2 கொரிந்தியர் 13 : 1 (IRVTA)
பவுலின் இறுதி எச்சரிக்கை மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.
2 கொரிந்தியர் 13 : 2 (IRVTA)
நான் இரண்டாம்முறை உங்களோடு இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரத்தில் இருந்தும் உங்களிடம் இருக்கிறவனாக, நான் மீண்டும் வந்தால் தப்பவிடமாட்டேன் என்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
2 கொரிந்தியர் 13 : 3 (IRVTA)
கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார்.
2 கொரிந்தியர் 13 : 4 (IRVTA)
ஏனென்றால், அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராக இருந்தும், உங்களிடம் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவரோடு பிழைத்திருப்போம்.
2 கொரிந்தியர் 13 : 5 (IRVTA)
நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.
2 கொரிந்தியர் 13 : 6 (IRVTA)
நாங்களோ பரீட்சைக்கு நிற்காதவர்கள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
2 கொரிந்தியர் 13 : 7 (IRVTA)
மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாமல் இருக்கும்படியாக, தேவனை நோக்கி வேண்டுதல்செய்கிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்கள் என்று தெரிவதற்காக இல்லை, நாங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்கள்போல இருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்படியே வேண்டுதல்செய்கிறேன்.
2 கொரிந்தியர் 13 : 8 (IRVTA)
சத்தியத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமுடியாமல், சத்தியத்திற்கு சாதகமாகவே செய்யமுடியும்.
2 கொரிந்தியர் 13 : 9 (IRVTA)
நாங்கள் பலவீனமுள்ளவர்களும் நீங்கள் பலமுள்ளவர்களாகவும் இருக்கும்போது சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் பூரணர்களாகும்படி வேண்டுதல்செய்கிறோம்.
2 கொரிந்தியர் 13 : 10 (IRVTA)
ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.
2 கொரிந்தியர் 13 : 11 (IRVTA)
இறுதி வாழ்த்துக்கள். கடைசியாக, சகோதரர்களே, சந்தோஷமாக இருங்கள், பூரணராக நாடுங்கள், ஆறுதல் அடையுங்கள்; ஒரே சிந்தையாக இருங்கள், சமாதானமாக இருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்திற்கும் காரணராகிய தேவன் உங்களோடு இருப்பார்.
2 கொரிந்தியர் 13 : 12 (IRVTA)
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
2 கொரிந்தியர் 13 : 13 (IRVTA)
பரிசுத்தவான்கள் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
2 கொரிந்தியர் 13 : 14 (IRVTA)
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14