யோசுவா 10 : 1 (IRVTA)
சூரியனை நிறுத்துதல் யோசுவா ஆயீயைப் பிடித்து, முழுவதும் அழித்து, எரிகோவிற்கும் அதின் ராஜாவிற்கும் செய்தபடி, ஆயீக்கும் அதின் ராஜாவிற்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து அவர்களுக்குள் குடியிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,
யோசுவா 10 : 2 (IRVTA)
கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயீயைவிட பெரியதுமாக இருந்தபடியினாலும், அதின் மனிதர்கள் எல்லோரும் பலசாலிகளாக இருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
யோசுவா 10 : 3 (IRVTA)
ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
யோசுவா 10 : 4 (IRVTA)
நாங்கள் கிபியோனைத் தாக்கும்படி, நீங்கள் என்னிடம் வந்து, எனக்கு உதவிசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் மக்களோடும் சமாதானம் செய்தார்கள் என்று சொல்லியனுப்பினான்.
யோசுவா 10 : 5 (IRVTA)
அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியர்களின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லா சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாக முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தார்கள்.
யோசுவா 10 : 6 (IRVTA)
அப்பொழுது கிபியோனின் மனிதர்கள் கில்காலில் இருக்கிற முகாமிற்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி: உமது அடியார்களைக் கைவிடாமல், சீக்கிரமாக எங்களிடம் வந்து, எங்களைக் காப்பாற்றி, எங்களுக்கு உதவிசெய்யும்; மலை தேசங்களிலே குடியிருக்கிற எமோரியர்களின் ராஜாக்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
யோசுவா 10 : 7 (IRVTA)
உடனே யோசுவாவும் அவனோடு எல்லா யுத்தமனிதர்களும், எல்லா பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள்.
யோசுவா 10 : 8 (IRVTA)
யெகோவா யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதே; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார்.
யோசுவா 10 : 9 (IRVTA)
யோசுவா கில்காலிலிருந்து இரவுமுழுவதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான்.
யோசுவா 10 : 10 (IRVTA)
யெகோவாவோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.
யோசுவா 10 : 11 (IRVTA)
அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கல்மழைகளை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
யோசுவா 10 : 12 (IRVTA)
யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான்.
யோசுவா 10 : 13 (IRVTA)
அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது.
யோசுவா 10 : 14 (IRVTA)
இப்படிக் யெகோவா ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
யோசுவா 10 : 15 (IRVTA)
பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.
யோசுவா 10 : 16 (IRVTA)
ஐந்து எமோரிய இராஜாக்கள் கொல்லப்படுதல் அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள்.
யோசுவா 10 : 17 (IRVTA)
ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது.
யோசுவா 10 : 18 (IRVTA)
அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள்.
யோசுவா 10 : 19 (IRVTA)
நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
யோசுவா 10 : 20 (IRVTA)
யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் அவர்களை மகா பயங்கரமாக அவர்கள் முழுவதும் அழியும்வரைக்கும் தாக்கினார்கள்; அவர்களில் மீதியானவர்கள் பாதுகாப்பான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
யோசுவா 10 : 21 (IRVTA)
மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
யோசுவா 10 : 22 (IRVTA)
அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
யோசுவா 10 : 23 (IRVTA)
அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
யோசுவா 10 : 24 (IRVTA)
அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
யோசுவா 10 : 25 (IRVTA)
அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான்.
யோசுவா 10 : 26 (IRVTA)
அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள்.
யோசுவா 10 : 27 (IRVTA)
சூரியன் மறைகிற நேரத்திலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையிலே அவர்களைப் போட்டு; இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் குகையின் வாயிலே அடைத்தார்கள்.
யோசுவா 10 : 28 (IRVTA)
அந்த நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயத்தினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனிதர்களையும் எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
யோசுவா 10 : 29 (IRVTA)
தென்திசைப் பட்டணங்கள் கைப்பற்றப்படுதல் மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான்.
யோசுவா 10 : 30 (IRVTA)
யெகோவா அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
யோசுவா 10 : 31 (IRVTA)
லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைவரோடும் லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தான்.
யோசுவா 10 : 32 (IRVTA)
யெகோவா லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் பட்டயத்தினால் அழித்தான்.
யோசுவா 10 : 33 (IRVTA)
அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான்.
யோசுவா 10 : 34 (IRVTA)
லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
யோசுவா 10 : 35 (IRVTA)
அதை அந்த நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்த நாளிலே அழித்துப்போட்டான்.
யோசுவா 10 : 36 (IRVTA)
பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவருமாக எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
யோசுவா 10 : 37 (IRVTA)
அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான்.
யோசுவா 10 : 38 (IRVTA)
பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்செய்து,
யோசுவா 10 : 39 (IRVTA)
அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
யோசுவா 10 : 40 (IRVTA)
இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்து,
யோசுவா 10 : 41 (IRVTA)
காதேஸ்பர்னேயா துவங்கிக் காசாவரை இருக்கிறதையும் கிபியோன்வரை இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
யோசுவா 10 : 42 (IRVTA)
அந்த ராஜாக்கள் எல்லோரையும் அவர்களுடைய தேசத்தையும் யோசுவா ஒரே சமயத்தில் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
யோசுவா 10 : 43 (IRVTA)
பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43