ஆதியாகமம் 23 : 1 (IRVTA)
சாராளின் மரணம் சாராள் 127 வருடங்கள் உயிரோடிருந்தாள்; சாராளுடைய வயது இவ்வளவுதான்.
ஆதியாகமம் 23 : 2 (IRVTA)
கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் இறந்தாள்; அப்பொழுது ஆபிரகாம், சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
ஆதியாகமம் 23 : 3 (IRVTA)
பின்பு ஆபிரகாம், இறந்த உடல் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் வம்சத்தாருடன் பேசி:
ஆதியாகமம் 23 : 4 (IRVTA)
“நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாக இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்த இறந்த உடலை நான் அடக்கம்செய்வதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைநிலத்தைத் தரவேண்டும்” என்றான்.
ஆதியாகமம் 23 : 5 (IRVTA)
அதற்கு ஏத்தின் வம்சத்தார் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
ஆதியாகமம் 23 : 6 (IRVTA)
“எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம் செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை” என்றார்கள்.
ஆதியாகமம் 23 : 7 (IRVTA)
அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் வம்சத்தாராகிய அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,
ஆதியாகமம் 23 : 8 (IRVTA)
அவர்களோடு பேசி: “என்னிடத்திலிருக்கிற உடலை அடக்கம்செய்ய உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய மகனாகிய எப்பெரோன்,
ஆதியாகமம் 23 : 9 (IRVTA)
தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா எனப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறை நிலமாகத் தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அதற்குரிய விலைக்கு அவர் அதைத் தரட்டும்” என்றான்.
ஆதியாகமம் 23 : 10 (IRVTA)
எப்பெரோன் ஏத்தின் வம்சத்தார் மத்தியில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனான எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் வம்சத்தார் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
ஆதியாகமம் 23 : 11 (IRVTA)
“அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குக் கொடுக்கிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குக் கொடுக்கிறேன், என் இனத்தாரின் முன்னிலையில் அதை உமக்குக் கொடுக்கிறேன், உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான்.
ஆதியாகமம் 23 : 12 (IRVTA)
அப்பொழுது ஆபிரகாம் அந்தத் தேசத்தாருக்கு வணக்கம் சொல்லி,
ஆதியாகமம் 23 : 13 (IRVTA)
தேசத்து மக்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: “கொடுப்பதற்கு உமக்கு மனதிருந்தால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற உடலை அந்த இடத்தில் அடக்கம் செய்வேன்” என்றான்.
ஆதியாகமம் 23 : 14 (IRVTA)
அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:
ஆதியாகமம் 23 : 15 (IRVTA)
“என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலத்தின் விலை நானூறு சேக்கல் நிறை வெள்ளி;* 7,568.00 ரூபாய்கள் எனக்கும் உமக்கும் அது சாதாரண காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற உடலை அடக்கம் செய்யும்” என்றான்.
ஆதியாகமம் 23 : 16 (IRVTA)
அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் வம்சத்தாரின் முன்னிலையில் எப்பெரோன் சொன்னபடியே, வியாபாரிகளிடத்தில் செல்லும்படியான 400 சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தான்.
ஆதியாகமம் 23 : 17 (IRVTA)
இந்த விதமாக மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்த இடமும், அதிலுள்ள குகையும், நிலத்திலுள்ள அனைத்து மரங்களும்,
ஆதியாகமம் 23 : 18 (IRVTA)
அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் வம்சத்தினர் அனைவரின் முன்னிலையிலும் ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஆதியாகமம் 23 : 19 (IRVTA)
அதற்குப்பின்பு ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான் தேசத்தில் எப்ரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்செய்தான்.
ஆதியாகமம் 23 : 20 (IRVTA)
இப்படி ஏத்தின் வம்சத்தாரிடமிருந்து வாங்கப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20