லேவியராகமம் 20 : 1 (IRVTA)
சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை யெகோவா மோசேயை நோக்கி:
லேவியராகமம் 20 : 2 (IRVTA)
“பின்னும் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்; இஸ்ரவேல் மக்களிலும் இஸ்ரவேலில் குடியிருக்கிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகு தெய்வத்திற்கென்று கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் மக்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
லேவியராகமம் 20 : 3 (IRVTA)
அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படி, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போகச் செய்வேன்.
லேவியராகமம் 20 : 4 (IRVTA)
அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால்,
லேவியராகமம் 20 : 5 (IRVTA)
நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன்.
லேவியராகமம் 20 : 6 (IRVTA)
“ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகச் செய்வேன்.
லேவியராகமம் 20 : 7 (IRVTA)
ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராக இருங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
லேவியராகமம் 20 : 8 (IRVTA)
என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.
லேவியராகமம் 20 : 9 (IRVTA)
“தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
லேவியராகமம் 20 : 10 (IRVTA)
“ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
லேவியராகமம் 20 : 11 (IRVTA)
தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொள்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
லேவியராகமம் 20 : 12 (IRVTA)
ஒருவன் தன் மருமகளோடே உறவுகொண்டால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு செய்தார்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
லேவியராகமம் 20 : 13 (IRVTA)
ஒருவன் பெண்ணோடே உடலுறவு கொள்கிறதுபோல ஆணோடே உடலுறவுகொண்டால், அருவருப்பான காரியம் செய்த அந்த இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
லேவியராகமம் 20 : 14 (IRVTA)
ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் திருமணம் செய்தால், அது முறைகேடு; இந்தவித முறைகேடு உங்களுக்குள் இல்லாதபடி, அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்கவேண்டும்.
லேவியராகமம் 20 : 15 (IRVTA)
ஒருவன் மிருகத்தோடே உடலுறவுகொண்டால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
லேவியராகமம் 20 : 16 (IRVTA)
ஒரு பெண் யாதொரு மிருகத்தோடே சேர்ந்து உடலுறவுகொண்டால், அந்த பெண்ணையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இரு ஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
லேவியராகமம் 20 : 17 (IRVTA)
“ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது மகளாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
லேவியராகமம் 20 : 18 (IRVTA)
ஒருவன் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உடலுறவுகொண்டு, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய இரத்தப்போக்கைத் திறந்து, அவளும் தன் இரத்தப்போக்கை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகவேண்டும்.
லேவியராகமம் 20 : 19 (IRVTA)
உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காதே, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
லேவியராகமம் 20 : 20 (IRVTA)
ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், வாரிசு இல்லாமல் சாவார்கள்.
லேவியராகமம் 20 : 21 (IRVTA)
ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்தால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் வாரிசு இல்லாமலிருப்பார்கள்.
லேவியராகமம் 20 : 22 (IRVTA)
“ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களை வாந்திபண்ணாதபடி, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடங்கள்.
லேவியராகமம் 20 : 23 (IRVTA)
நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன்.
லேவியராகமம் 20 : 24 (IRVTA)
“நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற * செழிப்பான தேசம் அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.
லேவியராகமம் 20 : 25 (IRVTA)
ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்செய்து, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காமல் இருப்பீர்களாக.
லேவியராகமம் 20 : 26 (IRVTA)
யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு, உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
லேவியராகமம் 20 : 27 (IRVTA)
“ஜோதிடம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற ஆணாகிலும் பெண்ணாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக என்று சொல்” என்றார்.
❮
❯