அப்போஸ்தலர்கள் 21 : 1 (IRVTA)
பவுல் எருசலேம் பட்டணத்திற்கு பயணம் நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து,
அப்போஸ்தலர்கள் 21 : 2 (IRVTA)
அங்கே பெனிக்கே தேசத்திற்குப் போகிற ஒரு கப்பலைப் பார்த்து, அதிலே ஏறிப்போனோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 3 (IRVTA)
சீப்புரு தீவைப் பார்த்து, அதற்கு தெற்கே இருக்கிற சீரியா நாட்டிற்குச் சென்று, தீருபட்டணத் துறைமுகத்தில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாக இருந்தது.
அப்போஸ்தலர்கள் 21 : 4 (IRVTA)
அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 5 (IRVTA)
அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப்போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு பட்டணத்திற்கு வெளியே எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 6 (IRVTA)
அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 7 (IRVTA)
நாங்கள் கப்பல் பயணத்தை முடித்து, தீரு பட்டணத்தைவிட்டு பித்தொலோமாய் பட்டணத்திற்கு வந்து, சகோதரர்களைச் சந்தித்து, அவர்களை வாழ்த்தி அவர்களோடு ஒருநாள் தங்கினோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 8 (IRVTA)
மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்திற்கு வந்து, ஏழு நபர்களில் ஒருவனாகிய பிலிப்பு என்னும் நற்செய்தியாளர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கினோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 9 (IRVTA)
தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னிப் பெண்களாகிய நான்கு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 10 (IRVTA)
நாங்கள் பல நாட்கள் அங்கு தங்கியிருக்கும்போது, அகபு என்ற பெயர் உள்ள ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
அப்போஸ்தலர்கள் 21 : 11 (IRVTA)
அவன் எங்களிடம் வந்து, பவுலினுடைய இடுப்பில் கட்டியிருந்த கச்சையை உருவி தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சைக்கு சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர்கள் பிடித்து இதேபோல கட்டி யூதரல்லாதவர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
அப்போஸ்தலர்கள் 21 : 12 (IRVTA)
இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 13 (IRVTA)
அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் சோர்ந்து போகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் தயாராக இருக்கிறேன் என்றான்.
அப்போஸ்தலர்கள் 21 : 14 (IRVTA)
அவன் சம்மதிக்காததினாலே, கர்த்தருடைய சித்தம் நடக்கட்டும் என்று விட்டுவிட்டோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 15 (IRVTA)
அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பயணத்திற்கான சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.
அப்போஸ்தலர்கள் 21 : 16 (IRVTA)
செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 17 (IRVTA)
பவுல் வரவேற்கப்படுதல் நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர்கள் எங்களை சந்தோஷமாக வரவேற்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 18 (IRVTA)
மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 19 (IRVTA)
பவுல் அவர்களை வாழ்த்தி, தன் ஊழியத்தினாலே தேவன் யூதரல்லாதோர்களிடம் செய்தவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக விளக்கிச்சொன்னான்.
அப்போஸ்தலர்கள் 21 : 20 (IRVTA)
யாக்கோபும் அங்கு இருந்தவர்களும் அதைக்கேட்டுக் கர்த்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் பவுலைப் பார்த்து: சகோதரனே, யூதர்களில் ஆயிரக்கணக்கானோர் விசுவாசிகளாக இருப்பது உமக்குத் தெரியும், அவர்கள் எல்லோரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கவனமாக கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 21 (IRVTA)
யூதரல்லாதோர்களோடு இருக்கிற யூதர்களெல்லோரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கவும் வேண்டியதில்லை என்று நீர் சொல்லி, அவர்கள் மோசேயைவிட்டுப் பிரிந்துபோகும்படி போதனை செய்கிறீர் என்று இவர்கள் உம்மைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 22 (IRVTA)
இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என்று அவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கோபத்தோடு இங்கு வருவார்கள். எனவே உம்மைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது உண்மையில்லை என்பதைக் காட்ட நீ ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும்.
