1 தீமோத்தேயு 2 : 1 (IRVTA)
ஆராதனைக்கான அறிவுரைகள் நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
1 தீமோத்தேயு 2 : 2 (IRVTA)
நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
1 தீமோத்தேயு 2 : 3 (IRVTA)
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
1 தீமோத்தேயு 2 : 4 (IRVTA)
எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
1 தீமோத்தேயு 2 : 5 (IRVTA)
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
1 தீமோத்தேயு 2 : 6 (IRVTA)
எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
1 தீமோத்தேயு 2 : 7 (IRVTA)
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
1 தீமோத்தேயு 2 : 8 (IRVTA)
அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 2 : 9 (IRVTA)
பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
1 தீமோத்தேயு 2 : 10 (IRVTA)
தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 2 : 11 (IRVTA)
பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
1 தீமோத்தேயு 2 : 12 (IRVTA)
உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 2 : 13 (IRVTA)
ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
1 தீமோத்தேயு 2 : 14 (IRVTA)
மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
1 தீமோத்தேயு 2 : 15 (IRVTA)
அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15