எசேக்கியேல் 18 : 1 (IRVTA)
பாவம் செய்கிற ஆத்துமா சாகும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
எசேக்கியேல் 18 : 2 (IRVTA)
பிதாக்கள் திராட்சைக்காய்களை சாப்பிட்டார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போனது என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன?
எசேக்கியேல் 18 : 3 (IRVTA)
இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 18 : 4 (IRVTA)
இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்.
எசேக்கியேல் 18 : 5 (IRVTA)
ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
எசேக்கியேல் 18 : 6 (IRVTA)
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும் தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் மாதவிடாயுள்ள பெண்ணுடன் சேராமலும்,
எசேக்கியேல் 18 : 7 (IRVTA)
ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன்னுடைய அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடையில்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
எசேக்கியேல் 18 : 8 (IRVTA)
வட்டிக்குக் கொடுக்காமலும், அதிக லாபம் வாங்காமலும், அநியாயத்திற்குத் தன்னுடைய கையை விலக்கி, மனிதர்களுக்குள்ள வழக்கை உண்மையாகத் தீர்த்து,
எசேக்கியேல் 18 : 9 (IRVTA)
என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாக இருந்தால் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 18 : 10 (IRVTA)
ஆனாலும் அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தம் சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடக்காமல்,
எசேக்கியேல் 18 : 11 (IRVTA)
இவைகளில் ஒன்றுக்கு ஒப்பானதைச் செய்கிறவனுமாக இருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி,
எசேக்கியேல் 18 : 12 (IRVTA)
சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாக இருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடுக்காமல், அசுத்தமான சிலைகளுக்கு நேராக தன்னுடைய கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து,
எசேக்கியேல் 18 : 13 (IRVTA)
வட்டிக்குக் கொடுத்து, அதிகமாக வட்டி வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் இறக்கவே இறப்பான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
எசேக்கியேல் 18 : 14 (IRVTA)
பின்னும், இதோ, அவனுக்கு ஒரு மகன் பிறந்து, அவன் தன்னுடைய தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடி எச்சரிக்கையாக இருந்து,
எசேக்கியேல் 18 : 15 (IRVTA)
மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் மக்களின் அசுத்தமான சிலைகளுக்கு நேராகத் தன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், தன்னுடைய அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும்,
எசேக்கியேல் 18 : 16 (IRVTA)
ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிருக்காலும், கொள்ளையடிக்காமலும், தன்னுடைய ஆகாரத்தை பசித்தவனுக்குப் பங்கிட்டு, ஆடை இல்லாதவனுக்கு ஆடை அணிவித்து,
எசேக்கியேல் 18 : 17 (IRVTA)
சிறுமையானவனை துன்பப்படுத்தாதபடித் தன்னுடைய கையை விலக்கி, வட்டியும் அதிகமாக வாங்காமலிருந்து என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினால் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியேல் 18 : 18 (IRVTA)
அவனுடைய தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன்னுடைய மக்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, இவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்.
எசேக்கியேல் 18 : 19 (IRVTA)
இதெப்படி, மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், மகன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான்.
எசேக்கியேல் 18 : 20 (IRVTA)
பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.
எசேக்கியேல் 18 : 21 (IRVTA)
துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
எசேக்கியேல் 18 : 22 (IRVTA)
அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.
எசேக்கியேல் 18 : 23 (IRVTA)
துன்மார்க்கன் மரணமடைகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன்னுடைய வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 18 : 24 (IRVTA)
நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற எல்லா அருவருப்புகளின்படியும் செய்தால், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன்னுடைய துரோகத்திலேயும் அவன் செய்த தன்னுடைய பாவத்திலேயும் மரிப்பான்.
எசேக்கியேல் 18 : 25 (IRVTA)
நீங்களோ, ஆண்டவருடைய வழி சரியாக இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் மக்களே, கேளுங்கள்; என்னுடைய வழி சரியாக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ சரியில்லாததாக இருக்கிறது.
எசேக்கியேல் 18 : 26 (IRVTA)
நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான்.
எசேக்கியேல் 18 : 27 (IRVTA)
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான்.
எசேக்கியேல் 18 : 28 (IRVTA)
அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.
எசேக்கியேல் 18 : 29 (IRVTA)
இஸ்ரவேல் மக்களோ: ஆண்டவருடைய வழி ஒழுங்காக இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் மக்களே, என்னுடைய வழிகள் ஒழுங்காக இருக்காதோ? உங்களுடைய வழிகள் அல்லவோ ஒழுங்கில்லாததாக இருக்கிறது.
எசேக்கியேல் 18 : 30 (IRVTA)
ஆகையால் இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தகுந்தபடி நியாயந்தீர்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்களுடைய பொல்லாப்புக்கு காரணமாக இருப்பதில்லை.
எசேக்கியேல் 18 : 31 (IRVTA)
நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?
எசேக்கியேல் 18 : 32 (IRVTA)
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; மரணமடைகிறவனுடைய மரணத்தை நான் விரும்புவதில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
❮
❯