அப்போஸ்தலர்கள் 21 : 23 (IRVTA)
ஆகவே, நாங்கள் உமக்குச் சொல்லுகிறதை நீர் செய்யவேண்டும்; அது என்னவென்றால், தேவனிடம் பொருத்தனை செய்துகொண்ட நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 24 (IRVTA)
இவர்களை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு போய், இவர்களோடு உம்மை சுத்திகரிப்புச் செய்துகொண்டு, இவர்கள் முடி வெட்டிக்கொள்வதற்கு வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அப்படிச் செய்தால் அவர்கள் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய் என்றும், நீ மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவரென்றும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 25 (IRVTA)
விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 26 (IRVTA)
மறுநாளிலே பவுல் அந்த நான்கு மனிதர்களோடு சேர்ந்து தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலியை செலுத்தி முடிக்கும்வரைக்கும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தான்.
அப்போஸ்தலர்கள் 21 : 27 (IRVTA)
பவுல் கைதுசெய்யப்படுதல் அந்த ஏழு நாட்களும் நிறைவேறும்பொழுது ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, மக்களெல்லோரையும் தூண்டிவிட்டு, அவனைப் பிடித்து:
அப்போஸ்தலர்கள் 21 : 28 (IRVTA)
இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 29 (IRVTA)
எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 30 (IRVTA)
அப்பொழுது நகரம் முழுவதும் கலக்கம் உண்டானது; மக்கள் கூட்டமாக ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது.
அப்போஸ்தலர்கள் 21 : 31 (IRVTA)
அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சி செய்யும்போது, எருசலேம் முழுவதும் கலக்கமாக இருக்கிறது என்று ரோம இராணுவ அதிபதிக்குச் செய்தி வந்தது.
அப்போஸ்தலர்கள் 21 : 32 (IRVTA)
உடனே அவன் போர்வீரர்களையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அங்கே ஓடினான்; ரோம அதிபதியையும் போர்வீரர்களையும் அவர்கள் பார்த்தவுடனே பவுலை அடிக்கிறதை நிறுத்திவிட்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 21 : 33 (IRVTA)
அப்பொழுது ரோம அதிபதி அருகில் வந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே அவனைக் கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
அப்போஸ்தலர்கள் 21 : 34 (IRVTA)
அதற்கு மக்கள் பல காரியங்களைச் சொல்லி அதிகமாகக் கூச்சல் போட்டார்கள்; அதிக சத்தத்தினாலே அதிபதிக்கு ஒன்றும் புரியாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
அப்போஸ்தலர்கள் 21 : 35 (IRVTA)
அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள்கூட்டம் அவனுக்கு பின்னேசென்று,
அப்போஸ்தலர்கள் 21 : 36 (IRVTA)
இவனைக் கொல்லவேண்டும் என்று மிகுந்த கோபமாக சத்தம் போட்டதினாலே, போர்வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாக இருந்தது.
அப்போஸ்தலர்கள் 21 : 37 (IRVTA)
பவுல் மக்களோடு பேசுதல் அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற நேரத்தில், அவன் ரோம அதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
அப்போஸ்தலர்கள் 21 : 38 (IRVTA)
பல நாட்களுக்கு முன்னே கலகம் உண்டாக்கி, நான்கு ஆயிரம் கொலைபாதகர்களை வனாந்திரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் நீதானே என்றான்.
அப்போஸ்தலர்கள் 21 : 39 (IRVTA)
அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள புகழ்பெற்ற தர்சு பட்டணத்தைச் சேர்ந்த யூதன்; மக்களுடனே பேசுவதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும் என்று உம்மை கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
அப்போஸ்தலர்கள் 21 : 40 (IRVTA)
அவன் அனுமதி அளித்தபோது, பவுல் படிகளின்மேல் நின்று மக்களைப் பார்த்து அமைதியாக இருக்கச்சொல்லி கையை அசைத்தான்; மிகுந்த அமைதி உண்டானது; அப்பொழுது அவன் எபிரெய மொழியிலே பேசத்தொடங்கினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40