1 நாளாகமம் 15 : 1 (OCVTA)
பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவருதல் அதன்பின் தாவீது தனக்கென தாவீதின் நகரத்திலே வீடுகளைக் கட்டினான், அதன்பின் அவன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தான்.
1 நாளாகமம் 15 : 2 (OCVTA)
பின்னர் தாவீது, “லேவியரைத்தவிர வேறு யாரும் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கக்கூடாது. ஏனெனில் யெகோவா தனது உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்காகவும், தனக்கு முன் எப்பொழுதும் பணி செய்தவற்காகவும் அவர்களையே தெரிந்தெடுத்திருக்கிறார்” எனச் சொன்னான்.
1 நாளாகமம் 15 : 3 (OCVTA)
தாவீது யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தான் ஆயத்தப்படுத்தியிருந்த இடத்திற்கு கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலர் எல்லோரையும் எருசலேமில் ஒன்றுகூட்டினான்.
1 நாளாகமம் 15 : 4 (OCVTA)
அத்துடன் தாவீது ஆரோனுடைய, லேவியருடைய சந்ததிகளையும் ஒன்றுகூடும்படி அழைத்தான்.
1 நாளாகமம் 15 : 5 (OCVTA)
கோகாத்தின் சந்ததிகளிலிருந்து ஊரியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 120 பேரும்;
1 நாளாகமம் 15 : 6 (OCVTA)
மெராரியின் சந்ததிகளில் இருந்து அசாயா என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 20 பேரும்;
1 நாளாகமம் 15 : 7 (OCVTA)
கெர்சோமின் சந்ததிகளிலிருந்து யோயேல் என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 130 பேரும்;
1 நாளாகமம் 15 : 8 (OCVTA)
எலிசாபானின் சந்ததிகளிலிருந்து செமாயா என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 200 பேரும்;
1 நாளாகமம் 15 : 9 (OCVTA)
எப்ரோனின் சந்ததிகளிலிருந்து எலியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 80 பேரும்;
1 நாளாகமம் 15 : 10 (OCVTA)
ஊசியேலின் சந்ததிகளிலிருந்து அம்மினதாப் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 122 பேரும் அங்கு அழைக்கப்பட்டனர்.
1 நாளாகமம் 15 : 11 (OCVTA)
பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோயேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்தான்.
1 நாளாகமம் 15 : 12 (OCVTA)
அவன் அவர்களிடம், “நீங்கள் லேவிய குடும்பங்களின் தலைவர்கள்; நீங்களும் உங்களுடன் ஒத்த மற்ற லேவியர்களும் உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை அதற்காக நான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவாருங்கள்.
1 நாளாகமம் 15 : 13 (OCVTA)
முதல்முறை லேவியராகிய நீங்கள் அதைக் கொண்டுவராததினால்தான், எங்கள் இறைவனாகிய யெகோவா தனது கோபத்தை நம்மேல் வரப்பண்ணினார். நாம் முறையான வழியில் எப்படிச் செய்வதென அவரிடம் விசாரியாது போனோம்” என்றான்.
1 நாளாகமம் 15 : 14 (OCVTA)
எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காகத் தங்களைத் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள்.
1 நாளாகமம் 15 : 15 (OCVTA)
லேவியர்கள் யெகோவாவின் வார்த்தைப்படி, மோசே கட்டளையிட்டவாறு இறைவனின் பெட்டியைத் தாங்கும் கம்புகளைத் தோளில் வைத்துப் பெட்டியைச் சுமந்து வந்தார்கள்.
1 நாளாகமம் 15 : 16 (OCVTA)
தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “உங்கள் சகோதரர்களை வீணை, யாழ், கைத்தாளங்களை இசைப்பதற்கும் மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவதற்கும் பாடகர்களாகவும் நியமியுங்கள்” என்றான்.
1 நாளாகமம் 15 : 17 (OCVTA)
அதன்படியே லேவியர்கள் யோயேலின் மகன் ஏமானையும், தன் சகோதரரிலிருந்து பெரகியாவின் மகன் ஆசாப்பையும், தங்கள் சகோதரரான மெராரியரிலிருந்து குஷாயாவின் மகன் ஏத்தானையும் நியமித்தார்கள்.
1 நாளாகமம் 15 : 18 (OCVTA)
அவர்களோடு அவர்களுடைய சகோதரர்களான சகரியா, யாசியேல், செமிராமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தத்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல் என்பவர்களை வரிசையில் வாசல் காவலர்களாக நிறுத்தினார்கள்.
1 நாளாகமம் 15 : 19 (OCVTA)
பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும் வெண்கல கைத்தாளங்களை இசைக்க நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 15 : 20 (OCVTA)
சகரியா, ஆசியேல், செமிராமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்ற இராகத்தில் யாழ் மீட்டார்கள்.
1 நாளாகமம் 15 : 21 (OCVTA)
மத்தத்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத் ஏதோம், ஏயேல், அசசியா என்பவர்கள், “செமனீத்” என்னும் இராகத்தில் யாழ் வாசிக்க நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 15 : 22 (OCVTA)
லேவியரின் தலைவனாயிருந்த கெனானியா பாடகர்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். அவன் மிகவும் தேர்ச்சி பெற்றவனாயிருந்தபடியினால், அவனுக்கு இந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
1 நாளாகமம் 15 : 23 (OCVTA)
பெரெகியாவும், எல்க்கானாவும் உடன்படிக்கைப்பெட்டி இருந்த கூடார வாசலைக் காவல்செய்ய நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 15 : 24 (OCVTA)
ஆசாரியர்களாகிய செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் இறைவனின் பெட்டிக்கு முன்னால் எக்காளம் ஊதுவதற்கென நியமிக்கப்பட்டார்கள். ஓபேத் ஏதோமும், எகியாவும்கூட உடன்படிக்கைப் பெட்டிக்கு வாசல் காவலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 15 : 25 (OCVTA)
அப்பொழுது தாவீதும், இஸ்ரயேலர்களின் தலைவர்களும், ஆயிரம்பேரின் தளபதிகளும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து கொண்டுவருவதற்காக மிக மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.
1 நாளாகமம் 15 : 26 (OCVTA)
யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துவந்த லேவியர்களுக்கு இறைவன் உதவியபடியால் அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் பலியிட்டனர்.
1 நாளாகமம் 15 : 27 (OCVTA)
தாவீதும் பெட்டியைச் சுமக்கும் எல்லா லேவியர்களும், பாடகர்களும், பாடகர் குழுவுக்குப் பொறுப்பான கெனனியாவும் மென்பட்டு மேலங்கியை உடுத்தியிருந்தனர். மெல்லிய நூலினால் நுட்பமாகச் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்தனர். அதோடு தாவீது நார்பட்டு ஏபோத்தையும் அணிந்திருந்தான்.
1 நாளாகமம் 15 : 28 (OCVTA)
இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை, கொம்பு வாத்தியங்களையும், எக்காளங்களையும் ஊதிக்கொண்டும், கைத்தாளங்களினால் ஒலி எழுப்பிக்கொண்டும், யாழையும் வீணையையும் மீட்டுக்கொண்டும் மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு கொண்டுவந்தார்கள்.
1 நாளாகமம் 15 : 29 (OCVTA)
யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரத்தினுள் வரும்போது, சவுலின் மகள் மீகாள் ஜன்னலின் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். தாவீது அரசன் நடனமாடி மகிழ்ச்சிக் களிப்புடன் வருவதைக் கண்டபோது அவனைத் தனது இருதயத்தில் இகழ்ந்தாள்.
❮
❯