1 சாமுவேல் 23 : 1 (IRVTA)
தாவீது கேகிலா நகரத்தை மீட்டல் இதோ, பெலிஸ்தர்கள் கேகிலாவின்மேல் யுத்தம்செய்து, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
1 சாமுவேல் 23 : 2 (IRVTA)
அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தர்களை முறியடிக்கலாமா என்று யெகோவாவிடத்தில் விசாரித்ததற்கு, யெகோவா: நீ போ; பெலிஸ்தர்களை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.
1 சாமுவேல் 23 : 3 (IRVTA)
ஆனாலும் தாவீதின் மனிதர்கள் அவனை பார்த்து: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தர்களுடைய இராணுவங்களை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள்.
1 சாமுவேல் 23 : 4 (IRVTA)
அப்பொழுது தாவீது திரும்பவும் யெகோவாவிடத்தில் விசாரித்தபோது, யெகோவா அவனுக்கு பதிலாக: நீ எழுந்து, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
1 சாமுவேல் 23 : 5 (IRVTA)
அப்படியே தாவீது தன் மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்களுடைய ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு போனான்; இவ்விதமாக கேகிலாவின் குடிகளை இரட்சித்தான்.
1 சாமுவேல் 23 : 6 (IRVTA)
அகிமெலேக்கின் மகனான அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
1 சாமுவேல் 23 : 7 (IRVTA)
சவுல் தாவீதை துரத்துதல் தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் நுழைந்ததால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
1 சாமுவேல் 23 : 8 (IRVTA)
தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் முற்றுகை போடும்படி, கேகிலாவுக்குப் போக, எல்லா மக்களையும் யுத்தத்திற்கு அழைத்தான்.
1 சாமுவேல் 23 : 9 (IRVTA)
தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
1 சாமுவேல் 23 : 10 (IRVTA)
அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னாலே பட்டணத்தை அழிக்க வழிதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
1 சாமுவேல் 23 : 11 (IRVTA)
கேகிலா பட்டணத்தார்கள் என்னை அவனுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் யெகோவா: அவன் வருவான் என்றார்.
1 சாமுவேல் 23 : 12 (IRVTA)
கேகிலா பட்டணத்தார்கள் என்னையும் என்னுடைய மனிதர்களையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, யெகோவா: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.
1 சாமுவேல் 23 : 13 (IRVTA)
ஆகையால் தாவீதும் ஏறக்குறைய 600 பேராகிய அவனுடைய மனிதர்களும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான்.
1 சாமுவேல் 23 : 14 (IRVTA)
தாவீது வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தங்கியிருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
1 சாமுவேல் 23 : 15 (IRVTA)
தன்னுடைய உயிரை வாங்கத் தேடும்படி, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியால், தாவீது சீப் வனாந்திரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.
1 சாமுவேல் 23 : 16 (IRVTA)
அப்பொழுது சவுலின் மகனான யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையை பலப்படுத்தி:
1 சாமுவேல் 23 : 17 (IRVTA)
நீர் பயப்படவேண்டாம்; என்னுடைய தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்காது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாக இருப்பேன்; அப்படி நடக்கும் என்று என்னுடைய தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.
1 சாமுவேல் 23 : 18 (IRVTA)
அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான்.
1 சாமுவேல் 23 : 19 (IRVTA)
பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா?
1 சாமுவேல் 23 : 20 (IRVTA)
இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்.
1 சாமுவேல் 23 : 21 (IRVTA)
அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.
1 சாமுவேல் 23 : 22 (IRVTA)
நீங்கள் போய், அவனுடைய கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாக விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.
1 சாமுவேல் 23 : 23 (IRVTA)
அவன் ஒளிந்துகொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்து அறிந்துகொண்டு, நிச்சயமான செய்தியை எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடு வந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரம் பேருக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.
1 சாமுவேல் 23 : 24 (IRVTA)
அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் எஷிமோனுக்குத் தெற்கான மாகோன் வனாந்திரத்தில் இருந்தார்கள்.
1 சாமுவேல் 23 : 25 (IRVTA)
சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்திரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான்.
1 சாமுவேல் 23 : 26 (IRVTA)
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள்.
1 சாமுவேல் 23 : 27 (IRVTA)
அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர்கள் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.
1 சாமுவேல் 23 : 28 (IRVTA)
அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தர்களை எதிர்க்கும்படி போனான்; எனவே, அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத்* தப்புவிக்கும் கன்மலை என்று பெயரிட்டார்கள்.
1 சாமுவேல் 23 : 29 (IRVTA)
தாவீது அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29