ஆதியாகமம் 21 : 1 (IRVTA)
ஈசாக்கின் பிறப்பு யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
ஆதியாகமம் 21 : 2 (IRVTA)
ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆதியாகமம் 21 : 3 (IRVTA)
அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.
ஆதியாகமம் 21 : 4 (IRVTA)
தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான்.
ஆதியாகமம் 21 : 5 (IRVTA)
தன் மகனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் 100 வயதாயிருந்தான்.
ஆதியாகமம் 21 : 6 (IRVTA)
அப்பொழுது சாராள்: “தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.”
ஆதியாகமம் 21 : 7 (IRVTA)
“சாராள் குழந்தைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள்.
ஆதியாகமம் 21 : 8 (IRVTA)
ஆகாரும் இஸ்மவேலும் வெளியேற்றப்படுதல் குழந்தை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து செய்தான்.
ஆதியாகமம் 21 : 9 (IRVTA)
பின்பு எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் கேலி செய்கிறதை சாராள் கண்டு,
ஆதியாகமம் 21 : 10 (IRVTA)
ஆபிரகாமை நோக்கி: “இந்த அடிமைப்பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகனாகிய ஈசாக்கோடு வாரிசாக இருப்பதில்லை” என்றாள்.
ஆதியாகமம் 21 : 11 (IRVTA)
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது.
ஆதியாகமம் 21 : 12 (IRVTA)
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: “அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
ஆதியாகமம் 21 : 13 (IRVTA)
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன்” என்றார்.
ஆதியாகமம் 21 : 14 (IRVTA)
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள்.
ஆதியாகமம் 21 : 15 (IRVTA)
தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு,
ஆதியாகமம் 21 : 16 (IRVTA)
“சிறுவன் தாகத்தினால் சாகிறதை நான் பார்க்கமாட்டேன்” என்று, அவனைவிட்டு அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
ஆதியாகமம் 21 : 17 (IRVTA)
தேவன் சிறுவனின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, சிறுவன் இருக்கும் இடத்தில் தேவன் அவனுடைய சத்தத்தைக் கேட்டார்.
ஆதியாகமம் 21 : 18 (IRVTA)
நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 21 : 19 (IRVTA)
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 21 : 20 (IRVTA)
தேவன் சிறுவனுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்திரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான்.
ஆதியாகமம் 21 : 21 (IRVTA)
அவன் பாரான் வனாந்திரத்திலே குடியிருக்கும்போது, அவனுடைய தாய் எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்துவைத்தாள்.
ஆதியாகமம் 21 : 22 (IRVTA)
பெயர்செபாவில் ஒப்பந்தம் அந்தகாலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
ஆதியாகமம் 21 : 23 (IRVTA)
ஆகையால், நீ எனக்காவது, என் மகனுக்காவது, பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்.
ஆதியாகமம் 21 : 24 (IRVTA)
அதற்கு ஆபிரகாம்: “நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன்” என்றான்.
ஆதியாகமம் 21 : 25 (IRVTA)
ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.
ஆதியாகமம் 21 : 26 (IRVTA)
அதற்கு அபிமெலேக்கு: “இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்குத் தெரிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதைத்தவிர, இதற்குமுன் அதை நான் கேள்விப்படவே இல்லை” என்றான்.
ஆதியாகமம் 21 : 27 (IRVTA)
அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.
ஆதியாகமம் 21 : 28 (IRVTA)
ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.
ஆதியாகமம் 21 : 29 (IRVTA)
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு?” என்று கேட்டான்.
ஆதியாகமம் 21 : 30 (IRVTA)
அதற்கு அவன்: “நான் இந்தக் கிணறு தோண்டியதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான்.
ஆதியாகமம் 21 : 31 (IRVTA)
அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா* உடன்படிக்கையின் கிணறு எனப்பட்டது.
ஆதியாகமம் 21 : 32 (IRVTA)
அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்துகொண்டபின்பு அபிமெலேக்கும், அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
ஆதியாகமம் 21 : 33 (IRVTA)
ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான்.
ஆதியாகமம் 21 : 34 (IRVTA)
ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.
❮
❯