பிரசங்கி 3 : 1 (IRVTA)
எல்லாவற்றிற்கும் காலம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு.
பிரசங்கி 3 : 2 (IRVTA)
பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு; நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு;
பிரசங்கி 3 : 3 (IRVTA)
கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு; இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு;
பிரசங்கி 3 : 4 (IRVTA)
அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு;
பிரசங்கி 3 : 5 (IRVTA)
கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
பிரசங்கி 3 : 6 (IRVTA)
தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு; காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு;
பிரசங்கி 3 : 7 (IRVTA)
கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு; மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு;
பிரசங்கி 3 : 8 (IRVTA)
நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு.
பிரசங்கி 3 : 9 (IRVTA)
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
பிரசங்கி 3 : 10 (IRVTA)
மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன்.
பிரசங்கி 3 : 11 (IRVTA)
அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான்.
பிரசங்கி 3 : 12 (IRVTA)
மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
பிரசங்கி 3 : 13 (IRVTA)
அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி.
பிரசங்கி 3 : 14 (IRVTA)
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடு ஒன்றும் கூட்டவும் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது; மனிதர்கள் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
பிரசங்கி 3 : 15 (IRVTA)
முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்பே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
பிரசங்கி 3 : 16 (IRVTA)
பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நீதிமன்றத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிமன்றத்தையும் கண்டேன். அங்கே அநீதி இருந்தது;
பிரசங்கி 3 : 17 (IRVTA)
எல்லா எண்ணங்களையும் எல்லா செயல்களையும் நியாயந்தீர்க்கும்காலம் இனி இருக்கிறபடியால் நீதிமானையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
பிரசங்கி 3 : 18 (IRVTA)
மனிதர்கள் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படி தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனிதர்களுடைய நிலைமையைக்குறித்து என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
பிரசங்கி 3 : 19 (IRVTA)
மனிதர்களுக்கு சம்பவிப்பது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும்; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; உயிர்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைவிட மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
பிரசங்கி 3 : 20 (IRVTA)
எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது.
பிரசங்கி 3 : 21 (IRVTA)
உயர ஏறும் மனிதனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?
பிரசங்கி 3 : 22 (IRVTA)
இப்படியிருக்கிறபடியால், மனிதன் தன்னுடைய செயல்களில் மகிழ்ச்சியாக இருக்கும் நன்மையைத்தவிர, வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவனுடைய பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படி அவனைத் திரும்பிவரச்செய்கிறவன் யார்?
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22