லேவியராகமம் 5 : 1 (IRVTA)
குற்றநிவாரணபலி “சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவிக்காமலிருந்து பாவம்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
லேவியராகமம் 5 : 2 (IRVTA)
அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இந்தவித அசுத்தமான யாதொரு பொருளையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.
லேவியராகமம் 5 : 3 (IRVTA)
அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
லேவியராகமம் 5 : 4 (IRVTA)
மனிதர்கள் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
லேவியராகமம் 5 : 5 (IRVTA)
இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன், தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,
லேவியராகமம் 5 : 6 (IRVTA)
தான் செய்த பாவத்திற்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
லேவியராகமம் 5 : 7 (IRVTA)
“ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்திற்காக இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
லேவியராகமம் 5 : 8 (IRVTA)
அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரணபலிக்குரியதை முதலில் செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்திலிருந்து கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
லேவியராகமம் 5 : 9 (IRVTA)
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.
லேவியராகமம் 5 : 10 (IRVTA)
மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாகச் செலுத்தக்கடவன்; இந்தவிதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
லேவியராகமம் 5 : 11 (IRVTA)
“இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்திற்காக ஒரு கிலோ அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரணபலியாக இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து,
லேவியராகமம் 5 : 12 (IRVTA)
அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் நன்றியின் அடையாளமான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.
லேவியராகமம் 5 : 13 (IRVTA)
இந்தவிதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்திற்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது உணவுபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
லேவியராகமம் 5 : 14 (IRVTA)
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
லேவியராகமம் 5 : 15 (IRVTA)
“ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம்செய்து, அறியாமையினால் பாவத்திற்குட்பட்டால், அவன் தன் குற்றத்திற்காக பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் மதிப்புள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,
லேவியராகமம் 5 : 16 (IRVTA)
பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த குற்றத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
லேவியராகமம் 5 : 17 (IRVTA)
“ஒருவன் செய்யத்தகாததென்று யெகோவாவுடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்திற்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாக இருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
லேவியராகமம் 5 : 18 (IRVTA)
அதினால் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பிற்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த குற்றத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
லேவியராகமம் 5 : 19 (IRVTA)
இது குற்றநிவாரணபலி; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19