எண்ணாகமம் 11 : 1 (IRVTA)
பின்பு, இஸ்ரவேல் மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது யெகோவாவுடைய செவிகளில் தீமையாக இருந்தது; யெகோவா அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, முகாமின் கடைசியிலிருந்த சிலரை எரித்தது.
எண்ணாகமம் 11 : 2 (IRVTA)
அப்பொழுது மக்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; உடனே அக்கினி அணைந்துபோயிற்று.
எண்ணாகமம் 11 : 3 (IRVTA)
யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததால், அந்த இடத்திற்குத் தபேரா* எரிகிறது என்று பெயரிட்டான்.
எண்ணாகமம் 11 : 4 (IRVTA)
பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய மக்கள் மிகுந்த ஆசையுள்ளவர்களாக மாறினார்கள்; இஸ்ரவேல் மக்களும் திரும்ப அழுது, “நமக்கு இறைச்சியை சாப்பிடக்கொடுப்பவர் யார்?
எண்ணாகமம் 11 : 5 (IRVTA)
நாம் எகிப்திலே விலையில்லாமல் சாப்பிட்ட மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.
எண்ணாகமம் 11 : 6 (IRVTA)
இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே” என்று சொன்னார்கள்.
எண்ணாகமம் 11 : 7 (IRVTA)
அந்த மன்னா கொத்துமல்லி விதையளவும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது.
எண்ணாகமம் 11 : 8 (IRVTA)
மக்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டு வந்து, எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது.
எண்ணாகமம் 11 : 9 (IRVTA)
இரவிலே முகாமின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும்.
எண்ணாகமம் 11 : 10 (IRVTA)
அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; யெகோவாவுக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது தீமையாக இருந்தது.
எண்ணாகமம் 11 : 11 (IRVTA)
அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: நீர் இந்த மக்கள் எல்லோருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரச்செய்தது ஏன்? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைக்காமல் போனது ஏன்?
எண்ணாகமம் 11 : 12 (IRVTA)
இவர்களுடைய முன்னோர்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திற்கு நீ இவர்களை பால்குடிக்கிற குழந்தையைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன்னுடைய மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடு சொல்லும்படி இந்த மக்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
எண்ணாகமம் 11 : 13 (IRVTA)
இந்த மக்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
எண்ணாகமம் 11 : 14 (IRVTA)
இந்த மக்கள் எல்லோரையும் நான் ஒருவனாகத் தாங்கமுடியாது; எனக்கு இது மிஞ்சின பாரமாக இருக்கிறது.
எண்ணாகமம் 11 : 15 (IRVTA)
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என்னுடைய உபத்திரவத்தை நான் காணாதபடி இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்” என்று வேண்டிக்கொண்டான்.
எண்ணாகமம் 11 : 16 (IRVTA)
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களுக்கு மூப்பர்களும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக்கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடு வந்து நிற்கும்படிசெய்.
எண்ணாகமம் 11 : 17 (IRVTA)
அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடு பேசி, நீ ஒருவன் மட்டும் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடு அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
எண்ணாகமம் 11 : 18 (IRVTA)
நீ மக்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாக இருந்தது என்றும், யெகோவாவுடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி யெகோவா உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
எண்ணாகமம் 11 : 19 (IRVTA)
நீங்கள் ஒருநாள், இரண்டுநாட்கள், ஐந்துநாட்கள், பத்துநாட்கள், இருபதுநாட்கள் மட்டும் இல்லை,
எண்ணாகமம் 11 : 20 (IRVTA)
ஒரு மாதம்வரை சாப்பிடுவீர்கள்; அது உங்களுடைய மூக்கிலிருந்து புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகும்வரை சாப்பிடுவீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற யெகோவாவை அசட்டைசெய்து, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல்” என்றார்.
எண்ணாகமம் 11 : 21 (IRVTA)
அதற்கு மோசே: “என்னுடன் இருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் சாப்பிடும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
எண்ணாகமம் 11 : 22 (IRVTA)
ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்தின் மீன்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா” என்றான்.
எண்ணாகமம் 11 : 23 (IRVTA)
அதற்குக் யெகோவா மோசேயை நோக்கி: “யெகோவாவுடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்” என்றார்.
எண்ணாகமம் 11 : 24 (IRVTA)
அப்பொழுது மோசே புறப்பட்டு, யெகோவாவுடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
எண்ணாகமம் 11 : 25 (IRVTA)
யெகோவா மேகத்தில் இறங்கி, அவனோடு பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பர்களாகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினவுடன் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
எண்ணாகமம் 11 : 26 (IRVTA)
அப்பொழுது இரண்டு பேர் முகாமில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்திற்குப் போகப் புறப்படாமலிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், முகாமில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
எண்ணாகமம் 11 : 27 (IRVTA)
ஒரு பிள்ளை ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் முகாமில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
எண்ணாகமம் 11 : 28 (IRVTA)
உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபர்களில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் மகனுமாகிய யோசுவா மறுமொழியாக: “என்னுடைய ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைசெய்யும்” என்றான்.
எண்ணாகமம் 11 : 29 (IRVTA)
அதற்கு மோசே: “நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? யெகோவாவுடைய மக்கள் எல்லோரும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி, யெகோவா தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கச்செய்தால் நலமாக இருக்குமே என்றான்.
எண்ணாகமம் 11 : 30 (IRVTA)
பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் முகாமிலே வந்து சேர்ந்தார்கள்.
எண்ணாகமம் 11 : 31 (IRVTA)
அப்பொழுது யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, முகாமிலும் முகாமைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, அந்தப்பக்கம் ஒரு நாள் பயணம்வரை, தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
எண்ணாகமம் 11 : 32 (IRVTA)
அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.
எண்ணாகமம் 11 : 33 (IRVTA)
தங்களுடைய பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று சாப்பிடும்முன்னே யெகோவாவுடைய கோபம் மக்களுக்குள்ளே மூண்டது; யெகோவா மக்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
எண்ணாகமம் 11 : 34 (IRVTA)
ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா பேராசையின் இச்சையின் கல்லறை. என்று பெயரிட்டான்.
எண்ணாகமம் 11 : 35 (IRVTA)
பின்பு, மக்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்திற்குப் பயணம்செய்து, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35