1 சாமுவேல் 20 : 1 (IRVTA)
தாவீதும் யோனத்தானும் ஒப்பந்தம் செய்தல் தாவீது ராமாவிலிருந்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என்னுடைய ஜீவனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என்னுடைய அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
1 சாமுவேல் 20 : 2 (IRVTA)
அதற்கு அவன்: அப்படி ஒருபோதும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என்னுடைய தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்வதில்லை; இந்தக் காரியத்தை என்னுடைய தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்காது என்றான்.
1 சாமுவேல் 20 : 3 (IRVTA)
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.
1 சாமுவேல் 20 : 4 (IRVTA)
அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் என்ன என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
1 சாமுவேல் 20 : 5 (IRVTA)
தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசை, நான் ராஜாவோடு பந்தியில் சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலம் வரை வெளியிலே ஒளிந்திருக்கும்படி எனக்கு உத்திரவு கொடும்.
1 சாமுவேல் 20 : 6 (IRVTA)
உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன்னுடைய ஊராகிய பெத்லெகேமிலே தன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை பலியிட வருகிறபடியால் தாவீது அந்த இடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
1 சாமுவேல் 20 : 7 (IRVTA)
அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்கள்.
1 சாமுவேல் 20 : 8 (IRVTA)
ஆகவே, உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; யெகோவாவுக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை செய்திருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்தால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்திற்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.
1 சாமுவேல் 20 : 9 (IRVTA)
அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு தீமை செய்ய என் தகப்பனாலே உறுதிப்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
1 சாமுவேல் 20 : 10 (IRVTA)
தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான பதில் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
1 சாமுவேல் 20 : 11 (IRVTA)
அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
1 சாமுவேல் 20 : 12 (IRVTA)
அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை முன்னிட்டு தாவீதைப் பார்த்து: நான் நாளையோ மறுநாளிலோ என்னுடைய தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாக இருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படி, உமக்குச் சொல்லியனுப்பாமலிருந்தால்,
1 சாமுவேல் 20 : 13 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும்; ஆனாலும் உமக்குத் தீங்குசெய்ய என்னுடைய தகப்பனுக்குப் பிரியமாக இருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடு போகும்படி உம்மை அனுப்பிவிடுவேன்; யெகோவா என்னுடைய தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.
1 சாமுவேல் 20 : 14 (IRVTA)
மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் யெகோவாவின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,
1 சாமுவேல் 20 : 15 (IRVTA)
யெகோவா தாவீதின் எதிரிகள் ஒருவரையும் பூமியின்மேல் இல்லாதபடி, வேர் அறுக்கும்போதும், நீர் என்றென்றைக்கும் உமது தயவை என்னுடைய வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
1 சாமுவேல் 20 : 16 (IRVTA)
இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கைசெய்து, தாவீதுடைய எதிரிகளின் கையிலே யெகோவா கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
1 சாமுவேல் 20 : 17 (IRVTA)
யோனத்தான் தாவீதை மிகவும் நேசித்தபடியால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன்னுடைய உயிரை நேசித்ததுபோல அவனை நேசித்தான்.
1 சாமுவேல் 20 : 18 (IRVTA)
பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
1 சாமுவேல் 20 : 19 (IRVTA)
காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளிந்திருக்கும் இடத்திற்கு விரைவாக வந்து, ஏசேல் என்னும் கல்லின் அருகில் உட்கார்ந்திரும்.
1 சாமுவேல் 20 : 20 (IRVTA)
அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
1 சாமுவேல் 20 : 21 (IRVTA)
நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு சிறுவனை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று சிறுவனிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
1 சாமுவேல் 20 : 22 (IRVTA)
இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த சிறுவனிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது யெகோவா உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறிந்துகொள்.
1 சாமுவேல் 20 : 23 (IRVTA)
நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, யெகோவா எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
1 சாமுவேல் 20 : 24 (IRVTA)
அப்படியே தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டிருந்தான்; அமாவாசையானபோது ராஜா சாப்பிட உட்கார்ந்தான்.
1 சாமுவேல் 20 : 25 (IRVTA)
ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்* யோனத்தான் நேர் எதிராக உட்கார்ந்தான் ; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
1 சாமுவேல் 20 : 26 (IRVTA)
ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
1 சாமுவேல் 20 : 27 (IRVTA)
அமாவாசைக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் சாப்பாட்டிற்கு வராமல்போனது என்ன என்று தன்னுடைய மகனான யோனத்தானைக் கேட்டான்.
1 சாமுவேல் 20 : 28 (IRVTA)
யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
1 சாமுவேல் 20 : 29 (IRVTA)
அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
1 சாமுவேல் 20 : 30 (IRVTA)
அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
1 சாமுவேல் 20 : 31 (IRVTA)
ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
1 சாமுவேல் 20 : 32 (IRVTA)
யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
1 சாமுவேல் 20 : 33 (IRVTA)
அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன்னுடைய தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,
1 சாமுவேல் 20 : 34 (IRVTA)
கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.
1 சாமுவேல் 20 : 35 (IRVTA)
தாவீதும் யோனத்தானும் விடை பெறுதல் மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:
1 சாமுவேல் 20 : 36 (IRVTA)
சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான்.
1 சாமுவேல் 20 : 37 (IRVTA)
யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான்.
1 சாமுவேல் 20 : 38 (IRVTA)
நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.
1 சாமுவேல் 20 : 39 (IRVTA)
அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
1 சாமுவேல் 20 : 40 (IRVTA)
அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் கிபியா பட்டணத்திற்குக்† கிபியா பட்டணத்திற்கு 10:6 கொண்டுபோ என்றான்.
1 சாமுவேல் 20 : 41 (IRVTA)
சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
1 சாமுவேல் 20 : 42 (IRVTA)
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், யெகோவா என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
❮
❯