2 சாமுவேல் 3 : 1 (IRVTA)
சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் பல நாட்கள் யுத்தம் நடந்தது; தாவீது மென்மேலும் வலிமை பெற்றுக்கொண்டே வந்தான்; சவுலின் குடும்பத்தார்களோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
2 சாமுவேல் 3 : 2 (IRVTA)
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த மகன்கள்: யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
2 சாமுவேல் 3 : 3 (IRVTA)
நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் மகன்; மூன்றாம் மகன் கெசூரின் ராஜாவான தல்மாய் மகளான மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
2 சாமுவேல் 3 : 4 (IRVTA)
நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
2 சாமுவேல் 3 : 5 (IRVTA)
ஆறாம் மகன் தாவீதின் மனைவியான எக்லாளிடம் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
2 சாமுவேல் 3 : 6 (IRVTA)
அப்னேர் தாவீதிடம் செல்லுதல் சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் யுத்தம் நடந்து வருகிறபோது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே வலிமை அடைந்தவனான்.
2 சாமுவேல் 3 : 7 (IRVTA)
சவுலுக்கு ஆயாவின் மகளான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியோடு உறவுகொண்டது என்ன என்றான்.
2 சாமுவேல் 3 : 8 (IRVTA)
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடுக்காமல், இந்த நாள்வரை உம்முடைய தகப்பனான சவுலின் குடும்பத்திற்கும், அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தயவு செய்கிறவனான என்னை நீர் இன்று ஒரு பெண்ணிற்காக குற்றம் கண்டுபிடிப்பதற்கு, நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயின் தலையா?
2 சாமுவேல் 3 : 9 (IRVTA)
நான் அரசாட்சியை சவுலின் குடும்பத்தைவிட்டு மாற்றி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவங்கிப் பெயெர்செபாவரையுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படி,
2 சாமுவேல் 3 : 10 (IRVTA)
யெகோவா தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும் என்றான்.
2 சாமுவேல் 3 : 11 (IRVTA)
அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதால், அதன்பின்பு ஒரு பதிலும் அவனுக்குச் சொல்லாமலிருந்தான்.
2 சாமுவேல் 3 : 12 (IRVTA)
அப்னேர் தன்னுடைய பெயராலே தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்யும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என்னுடைய கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.
2 சாமுவேல் 3 : 13 (IRVTA)
அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்வேன்; ஆனாலும், ஒரு காரியம் உன்னிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், நீ என்னுடைய முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் மகளான மீகாளை அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என்னுடைய முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,
2 சாமுவேல் 3 : 14 (IRVTA)
அவன் சவுலின் மகனான இஸ்போசேத்திடமும் தூதுவர்களை அனுப்பி: நான் பெலிஸ்தர்களுடைய 100 நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்செய்த என்னுடைய மனைவியான மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
2 சாமுவேல் 3 : 15 (IRVTA)
அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் மகனான பல்த்தியேல் என்னும் அவளுடைய கணவனிடமிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான்.
2 சாமுவேல் 3 : 16 (IRVTA)
அவள் கணவன் பகூரிம்வரை அவளுக்கு பின்னே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
2 சாமுவேல் 3 : 17 (IRVTA)
அப்னேர் இஸ்ரவேலின் மூப்பர்களோடு பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படி நீங்கள் அநேகநாட்களாகத் தேடினீர்களே.
2 சாமுவேல் 3 : 18 (IRVTA)
இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என்னுடைய தாசனான தாவீதின் கைகளினால், என்னுடைய மக்களான இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கும், அவர்களுடைய எல்லா எதிரிகளின் கைகளுக்கும் மீட்டு இரட்சிப்பேன் என்று யெகோவா தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
2 சாமுவேல் 3 : 19 (IRVTA)
இப்படியே அப்னேர் பென்யமீன் மக்களின் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர்களின் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தார்களின் பார்வைக்கும், விரும்பினதையெல்லாம் எப்ரோனிலே தாவீதினுடைய காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
2 சாமுவேல் 3 : 20 (IRVTA)
அப்னேரும், அவனோடு 20 பேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடு வந்த மனிதர்களுக்கும் விருந்துசெய்தான்.
