எரேமியா 50 : 1 (IRVTA)
பாபிலோனைக்குறித்த செய்தி யெகோவா தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்திற்கும் விரோதமாகச் சொன்ன வசனம்:
எரேமியா 50 : 2 (IRVTA)
பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் வெட்கமடைந்தது; அதினுடைய சிலைகள் நொறுங்கிப்போயின என்று மக்களுக்குள்ளே அறிவித்துப் பிரபலப்படுத்துங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்செய்யுங்கள்.
எரேமியா 50 : 3 (IRVTA)
அதற்கு விரோதமாக வடக்கிலிருந்து ஒரு தேசம் வந்து, அந்த தேசத்தை அழித்துப்போடும்; அதில் குடியிருப்பவரில்லை; மனிதருடன் மிருகங்களும் ஓடிப்போய்விடும்.
எரேமியா 50 : 4 (IRVTA)
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் மக்கள் வருவார்கள்; அவர்களும் யூதா மக்களும் ஏகமாக அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 50 : 5 (IRVTA)
மறக்கமுடியாத நிலையான உடன்படிக்கையினால் நாம் யெகோவாவைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராக முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
எரேமியா 50 : 6 (IRVTA)
என் மக்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறச்செய்து, மலைகளில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்.
எரேமியா 50 : 7 (IRVTA)
அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லோரும் அவர்களைத் தாக்கினார்கள்; அவர்களுடைய எதிரிகள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதி தங்குமிடத்தில் யெகோவாவுக்கு விரோதமாக, தங்கள் முற்பிதாக்கள் நம்பின யெகோவாவுக்கு விரோதமாகவே, பாவம் செய்தார்கள் என்றார்கள்.
எரேமியா 50 : 8 (IRVTA)
பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல இருங்கள்.
எரேமியா 50 : 9 (IRVTA)
இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய மக்கள் கூட்டத்தை எழுப்பி, அதை வரச்செய்வேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்செய்வார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் வீணாகத் திரும்புவதில்லை.
எரேமியா 50 : 10 (IRVTA)
கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லோரும் பரிபூரணமடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 50 : 11 (IRVTA)
தெரிந்தக்கொண்ட என் ஜனத்தை கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே. புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலிமையான எருதுகளைப்போல முழக்கம் போடுகிறீர்களே.
எரேமியா 50 : 12 (IRVTA)
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் மக்களுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்திரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
எரேமியா 50 : 13 (IRVTA)
யெகோவாவின் கோபத்தினால் அது குடியற்றதும் பெரும் பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, நடுங்குவான்.
எரேமியா 50 : 14 (IRVTA)
நீங்கள் எல்லோரும் பாபிலோனுக்கு விரோதமாகச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பார்க்காதீர்கள்; அது, யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.
எரேமியா 50 : 15 (IRVTA)
அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது யெகோவா வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
எரேமியா 50 : 16 (IRVTA)
விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்செய்யுங்கள்; கொல்லுகிற பட்டயத்திற்குத் தப்ப அவரவர் தங்கள் மக்களிடத்திற்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்திற்கு ஓடிப்போவார்கள்.
எரேமியா 50 : 17 (IRVTA)
இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்ட ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
எரேமியா 50 : 18 (IRVTA)
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவைத் தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
எரேமியா 50 : 19 (IRVTA)
இஸ்ரவேலை அதின் இடத்திற்குத் திரும்பிவரச்செய்வேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
எரேமியா 50 : 20 (IRVTA)
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடைக்காதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 50 : 21 (IRVTA)
மெரதாயீம் தேசத்திற்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்செய்து, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 50 : 22 (IRVTA)
தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
எரேமியா 50 : 23 (IRVTA)
சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! மக்களுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போனது!
எரேமியா 50 : 24 (IRVTA)
பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதில் சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ யெகோவாவுடன் போரிட்டாயே.
எரேமியா 50 : 25 (IRVTA)
யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய கோபத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்தில் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற செயல்.
எரேமியா 50 : 26 (IRVTA)
கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
எரேமியா 50 : 27 (IRVTA)
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேருவதாக; ஐயோ, அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
எரேமியா 50 : 28 (IRVTA)
நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனில் அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.
எரேமியா 50 : 29 (IRVTA)
பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் முகாமிடுங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் செயலுக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு விரோதமாக இடும்பு செய்தது.
எரேமியா 50 : 30 (IRVTA)
ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் போர்வீரர் எல்லோரும் அந்நாளில் சங்காரமாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 50 : 31 (IRVTA)
இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
எரேமியா 50 : 32 (IRVTA)
பெருமையுள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் நெருப்பைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லோரையும் பட்சிக்கும்.
எரேமியா 50 : 33 (IRVTA)
சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் ஏகமாக ஒடுக்கப்பட்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின அனைவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
எரேமியா 50 : 34 (IRVTA)
அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்; தேசத்தை இளைப்பாறச்செய்வதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கச்செய்வதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
எரேமியா 50 : 35 (IRVTA)
பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று யெகோவா சொல்லுகிறார்.
எரேமியா 50 : 36 (IRVTA)
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
எரேமியா 50 : 37 (IRVTA)
பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலதேசத்தின் மக்கள் அனைவர்மேலும் வரும், அவர்கள் தைரியமற்றவர்களாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
எரேமியா 50 : 38 (IRVTA)
வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோகும்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
எரேமியா 50 : 39 (IRVTA)
ஆகையால் காட்டுமிருகங்களும் நரிகளும் அதில் குடியிருக்கும்; தீக்கோழிகள் அதில் தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் குடியிருப்பதுமில்லை.
எரேமியா 50 : 40 (IRVTA)
தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
எரேமியா 50 : 41 (IRVTA)
இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
எரேமியா 50 : 42 (IRVTA)
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
எரேமியா 50 : 43 (IRVTA)
அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்கு உண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
எரேமியா 50 : 44 (IRVTA)
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தங்குமிடத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியில் ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டம்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
எரேமியா 50 : 45 (IRVTA)
ஆகையால் யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்திற்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்களுடைய தங்குமிடங்களை அவர் பாழாக்குவார்.
எரேமியா 50 : 46 (IRVTA)
பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் மக்களுக்குள்ளே கேட்கப்படும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46