எசேக்கியேல் 27 : 1 (IRVTA)
தீருவுக்கான புலம்பல் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
எசேக்கியேல் 27 : 2 (IRVTA)
மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின் பெயரிலே புலம்பி,
எசேக்கியேல் 27 : 3 (IRVTA)
கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய்.
எசேக்கியேல் 27 : 4 (IRVTA)
கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
எசேக்கியேல் 27 : 5 (IRVTA)
சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 6 (IRVTA)
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 7 (IRVTA)
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.
எசேக்கியேல் 27 : 8 (IRVTA)
சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் துடுப்பு போடுகிறவர்களாக இருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன்னுடைய அறிஞர்கள் உன்னுடைய மாலுமிகளாக இருந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 9 (IRVTA)
கேபாரின் முதியோரும் அதனுடைய அறிஞர்களும் உன்னில் பழுதுபார்க்கும் வேலை செய்கிறவர்களாக இருந்தார்கள்; கடலின் எல்லா கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரர்களும் உன்னுடன் தொழில்துறை வியாபாரம் செய்கிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 10 (IRVTA)
பெர்சியர்களும், லூதியர்களும், பூத்தியர்களும் உன்னுடைய படையில் போர்வீரர்களாக இருந்து உனக்குள் கேடகமும் தலைகவசமும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள்.
எசேக்கியேல் 27 : 11 (IRVTA)
அர்வாத்திரர்கள் உன்னுடைய படைவீரர்களும் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர்கள் உன்னுடைய மதில்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும் தங்களுடைய கேடயங்களைத் தூக்கிவைத்து, உன்னுடைய வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.
எசேக்கியேல் 27 : 12 (IRVTA)
எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 13 (IRVTA)
யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 14 (IRVTA)
தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 15 (IRVTA)
தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 16 (IRVTA)
சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 17 (IRVTA)
யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 18 (IRVTA)
தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 19 (IRVTA)
தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள்.
எசேக்கியேல் 27 : 20 (IRVTA)
இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
எசேக்கியேல் 27 : 21 (IRVTA)
அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்.
எசேக்கியேல் 27 : 22 (IRVTA)
சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.
எசேக்கியேல் 27 : 23 (IRVTA)
ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
எசேக்கியேல் 27 : 24 (IRVTA)
இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
எசேக்கியேல் 27 : 25 (IRVTA)
உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்* வியாபார பொருட்களால் நிறைந்து கடல் பிரயாணம் செய்கிறாய் .
எசேக்கியேல் 27 : 26 (IRVTA)
துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது.
எசேக்கியேல் 27 : 27 (IRVTA)
நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள்.
எசேக்கியேல் 27 : 28 (IRVTA)
உன்னுடைய மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
எசேக்கியேல் 27 : 29 (IRVTA)
தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்களுடைய கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று,
எசேக்கியேல் 27 : 30 (IRVTA)
உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
எசேக்கியேல் 27 : 31 (IRVTA)
உனக்காக மொட்டையடித்து சணலாடையை உடுத்திக்கொண்டு, உனக்காக மனம்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள்.
எசேக்கியேல் 27 : 32 (IRVTA)
அவர்கள் உனக்காகத் தங்களுடைய துக்கத்திலே ஓலமிட்டு, உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் இணையான நகரம் உண்டோ?
எசேக்கியேல் 27 : 33 (IRVTA)
உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய்.
எசேக்கியேல் 27 : 34 (IRVTA)
நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள்.
எசேக்கியேல் 27 : 35 (IRVTA)
தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள்.
எசேக்கியேல் 27 : 36 (IRVTA)
எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36