நெகேமியா 6 : 1 (IRVTA)
கட்டுமானப் பணிக்கு மேலும் எதிர்ப்பு நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது,
நெகேமியா 6 : 2 (IRVTA)
நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாமலிருப்பதால், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குத் தீங்கு செய்ய நினைத்தார்கள்.
நெகேமியா 6 : 3 (IRVTA)
அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரமுடியாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருவதால் இந்த வேலை நின்றுவிடும் என்று சொல்லச்சொன்னேன்.
நெகேமியா 6 : 4 (IRVTA)
அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
நெகேமியா 6 : 5 (IRVTA)
ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.
நெகேமியா 6 : 6 (IRVTA)
அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,
நெகேமியா 6 : 7 (IRVTA)
யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.
நெகேமியா 6 : 8 (IRVTA)
அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
நெகேமியா 6 : 9 (IRVTA)
அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும்.
நெகேமியா 6 : 10 (IRVTA)
மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.
நெகேமியா 6 : 11 (IRVTA)
அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
நெகேமியா 6 : 12 (IRVTA)
தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.
நெகேமியா 6 : 13 (IRVTA)
நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள்.
நெகேமியா 6 : 14 (IRVTA)
என்னுடைய தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தகுந்ததாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்கு பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.
நெகேமியா 6 : 15 (IRVTA)
அப்படியே மதிலானது ஐம்பத்திரண்டு நாட்களுக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது.
நெகேமியா 6 : 16 (IRVTA)
கட்டி முடிக்கப்பட்ட மதிலுக்கு எதிர்ப்பு எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள்.
நெகேமியா 6 : 17 (IRVTA)
அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதர்களிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது.
நெகேமியா 6 : 18 (IRVTA)
அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.
நெகேமியா 6 : 19 (IRVTA)
அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என்னுடைய வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19