தானியேல் 5 : 1 (IRVTA)
சுவற்றிலே எழுதப்பட்ட எழுத்து அனேக ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள், பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் 1,000 பேர்களுக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேர்களுக்கு முன்பாகத் திராட்சைரசம் குடித்தான்.
தானியேல் 5 : 2 (IRVTA)
பெல்ஷாத்சார் திராட்சைரசத்தை ருசித்துக் கொண்டிருக்கும்போது, அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார்* பெல்ஷாத்சார், நபோநீடசின் மூத்த மகன், நேபுகாத்நேச்சாரின் பேரனாக இருக்கலாம் என்று சரித்திர குறிப்பு சொல்கிறது. எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.
தானியேல் 5 : 3 (IRVTA)
அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள்.
தானியேல் 5 : 4 (IRVTA)
அவர்கள் திராட்சைரசம் குடித்து, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
தானியேல் 5 : 5 (IRVTA)
அந்த நேரத்தில் மனித கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதியது; எழுதின அந்தக் கையை ராஜா கண்டான்.
தானியேல் 5 : 6 (IRVTA)
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கச்செய்தது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
தானியேல் 5 : 7 (IRVTA)
ராஜா உரத்த சத்தமிட்டு; சோதிடர்களையும், கல்தேயர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பான் என்று சொன்னான்.
தானியேல் 5 : 8 (IRVTA)
அப்பொழுது ராஜாவின் ஞானிகள் அனைவரும் வந்துசேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவிற்குத் தெரிவிக்கவும் முடியாமலிருந்தது.
தானியேல் 5 : 9 (IRVTA)
அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்.
தானியேல் 5 : 10 (IRVTA)
ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாவின் தாய் கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது ராஜாவின் தாய்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கச்செய்யவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை.
தானியேல் 5 : 11 (IRVTA)
உம்முடைய ராஜ்ஜியத்திலே ஒரு மனிதன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய முற்பிதாவின் நாட்களில் தெளிவும் விவேகமும் தெய்வங்களின் ஞானத்திற்கு இணையான ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனை ஞானிகளுக்கும் சோதிடர்களுக்கும் கல்தேயர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் தலைவனாக வைத்தார்.
தானியேல் 5 : 12 (IRVTA)
ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் கனவுகளை விளக்கிச்சொல்கிறதும், புதை பொருள்களை வெளிப்படுத்துகிறதும், கடினமானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை சொல்வான் என்றாள்.
தானியேல் 5 : 13 (IRVTA)
அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவரப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதர்களில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?
தானியேல் 5 : 14 (IRVTA)
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், தெளிவும், புத்தியும், விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.
தானியேல் 5 : 15 (IRVTA)
இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் ஞானிகளும் சோதிடர்களும் எனக்கு முன்பாக அழைத்துவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் முடியாமற்போனது.
தானியேல் 5 : 16 (IRVTA)
பொருளை வெளிப்படுத்தவும், கடினமானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே முடியுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே முடியுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பாய் என்றான்.
தானியேல் 5 : 17 (IRVTA)
அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: உம்முடைய வெகுமதிகள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் வாசித்து, இதின் அர்த்தத்தை ராஜாவிற்குத் தெரிவிப்பேன்.
தானியேல் 5 : 18 (IRVTA)
ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்ஜியத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.
தானியேல் 5 : 19 (IRVTA)
அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தினாலே சகல மக்களும் தேசத்தார்களும் பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்கு விருப்பமானவனைக் கொன்றுபோடுவார், தமக்கு விருப்பமானவனை உயிரோடே வைப்பார்; தமக்கு விருப்பமானவனை உயர்த்துவார், தமக்கு விருப்பமானவனைத் தாழ்த்துவார்.
தானியேல் 5 : 20 (IRVTA)
அவருடைய இருதயம் பெருமைகொண்டு, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோனது.
தானியேல் 5 : 21 (IRVTA)
அவர் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம் போலானது; காட்டுக்கழுதைகளோடே வசித்தார்; உன்னதமான தேவன் மனிதர்களின் ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளும்வரை மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
தானியேல் 5 : 22 (IRVTA)
அவருடைய மகனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,
தானியேல் 5 : 23 (IRVTA)
பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சைரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி தம்முடைய கையில் தமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல், பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாமலிருக்கிற வெள்ளியும், பொன்னும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தீர்.
தானியேல் 5 : 24 (IRVTA)
அப்பொழுது அந்தக் கை அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது.
தானியேல் 5 : 25 (IRVTA)
எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே.
தானியேல் 5 : 26 (IRVTA)
இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்ஜியத்தைக் கணக்கிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
தானியேல் 5 : 27 (IRVTA)
தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவுள்ளதாகக் காணப்பட்டாய் என்றும்,
தானியேல் 5 : 28 (IRVTA)
பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டு, மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தம் என்றான்.
தானியேல் 5 : 29 (IRVTA)
அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் தங்கச்சங்கிலியையும் அணிவிக்கவும், ராஜ்ஜியத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைசாற்றவும் கட்டளையிட்டான்.
தானியேல் 5 : 30 (IRVTA)
அன்று இரவிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான்.
தானியேல் 5 : 31 (IRVTA)
மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31