2 சாமுவேல் 10 : 1 (IRVTA)
{தாவீது அம்மோனியர்களைத் தோற்கடித்தல்} [PS] அதன்பின்பு அம்மோன் மக்களின் ராஜா இறந்தான்; அவனுடைய மகனான ஆனூன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
2 சாமுவேல் 10 : 2 (IRVTA)
அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனான நாகாஸ் எனக்கு தயவு செய்ததுபோல, அவனுடைய மகனான இவனுக்கு நான் தயவு செய்வேன் என்று சொல்லி, அவனுடைய தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பினான்; தாவீதின் வேலைக்காரர்கள் அம்மோன் மக்களுடைய தேசத்திற்கு வந்தபோது,
2 சாமுவேல் 10 : 3 (IRVTA)
அம்மோன் மக்களின் பிரபுக்கள் தங்களுடைய ஆண்டவனான ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனிற்கு மரியாதைக் கொடுப்பதாக உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன்னுடைய வேலைக்கரர்களை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
2 சாமுவேல் 10 : 4 (IRVTA)
அப்பொழுது ஆனூன்: தாவீதின் வேலைக்காரர்களைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்து, அவர்களை அனுப்பிவிட்டான்.
2 சாமுவேல் 10 : 5 (IRVTA)
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அந்த மனிதர்கள் மிகவும் வெட்கப்பட்டதால், ராஜா அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்களுடைய தாடி வளரும்வரை நீங்கள் எரிகோ பட்டணத்தில் தங்கி இருந்து, பின்பு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.
2 சாமுவேல் 10 : 6 (IRVTA)
அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, தூதுவர்களை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியர்களிலும், சோபாவிலிருக்கிற சீரியர்களிலும் 20,000 காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவிடம் 1,000 பேரையும், தோபிலிருக்கிற 12,000 பேரையும், கூலிப்படையாக வரவழைத்தார்கள்.
2 சாமுவேல் 10 : 7 (IRVTA)
அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பலசாலிகளான எல்லா இராணுவங்களையும் அனுப்பினான்.
2 சாமுவேல் 10 : 8 (IRVTA)
அம்மோன் மக்கள் புறப்பட்டு, நகரத்து வாசலிலே யுத்தம்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியர்களும், தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனிதர்களும், வெளியிலே தனியாக இருந்தார்கள்.
2 சாமுவேல் 10 : 9 (IRVTA)
யோவாபோ இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருக்கிறதைக் காணும்போது, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியர்களுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,
2 சாமுவேல் 10 : 10 (IRVTA)
மற்ற மக்களை அம்மோன் இராணுவத்திற்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன்னுடைய சகோதரனான அபிசாயினிடம் ஒப்புவித்து:
2 சாமுவேல் 10 : 11 (IRVTA)
சீரியர்களின் கரம் மேலோங்கினால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் இராணுவத்தினுடைய கரம் மேலோங்கினால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.
2 சாமுவேல் 10 : 12 (IRVTA)
தைரியமாக இரு: நம்முடைய மக்களுக்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; யெகோவா தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
2 சாமுவேல் 10 : 13 (IRVTA)
யோவாபும் அவனோடிருந்த மக்களும் சீரியர்கள்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாகத் தப்பியோடினார்கள்.
2 சாமுவேல் 10 : 14 (IRVTA)
சீரியர்கள் தப்பியோடுகிறதை அம்மோன் இராணுவத்தினர்கள் பார்த்தபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக தப்பியோடிப் பட்டணத்திற்குள் நுழைந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் மக்களைவிட்டுத் திரும்பி எருசலேமிற்கு வந்தான்.
2 சாமுவேல் 10 : 15 (IRVTA)
தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதை சீரியர்கள் பார்த்தபோது, ஒன்றாகக் கூடினார்கள்.
2 சாமுவேல் 10 : 16 (IRVTA)
ஆதாரேசர் நதிக்கு மறுகரையில் சீரியர்களையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனான சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.
2 சாமுவேல் 10 : 17 (IRVTA)
அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர்கள் இராணுவங்களை அணிவகுத்து தாவீதுக்கு எதிராக நின்றார்கள்; அவனோடு யுத்தம்செய்கிறபோது,
2 சாமுவேல் 10 : 18 (IRVTA)
சீரியர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தப்பி ஓடினார்கள்; தாவீது சீரியர்களில் 700 இரதவீரர்களையும் 40,000 குதிரைவீரர்களையும் [* காலாட் படைகளை] கொன்று, அவர்களுடைய படைத்தலைவனான சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.
2 சாமுவேல் 10 : 19 (IRVTA)
அப்பொழுது ஆதாரேசருக்கு பணிவிடை செய்கிற எல்லா ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலர்களோடு சமாதானம்செய்து, அவர்களுக்கு பணிவிடை செய்தார்கள். அதன்பின்பு அம்மோன் மக்களுக்கு உதவிசெய்ய சீரியர்கள் பயப்பட்டார்கள். [PE]
❮
❯