ஏசாயா 19 : 1 (IRVTA)
எகிப்தைக் குறித்த தீர்க்கதரிசனம் எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.
ஏசாயா 19 : 2 (IRVTA)
சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன்.
ஏசாயா 19 : 3 (IRVTA)
அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை அழிந்துபோகச்செய்வேன்; அப்பொழுது சிலைகளையும், மந்திரவாதிகளையும், இறந்தவர்களிடம் பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும் தேடுவார்கள்.
ஏசாயா 19 : 4 (IRVTA)
நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கொடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்.
ஏசாயா 19 : 5 (IRVTA)
அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும்.
ஏசாயா 19 : 6 (IRVTA)
ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; பாதுகாப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கோரையும் நாணலும் வாடும்.
ஏசாயா 19 : 7 (IRVTA)
நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற இலையுள்ள செடிகளும், நதியருகில் விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாமல்போகும்.
ஏசாயா 19 : 8 (IRVTA)
மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற அனைவரும் துக்கப்படுவார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.
ஏசாயா 19 : 9 (IRVTA)
மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், மெல்லிய ஆடைகளை நெய்கிறவர்களும் வெட்கப்படுவார்கள்.
ஏசாயா 19 : 10 (IRVTA)
மீன் வளர்க்கிற குளங்களுக்கு கூலிக்கு அணை கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும்.
ஏசாயா 19 : 11 (IRVTA)
சோவான் பட்டணத்தின் பிரபுக்களாக இருப்பவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமானது: நான் ஞானிகளின் மகன், நான் முந்தின ராஜாக்களின் மகன் என்று பார்வோனிடம் எப்படிச் சொல்கிறீர்கள்?
ஏசாயா 19 : 12 (IRVTA)
அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்தைக்குறித்துச்செய்த யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.
ஏசாயா 19 : 13 (IRVTA)
சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பு பட்டணத்தின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பச்செய்கிறார்கள்.
ஏசாயா 19 : 14 (IRVTA)
யெகோவா அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரச்செய்தார்; குடிவெறியன் வாந்தியெடுத்து, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியச்செய்கிறார்கள்.
ஏசாயா 19 : 15 (IRVTA)
எகிப்தில் தலையாகிலும், வாலாகிலும், கிளையாகிலும், நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது.
ஏசாயா 19 : 16 (IRVTA)
அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள்.
ஏசாயா 19 : 17 (IRVTA)
சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாக தீர்மானித்துக்கொண்ட ஆலோசனையினால் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் அதிர்ச்சியடைவான்.
ஏசாயா 19 : 18 (IRVTA)
அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, சேனைகளின் யெகோவாவை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று அழிக்கப்பட்ட பட்டணம் என்னப்படும்.
ஏசாயா 19 : 19 (IRVTA)
அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே யெகோவாவுக்கு ஒரு தூணும் உண்டாயிருக்கும்.
ஏசாயா 19 : 20 (IRVTA)
அது எகிப்துதேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினால் அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.
ஏசாயா 19 : 21 (IRVTA)
அப்பொழுது யெகோவா எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர்கள் யெகோவாவை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும், காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து அவைகளைச் செலுத்துவார்கள்.
ஏசாயா 19 : 22 (IRVTA)
யெகோவா எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.
ஏசாயா 19 : 23 (IRVTA)
அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர்கள் எகிப்திற்கும், எகிப்தியர்கள் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர்கள் அசீரியருடன் ஆராதனை செய்வார்கள்.
ஏசாயா 19 : 24 (IRVTA)
அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
ஏசாயா 19 : 25 (IRVTA)
அவர்களைக்குறித்துச் சேனைகளின் யெகோவா: எகிப்தியராகிய என் மக்களும், அசீரியராகிய என் கரத்தின் செயலும், இஸ்ரவேலராகிய என் சொத்தும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25