யாத்திராகமம் 8 : 1 (IRVTA)
2 வது-தவளைகளின் வாதை அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: “எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு.
யாத்திராகமம் 8 : 2 (IRVTA)
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன்.
யாத்திராகமம் 8 : 3 (IRVTA)
நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும்.
யாத்திராகமம் 8 : 4 (IRVTA)
அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்” என்றார்.
யாத்திராகமம் 8 : 5 (IRVTA)
மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார்.
யாத்திராகமம் 8 : 6 (IRVTA)
அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
யாத்திராகமம் 8 : 7 (IRVTA)
மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.
யாத்திராகமம் 8 : 8 (IRVTA)
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “அந்தத் தவளைகள் என்னையும் என்னுடைய மக்களையும்விட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; யெகோவாவுக்குப் பலியிடும்படி மக்களைப் போகவிடுவேன்” என்றான்.
யாத்திராகமம் 8 : 9 (IRVTA)
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: “தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக” என்றான்.
யாத்திராகமம் 8 : 10 (IRVTA)
அதற்கு அவன்: “நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: “எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும்.
யாத்திராகமம் 8 : 11 (IRVTA)
தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும்” என்றான்.
யாத்திராகமம் 8 : 12 (IRVTA)
மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு எதிராக வரச்செய்த தவளைகளினால் மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.
யாத்திராகமம் 8 : 13 (IRVTA)
யெகோவா மோசேயின் சொற்படிச் செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போனது.
யாத்திராகமம் 8 : 14 (IRVTA)
அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
யாத்திராகமம் 8 : 15 (IRVTA)
இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; யெகோவா சொல்லியிருந்தபடியே ஆனது.
யாத்திராகமம் 8 : 16 (IRVTA)
3 வது-பேன்களின் வாதை அப்பொழுது யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: “உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல்” என்றார்.
யாத்திராகமம் 8 : 17 (IRVTA)
அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன்னுடைய கையில் இருந்த தன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள்மேலும், மிருகஜீவன்கள்மேலும், எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களானது.
யாத்திராகமம் 8 : 18 (IRVTA)
மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.
யாத்திராகமம் 8 : 19 (IRVTA)
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
யாத்திராகமம் 8 : 20 (IRVTA)
# 14 வது-வண்டுகளின் வாதை அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு.
யாத்திராகமம் 8 : 21 (IRVTA)
என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
யாத்திராகமம் 8 : 22 (IRVTA)
பூமியின் நடுவில் நானே யெகோவா என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி,
யாத்திராகமம் 8 : 23 (IRVTA)
என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார்.
யாத்திராகமம் 8 : 24 (IRVTA)
அப்படியே யெகோவா செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது.
யாத்திராகமம் 8 : 25 (IRVTA)
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு இந்த தேசத்திலேயே பலியிடுங்கள்” என்றான்.
யாத்திராகமம் 8 : 26 (IRVTA)
அதற்கு மோசே: “அப்படிச் செய்யக்கூடாது; எங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் எகிப்தியர்களுடைய அருவருப்பைப் பலியிடுகிறதாக இருக்குமே, எகிப்தியர்களுடைய அருவருப்பை நாங்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
யாத்திராகமம் 8 : 27 (IRVTA)
நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணமாக போய், எங்களுடைய தேவனாகிய யெகோவா எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம்” என்றான்.
யாத்திராகமம் 8 : 28 (IRVTA)
அப்பொழுது பார்வோன்: “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு வனாந்திரத்தில் பலியிடும்படி, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாகப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்” என்றான்.
யாத்திராகமம் 8 : 29 (IRVTA)
அதற்கு மோசே: “நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின்பு, நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவருடைய வேலைக்காரர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும்படி, நான் யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், யெகோவாவுக்குப் பலியிடுகிறதற்கு மக்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி ஏமாற்றாதிருப்பாராக” என்றான்.
யாத்திராகமம் 8 : 30 (IRVTA)
மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவா நோக்கி வேண்டுதல் செய்தான்.
யாத்திராகமம் 8 : 31 (IRVTA)
அப்பொழுது யெகோவா மோசேயின் சொற்படி, வண்டுவகைகள் பார்வோனையும் அவனுடைய வேலைக்காரர்களையும், மக்களையும்விட்டு நீங்கும்படிச் செய்தார்; ஒன்றுகூட மீதியாக இருக்கவில்லை.
யாத்திராகமம் 8 : 32 (IRVTA)
பார்வோனோ, இந்த முறையும் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, மக்களைப் போகவிடாமல் இருந்தான்.
❮
❯