எசேக்கியேல் 32 : 1 (IRVTA)
பார்வோனுக்கான புலம்பல் பாபிலோனின் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 32 : 2 (IRVTA)
மனிதகுமாரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: தேசங்களுக்குள்ளே நீ பாலசிங்கத்திற்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன்னுடைய நதிகளில் எழும்பி, உன்னுடைய கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.
எசேக்கியேல் 32 : 3 (IRVTA)
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு மக்கள் கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என்னுடைய வலையை வீசுவேன்; அவர்கள் என்னுடைய வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.
எசேக்கியேல் 32 : 4 (IRVTA)
உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கச்செய்து, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,
எசேக்கியேல் 32 : 5 (IRVTA)
உன்னுடைய சதையை மலைகளின்மேல் போட்டு, உன்னுடைய உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,
எசேக்கியேல் 32 : 6 (IRVTA)
நீ நீந்தின தேசத்தின்மேல் உன்னுடைய இரத்தத்தை மலைகள்வரைப் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.
எசேக்கியேல் 32 : 7 (IRVTA)
உன்னை நான் அணைத்துப்போடும்போது, வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகச்செய்வேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்காமல் இருக்கும்.
எசேக்கியேல் 32 : 8 (IRVTA)
நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகச்செய்து, உன்னுடைய தேசத்தின்மேல் இருளை வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 32 : 9 (IRVTA)
உன்னுடைய அழிவை தேசங்கள் வரை, நீ அறியாத தேசங்கள்வரை நான் எட்டச்செய்யும்போது, அநேகம் மக்களின் இருதயத்தை கலக்கமடையச் செய்வேன்.
எசேக்கியேல் 32 : 10 (IRVTA)
அநேகம் மக்களை உனக்காக திகைக்கச்செய்வேன்; அவர்களின் ராஜாக்கள், தங்களுடைய முகங்களுக்கு முன்பாக என்னுடைய வாளை நான் வீசும்போது மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் தத்தளிப்பார்கள்.
எசேக்கியேல் 32 : 11 (IRVTA)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் வாள் உன்மேல் வரும்.
எசேக்கியேல் 32 : 12 (IRVTA)
பராக்கிரமசாலிகளின் வாள்களால் உன்னுடைய மக்கள்கூட்டத்தை விழச்செய்வேன்; அவர்கள் எல்லோரும் தேசங்களில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.
எசேக்கியேல் 32 : 13 (IRVTA)
திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகங்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனிதனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.
எசேக்கியேல் 32 : 14 (IRVTA)
அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியச்செய்து, அவர்களுடைய ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 32 : 15 (IRVTA)
நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன்னுடைய நிறைவை இழந்து வெறுமையாகக் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் அழிக்கும்போதும், நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 32 : 16 (IRVTA)
இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி தேசத்தின் மகள்கள் புலம்புவார்கள்; இப்படி எகிப்திற்காகவும், அதினுடைய எல்லாத் திரளான மக்களுக்காகவும் புலம்புவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 32 : 17 (IRVTA)
பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 32 : 18 (IRVTA)
மனிதகுமாரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான மக்களுக்காக புலம்பி, அவர்களையும் பிரபலமான தேசத்தின் மகள்களையும் குழியில் இறங்கினவர்கள் அருகிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.
எசேக்கியேல் 32 : 19 (IRVTA)
மற்றவர்களைவிட நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்தில் இரு.
எசேக்கியேல் 32 : 20 (IRVTA)
அவர்களுடைய வாளால் வெட்டுப்பட்டவர்களின் நடுவிலே விழுவார்கள், வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய மக்கள்கூட்டம் யாவையும் பிடித்திழுங்கள்.
எசேக்கியேல் 32 : 21 (IRVTA)
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள்.
எசேக்கியேல் 32 : 22 (IRVTA)
அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
எசேக்கியேல் 32 : 23 (IRVTA)
பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.
எசேக்கியேல் 32 : 24 (IRVTA)
அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.
எசேக்கியேல் 32 : 25 (IRVTA)
வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான மக்களுக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டப்பட்ட விருத்தசேதனம் இல்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டப்பட்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.
எசேக்கியேல் 32 : 26 (IRVTA)
அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய உயிருள்ளோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்களெல்லோரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள்; வாளால் வெட்ட்டப்பட்டு விழுவார்கள்.
எசேக்கியேல் 32 : 27 (IRVTA)
உயிருள்ளோருடைய தேசத்திலே பலசாலிகளுக்குக் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தும், அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக விழுந்து, தங்களுடைய போர் ஆயுதங்களுடன் பாதாளத்தில் இறங்கின பலசாலிகளுடன் இவர்கள் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாள்களைத் தங்களுடைய தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்களுடைய எலும்புகளின்மேல் இருக்கும்.
எசேக்கியேல் 32 : 28 (IRVTA)
நீயும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் இருப்பாய்.
எசேக்கியேல் 32 : 29 (IRVTA)
அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; வாளால் வெட்டப்பட்டவர்களிடத்தில் இவர்கள் தங்களுடைய வல்லமையுடன் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் இருக்கிறார்கள்.
எசேக்கியேல் 32 : 30 (IRVTA)
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
எசேக்கியேல் 32 : 31 (IRVTA)
பார்வோன் அவர்களைப் பார்த்து தன்னுடைய ஏராளமான மக்களின்பேரிலும் ஆறுதலடைவான்; வாளால் வெட்டப்பட்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 32 : 32 (IRVTA)
என்னைப்பற்றிய பயத்தை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டாக்குகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான மக்களும் வாளால் வெட்டுபட்டவர்களிடத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32