது அடியவனாகிய என்னிடம் ஒரு வீட்டைக் கட்டுவதாக வெளிப்படுத்தினீர். எனவே உமது அடியவன் உம்மிடம் விண்ணப்பம் செய்ய துணிவு கிடைத்தது.
1 நாளாகமம் 17 : 26 (OCVTA)
யெகோவாவே, நீரே இறைவன். நீர் உமது அடியவனுக்கு இந்த நல்ல செயல்களை வாக்களிக்கிறீர்.
1 நாளாகமம் 17 : 27 (OCVTA)
இப்பொழுதும் உமது அடியவனின் குடும்பத்தை ஆசீர்வதிக்க நீர் விருப்பங்கொண்டீர். அதனால் உமது பார்வையில் அது தொடர்ந்து இருக்கும். யெகோவாவே இந்த வீட்டை நீர் ஆசீர்வதித்ததால், அது என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்” என தாவீது விண்ணப்பித்தான்.
❮
❯