எசேக்கியேல் 28 : 1 (IRVTA)
தீருவின் ராஜாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
எசேக்கியேல் 28 : 2 (IRVTA)
மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல.
எசேக்கியேல் 28 : 3 (IRVTA)
இதோ, தானியேலைவிட நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.
எசேக்கியேல் 28 : 4 (IRVTA)
நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய்.
எசேக்கியேல் 28 : 5 (IRVTA)
உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது.
எசேக்கியேல் 28 : 6 (IRVTA)
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்,
எசேக்கியேல் 28 : 7 (IRVTA)
இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள்.
எசேக்கியேல் 28 : 8 (IRVTA)
உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ கடலின் நடுவே கொலை செய்யப்பட்டு மரணமடைகிறவர்கள்போல் மரணமடைவாய்.
எசேக்கியேல் 28 : 9 (IRVTA)
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனிதனேயல்லாமல் தேவனல்லவே.
எசேக்கியேல் 28 : 10 (IRVTA)
மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் மரணமடைகிறதுபோல மரிப்பாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 28 : 11 (IRVTA)
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 28 : 12 (IRVTA)
மனிதகுமாரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீ கடவுளின் சாயலில் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
எசேக்கியேல் 28 : 13 (IRVTA)
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான எல்லாவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ உருவாக்கப்பட்ட நாளில் உன்னுடைய மேளவாத்தியங்களும் உன்னுடைய நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 28 : 14 (IRVTA)
நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்செய்யப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; நெருப்புபோன்ற கற்களின் நடுவே உலாவினாய்.
எசேக்கியேல் 28 : 15 (IRVTA)
நீ உருவாக்கப்பட்ட நாள் முதல் உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுவரை, உன்னுடைய வழிகளில் குறையில்லாமல் இருந்தாய்.
எசேக்கியேல் 28 : 16 (IRVTA)
உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், உன்னுடைய கொடுமை அதிகரித்து நீ பாவம்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய மலையிலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாக இருந்த உன்னை நெருப்புபோன்ற கற்களின் நடுவே இல்லாமல் அழித்துப்போடுவேன்.
எசேக்கியேல் 28 : 17 (IRVTA)
உன்னுடைய அழகினால் உன்னுடைய இருதயம் மேட்டிமையானது; உன்னுடைய மாட்சிமையினால் உன்னுடைய ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்ப்பதற்காக உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
எசேக்கியேல் 28 : 18 (IRVTA)
உன்னுடைய அக்கிரமங்களின் மிகுதியினாலும், உன்னுடைய வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன்னுடைய பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைச் சுட்டெரிப்பதற்காக ஒரு நெருப்பை நான் உன் நடுவிலிருந்து புறப்படச்செய்து, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
எசேக்கியேல் 28 : 19 (IRVTA)
மக்களில் உன்னை அறிந்த அனைவரும் உனக்காக திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 28 : 20 (IRVTA)
பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 28 : 21 (IRVTA)
மனிதகுமாரனே, நீ உன்னுடைய முகத்தைச் சீதோனுக்கு முன்பாக திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
எசேக்கியேல் 28 : 22 (IRVTA)
யெகோவாகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 28 : 23 (IRVTA)
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரச்செய்வேன்; அதற்கு விரோதமாகச் சுற்றிலும் வந்த வாளினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டப்பட்டு விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 28 : 24 (IRVTA)
இஸ்ரவேல் மக்களை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனிக் குத்துகிற முள்ளும் வலியுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இருக்காது; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.
எசேக்கியேல் 28 : 25 (IRVTA)
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வீட்டாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற மக்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் தேசகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என்னுடைய ஊழியக்காரனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.
எசேக்கியேல் 28 : 26 (IRVTA)
அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாகக் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, சுகமாக வாழ்ந்து, நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26