2 இராஜாக்கள் 14 : 1 (IRVTA)
யூதாவின் ராஜாவாகிய அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகனாகிய யோவாசுடைய இரண்டாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானான்.
2 இராஜாக்கள் 14 : 2 (IRVTA)
அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
2 இராஜாக்கள் 14 : 3 (IRVTA)
அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் அல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.
2 இராஜாக்கள் 14 : 4 (IRVTA)
மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம்காட்டி வந்தார்கள்.
2 இராஜாக்கள் 14 : 5 (IRVTA)
அரசாட்சி அவன் கையிலே உறுதிப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான்.
2 இராஜாக்கள் 14 : 6 (IRVTA)
ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலை செய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, யெகோவா கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை.
2 இராஜாக்கள் 14 : 7 (IRVTA)
அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.
2 இராஜாக்கள் 14 : 8 (IRVTA)
அப்பொழுது அமத்சியா யெகூவின் மகனாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் பிரதிநிதிகளை அனுப்பி: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.
2 இராஜாக்கள் 14 : 9 (IRVTA)
அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக திருமணம் செய்துகொடு என்று சொல்லச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே ஓடும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
2 இராஜாக்கள் 14 : 10 (IRVTA)
நீ ஏதோமியர்களை முறியடித்ததால் உன் இருதயம் உன்னைக் கர்வமடையச்செய்தது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படி, பொல்லாப்பை ஏன் வருவித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
2 இராஜாக்கள் 14 : 11 (IRVTA)
ஆனாலும் அமத்சியா கேட்காமல்போனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் திறமையைப் பார்க்கிறபோது,
2 இராஜாக்கள் 14 : 12 (IRVTA)
யூதா மக்கள் இஸ்ரவேலருக்கு முன்பாகத் தோற்று அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
2 இராஜாக்கள் 14 : 13 (IRVTA)
அகசியாவின் மகனாகிய யோவாசின் மகன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் மதிலிலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,
2 இராஜாக்கள் 14 : 14 (IRVTA)
யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த பொன் வெள்ளி அனைத்தையும், சகல பணிமுட்டுகளையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
2 இராஜாக்கள் 14 : 15 (IRVTA)
யோவாஸ் செய்த மற்ற செயல்பாடுகளும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு போர்செய்த விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
2 இராஜாக்கள் 14 : 16 (IRVTA)
யோவாஸ் இறந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய யெரொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
2 இராஜாக்கள் 14 : 17 (IRVTA)
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா பதினைந்துவருடங்கள் உயிரோடிருந்தான்.
2 இராஜாக்கள் 14 : 18 (IRVTA)
அமத்சியாவின் மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
2 இராஜாக்கள் 14 : 19 (IRVTA)
எருசலேமிலே அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பின்னே லாகீசுக்கு மனிதர்களை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
2 இராஜாக்கள் 14 : 20 (IRVTA)
குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்.
2 இராஜாக்கள் 14 : 21 (IRVTA)
யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவனுடைய தகப்பனாகிய அமத்சியாவின் இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
2 இராஜாக்கள் 14 : 22 (IRVTA)
ராஜா இறந்தபின்பு, இவன் ஏலாத்தைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
2 இராஜாக்கள் 14 : 23 (IRVTA)
இஸ்ரவேலின் ராஜாவாகிய இரண்டாம் யெரொபெயாம் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியாவின் பதினைந்தாம் வருடத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் மகன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்து,
2 இராஜாக்கள் 14 : 24 (IRVTA)
யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டுவிலகவில்லை.
2 இராஜாக்கள் 14 : 25 (IRVTA)
காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் மகன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்வரை உள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 14 : 26 (IRVTA)
இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் யெகோவா பார்த்தார்.
2 இராஜாக்கள் 14 : 27 (IRVTA)
இஸ்ரவேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லாமல், யோவாசின் மகனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்.
2 இராஜாக்கள் 14 : 28 (IRVTA)
யெரொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் போர்செய்து, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
2 இராஜாக்கள் 14 : 29 (IRVTA)
யெரொபெயாம் இறந்தபின், அவன் மகனாகிய சகரியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
❮
❯