யாத்திராகமம் 35 : 1 (IRVTA)
ஓய்வு நாளுக்குரிய ஒழுங்குமுறைகள் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
யாத்திராகமம் 35 : 2 (IRVTA)
“நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
யாத்திராகமம் 35 : 3 (IRVTA)
ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான்.
யாத்திராகமம் 35 : 4 (IRVTA)
ஆசரிப்புக்கூடாரத்தின் பணிப்பொருட்கள். யாத். 25:1-9, 39:32- 43. பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி,
யாத்திராகமம் 35 : 5 (IRVTA)
“உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
யாத்திராகமம் 35 : 6 (IRVTA)
இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும்,
யாத்திராகமம் 35 : 7 (IRVTA)
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும்,
யாத்திராகமம் 35 : 8 (IRVTA)
விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும்,
யாத்திராகமம் 35 : 9 (IRVTA)
ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
யாத்திராகமம் 35 : 10 (IRVTA)
“உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
யாத்திராகமம் 35 : 11 (IRVTA)
ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
யாத்திராகமம் 35 : 12 (IRVTA)
பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
யாத்திராகமம் 35 : 13 (IRVTA)
மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும்,
யாத்திராகமம் 35 : 14 (IRVTA)
வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
யாத்திராகமம் 35 : 15 (IRVTA)
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,
யாத்திராகமம் 35 : 16 (IRVTA)
தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
யாத்திராகமம் 35 : 17 (IRVTA)
பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும்,
யாத்திராகமம் 35 : 18 (IRVTA)
கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
யாத்திராகமம் 35 : 19 (IRVTA)
பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
யாத்திராகமம் 35 : 20 (IRVTA)
ஆசரிப்புக்கூடாரத்திற்கு கொடுக்கபட்ட காணிக்கைகள். அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
யாத்திராகமம் 35 : 21 (IRVTA)
பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35 : 22 (IRVTA)
மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
யாத்திராகமம் 35 : 23 (IRVTA)
இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35 : 24 (IRVTA)
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35 : 25 (IRVTA)
ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35 : 26 (IRVTA)
எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.
யாத்திராகமம் 35 : 27 (IRVTA)
தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
யாத்திராகமம் 35 : 28 (IRVTA)
நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35 : 29 (IRVTA)
செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
யாத்திராகமம் 35 : 30 (IRVTA)
பெசலெயேலும் அகோலியாபும். யாத். 31:1-11 பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,
யாத்திராகமம் 35 : 31 (IRVTA)
அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
யாத்திராகமம் 35 : 32 (IRVTA)
இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும்,
யாத்திராகமம் 35 : 33 (IRVTA)
அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார்.
யாத்திராகமம் 35 : 34 (IRVTA)
அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
யாத்திராகமம் 35 : 35 (IRVTA)
சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.
❮
❯