புலம்பல் 1 : 1 (IRVTA)
எருசலேமின் துன்பம் 2 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் * எருசலேம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும், அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!
புலம்பல் 1 : 2 (IRVTA)
இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.
புலம்பல் 1 : 3 (IRVTA)
யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையமாட்டாள்; அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
புலம்பல் 1 : 4 (IRVTA)
பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
புலம்பல் 1 : 5 (IRVTA)
அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள், அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்; அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
புலம்பல் 1 : 6 (IRVTA)
சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
புலம்பல் 1 : 7 (IRVTA)
தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது, பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
புலம்பல் 1 : 8 (IRVTA)
எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்; ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்; அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்; அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
புலம்பல் 1 : 9 (IRVTA)
அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுபவர்கள் இல்லை; யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; பகைவன் பெருமைபாராட்டினானே.
புலம்பல் 1 : 10 (IRVTA)
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.
புலம்பல் 1 : 11 (IRVTA)
அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்; தங்களுடைய உயிரைக் காப்பாற்றத் தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; யெகோவாவே, நோக்கிப்பாரும்; நினைக்கப்படாதவளானேன்.
புலம்பல் 1 : 12 (IRVTA)
வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
புலம்பல் 1 : 13 (IRVTA)
உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
புலம்பல் 1 : 14 (IRVTA)
என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை இழக்கச்செய்தார்; நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
புலம்பல் 1 : 15 (IRVTA)
என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
புலம்பல் 1 : 16 (IRVTA)
இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
புலம்பல் 1 : 17 (IRVTA)
சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்; அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை; யெகோவா யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள்.
புலம்பல் 1 : 18 (IRVTA)
யெகோவா நீதிபரர்; அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
புலம்பல் 1 : 19 (IRVTA)
என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
புலம்பல் 1 : 20 (IRVTA)
யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
புலம்பல் 1 : 21 (IRVTA)
நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
புலம்பல் 1 : 22 (IRVTA)
அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும். என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22