ஆதியாகமம் 30 : 1 (IRVTA)
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.
ஆதியாகமம் 30 : 2 (IRVTA)
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: “தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?” என்றான்.
ஆதியாகமம் 30 : 3 (IRVTA)
அப்பொழுது அவள்: “இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்” என்று சொல்லி,
ஆதியாகமம் 30 : 4 (IRVTA)
அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
ஆதியாகமம் 30 : 5 (IRVTA)
பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 6 (IRVTA)
அப்பொழுது ராகேல்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 7 (IRVTA)
மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 8 (IRVTA)
அப்பொழுது ராகேல்: “நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 9 (IRVTA)
லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 10 (IRVTA)
லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 11 (IRVTA)
அப்பொழுது லேயாள்: “ஏராளமாகிறதென்று” சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 12 (IRVTA)
பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 13 (IRVTA)
அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 14 (IRVTA)
கோதுமை அறுப்பு நாட்களில் ரூபன் வயல்வெளிக்குப் போய், தூதாயீம்* வாசனை உள்ளது/ கர்ப்பம் தரிக்ககூடியது பழங்களைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: “உன் மகனுடைய தூதாயீம் பழத்தில் எனக்குக் கொஞ்சம் தா” என்றாள்.
ஆதியாகமம் 30 : 15 (IRVTA)
அதற்கு அவள்: “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது சாதாரணகாரியமா? என் மகனுடைய தூதாயீம் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்;” அதற்கு ராகேல்: “உன் மகனுடைய தூதாயீம் பழங்களுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடு உறவுகொள்ளட்டும்” என்றாள்.
ஆதியாகமம் 30 : 16 (IRVTA)
மாலையில் யாக்கோபு வெளியிலிருந்து வரும்போது லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: “என் மகனுடைய தூதாயீம் பழங்களால் உம்மை வாங்கினேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும்” என்றாள்; அவன் அன்று இரவு அவளோடு உறவுகொண்டான்.
ஆதியாகமம் 30 : 17 (IRVTA)
தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 18 (IRVTA)
அப்பொழுது லேயாள்: “நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 19 (IRVTA)
மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 30 : 20 (IRVTA)
அப்பொழுது லேயாள்: “தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார்” என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன்† கணம் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 21 (IRVTA)
பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 22 (IRVTA)
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார்.
ஆதியாகமம் 30 : 23 (IRVTA)
அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
ஆதியாகமம் 30 : 24 (IRVTA)
இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30 : 25 (IRVTA)
யாக்கோபின் மந்தை பெருகுதல் ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: “நான் என் வீட்டிற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.
ஆதியாகமம் 30 : 26 (IRVTA)
நான் உமக்கு வேலைசெய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் வேலை செய்த விதத்தை நீர் அறிந்திருக்கிறீர்” என்றான்.
ஆதியாகமம் 30 : 27 (IRVTA)
அப்பொழுது லாபான்: “உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னால் யெகோவா என்னை ஆசீர்வதித்தார் என்று அனுபவத்தில் அறிந்தேன்.
ஆதியாகமம் 30 : 28 (IRVTA)
உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்” என்றான்.
ஆதியாகமம் 30 : 29 (IRVTA)
அதற்கு அவன்: “நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.
ஆதியாகமம் 30 : 30 (IRVTA)
நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் யெகோவா உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்திற்குச் சம்பாதிப்பது எப்பொழுது” என்றான்.
ஆதியாகமம் 30 : 31 (IRVTA)
அதற்கு அவன்: “நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: “நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.
ஆதியாகமம் 30 : 32 (IRVTA)
நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
ஆதியாகமம் 30 : 33 (IRVTA)
அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என்னிடத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடப்பட்டவைகளாக எண்ணப்படட்டும்” என்றான்.
ஆதியாகமம் 30 : 34 (IRVTA)
அதற்கு லாபான்: “நீ சொன்னபடியே ஆகட்டும்” என்று சொல்லி,
ஆதியாகமம் 30 : 35 (IRVTA)
அந்த நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் அனைத்தையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் அனைத்தையும் பிரித்து, தன் மகன்களிடத்தில் ஒப்புவித்து,
ஆதியாகமம் 30 : 36 (IRVTA)
தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
ஆதியாகமம் 30 : 37 (IRVTA)
பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து,
ஆதியாகமம் 30 : 38 (IRVTA)
தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு.
ஆதியாகமம் 30 : 39 (IRVTA)
ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
ஆதியாகமம் 30 : 40 (IRVTA)
அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் முன்பாக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையுடன் சேர்க்காமல், தனியாக வைத்துக்கொள்வான்.
ஆதியாகமம் 30 : 41 (IRVTA)
பலத்த ஆடுகள் சினையாகும்போது, அந்தக் கிளைகளுக்கு முன்பாக சினையாகும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
ஆதியாகமம் 30 : 42 (IRVTA)
பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
ஆதியாகமம் 30 : 43 (IRVTA)
இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.
❮
❯