நீதிமொழிகள் 5 : 1 (IRVTA)
விபசாரத்திற்கு எதிரான எச்சரிக்கை என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;
நீதிமொழிகள் 5 : 2 (IRVTA)
அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
நீதிமொழிகள் 5 : 3 (IRVTA)
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
நீதிமொழிகள் 5 : 4 (IRVTA)
அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
நீதிமொழிகள் 5 : 5 (IRVTA)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
நீதிமொழிகள் 5 : 6 (IRVTA)
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
நீதிமொழிகள் 5 : 7 (IRVTA)
ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
நீதிமொழிகள் 5 : 8 (IRVTA)
உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.
நீதிமொழிகள் 5 : 9 (IRVTA)
சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.
நீதிமொழிகள் 5 : 10 (IRVTA)
அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
நீதிமொழிகள் 5 : 11 (IRVTA)
முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
நீதிமொழிகள் 5 : 12 (IRVTA)
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!
நீதிமொழிகள் 5 : 13 (IRVTA)
என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
நீதிமொழிகள் 5 : 14 (IRVTA)
சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
நீதிமொழிகள் 5 : 15 (IRVTA)
உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
நீதிமொழிகள் 5 : 16 (IRVTA)
உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
நீதிமொழிகள் 5 : 17 (IRVTA)
அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
நீதிமொழிகள் 5 : 18 (IRVTA)
உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
நீதிமொழிகள் 5 : 19 (IRVTA)
அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
நீதிமொழிகள் 5 : 20 (IRVTA)
என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
நீதிமொழிகள் 5 : 21 (IRVTA)
மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
நீதிமொழிகள் 5 : 22 (IRVTA)
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
நீதிமொழிகள் 5 : 23 (IRVTA)
அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23