2 சாமுவேல் 3 : 21 (IRVTA)
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலர்களை எல்லாம் உம்மோடு உடன்படிக்கைசெய்யும்படி, ராஜாவான என்னுடைய ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போனான்.
2 சாமுவேல் 3 : 22 (IRVTA)
யோவாப் அப்னேரைக் கொலைசெய்தல் தாவீதின் வீரர்களும் யோவாபும் அநேக பொருட்களைக் கொள்ளையிட்டு, படையிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதிடம் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடு போய்விட்டான்.
2 சாமுவேல் 3 : 23 (IRVTA)
யோவாபும் அவனோடு இருந்த எல்லா இராணுவமும் வந்தபோது, நேரின் மகனான அப்னேர் ராஜாவிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாகப் போகவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.
2 சாமுவேல் 3 : 24 (IRVTA)
அப்பொழுது யோவாப் ராஜாவின் அருகில் வந்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
2 சாமுவேல் 3 : 25 (IRVTA)
நேரின் மகனான அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.
2 சாமுவேல் 3 : 26 (IRVTA)
யோவாப் தாவீதைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் கிணறுவரை போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
2 சாமுவேல் 3 : 27 (IRVTA)
அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடு இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை வாசலின் நடுவே ஒரு பக்கமாக அழைத்துப்போய், தன்னுடைய தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.
2 சாமுவேல் 3 : 28 (IRVTA)
தாவீது அதைக் கேட்டபோது: நேரின் மகனான அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என்னுடைய ராஜ்ஜியத்தின் மேலும் யெகோவாவுக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
2 சாமுவேல் 3 : 29 (IRVTA)
அது யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய தகப்பனுடைய குடும்பத்தின்மேலும் சுமந்திருப்பதாக; யோவாபினுடைய வீட்டார்களிலே புண் உள்ளவனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் சாகிறவனும், அப்பம் இல்லாதவனும், ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை என்றான்.
2 சாமுவேல் 3 : 30 (IRVTA)
அப்னேர் கிபியோனிலே நடந்த யுத்தத்திலே தங்களுடைய தம்பியான ஆசகேலைக் கொன்றதினால் யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் அவனைப் படுகொலைசெய்தார்கள்.
2 சாமுவேல் 3 : 31 (IRVTA)
தாவீது யோவாபையும், அவனோடு இருந்த எல்லா மக்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜாவும் பாடைக்குப் பின்னே சென்றான்.
2 சாமுவேல் 3 : 32 (IRVTA)
அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்செய்யும்போது, ராஜா அப்னேரின் கல்லறையின் அருகில் சத்தமிட்டு அழுதான்; எல்லா மக்களும் அழுதார்கள்.
2 சாமுவேல் 3 : 33 (IRVTA)
ராஜா அப்னேருக்காகப் புலம்பி: “மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
2 சாமுவேல் 3 : 34 (IRVTA)
உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை; உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே” என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள்.
2 சாமுவேல் 3 : 35 (IRVTA)
பகலாக இருக்கும்போது, மக்கள் எல்லோரும் வந்து: “அப்பம் சாப்பிடும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் மறைவதற்கு முன்பு நான் அப்பமாவது வேறு எதையாவது ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்” என்று ஆணையிட்டுச் சொன்னான்.
2 சாமுவேல் 3 : 36 (IRVTA)
மக்கள் எல்லோரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்தது அனைத்தும் எல்லா மக்களுக்கும் நலமாகத் தோன்றினது.
2 சாமுவேல் 3 : 37 (IRVTA)
நேரின் மகனான அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவால் உண்டாகவில்லை என்று அந்த நாளிலே எல்லா மக்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.
2 சாமுவேல் 3 : 38 (IRVTA)
ராஜா தன்னுடைய ஊழியக்காரர்களை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனிதனுமான ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
2 சாமுவேல் 3 : 39 (IRVTA)
நான் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டவனாக இருந்தபோதும், நான் இன்னும் பெலவீனன்; செருயாவின் மகன்களான இந்த மனிதர்கள் என்னுடைய பெலத்திற்கு மிஞ்சினவர்களாக இருக்கிறார்கள், அந்தத் தீங்கைச் செய்தவனுக்குக் யெகோவா அவனுடைய தீங்கிற்கு ஏற்றபடிச் சரிக்கட்டுவாராக என்றான்.
❮
❯