1 இராஜாக்கள் 10 : 1 (IRVTA)
சேபாவின் ராணி சாலொமோனைப் பார்க்க வருதல் யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக,
1 இராஜாக்கள் 10 : 2 (IRVTA)
திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.
1 இராஜாக்கள் 10 : 3 (IRVTA)
அப்பொழுது சாலொமோன் அவள் கேட்ட எல்லாவற்றிக்கும் பதிலளித்தான். அவளுக்கு பதிலளிக்க முடியாதபடி, ஒன்றுகூட ராஜாவிற்கு மறைபொருளாயிருக்கவில்லை.
1 இராஜாக்கள் 10 : 4 (IRVTA)
சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும்,
1 இராஜாக்கள் 10 : 5 (IRVTA)
அவனுடைய பந்தியின் உணவு வகைகளையும், வேலைக்காரர்களின் வீடுகளையும், வேலைக்காரர்களின் பணியையும், அவனுடைய ஆடைகளையும், அவனுக்கு பானம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் வியப்படைந்து,
1 இராஜாக்கள் 10 : 6 (IRVTA)
ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது.
1 இராஜாக்கள் 10 : 7 (IRVTA)
நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது.
1 இராஜாக்கள் 10 : 8 (IRVTA)
உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய வேலைக்காரர்களும் பாக்கியவான்கள்.
1 இராஜாக்கள் 10 : 9 (IRVTA)
உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியம் கொண்ட உம்முடைய தேவனாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்படுவாராக: யெகோவா இஸ்ரவேலை என்றைக்கும் நேசிப்பதால், நியாயமும் நீதியும் செய்வதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
1 இராஜாக்கள் 10 : 10 (IRVTA)
அவள் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து* 4,082.33 கிராம்ஸ் பொன்னையும், திரளான நறுமணப்பொருட்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராணி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு நறுமணப்பொருட்கள் பிறகு ஒருபோதும் வரவில்லை.
1 இராஜாக்கள் 10 : 11 (IRVTA)
ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனை† சந்தன மரங்களை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
1 இராஜாக்கள் 10 : 12 (IRVTA)
அந்த வாசனைமரங்களால் ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிறகு வந்ததுமில்லை, இந்த நாள்வரைக்கும் காணப்படவும் இல்லை.
1 இராஜாக்கள் 10 : 13 (IRVTA)
ராஜாவாகிய சாலொமோன் சேபாவின் ராணிக்கு சந்தோஷமாக வெகுமதிகள் கொடுத்ததுமட்டுமல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன்னுடைய கூட்டத்தோடு தன்னுடைய தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
1 இராஜாக்கள் 10 : 14 (IRVTA)
சாலொமோனின் பெருமை சாலொமோனுக்கு வியாபாரிகளும், நறுமணப்பொருட்களின் மொத்த வியாபாரிகளும், அரபிதேசத்து எல்லா ராஜாக்களும், மாகாணங்களின் அதிபதிகளும் கொண்டு வந்த பொன்னைத்தவிர,
1 இராஜாக்கள் 10 : 15 (IRVTA)
ஒவ்வொரு வருடத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து‡ 23,000 கிலோ கிராம்ஸ் நிறையாக இருந்தது.
1 இராஜாக்கள் 10 : 16 (IRVTA)
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது.
1 இராஜாக்கள் 10 : 17 (IRVTA)
அடித்த பொன்தகட்டால் 300 கேடகங்களையும் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல்[§ ஏறக்குறைய 3 கிலோ கிராம்ஸ் ] நிறுவை பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
1 இராஜாக்கள் 10 : 18 (IRVTA)
ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
1 இராஜாக்கள் 10 : 19 (IRVTA)
அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது.
1 இராஜாக்கள் 10 : 20 (IRVTA)
ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை.
1 இராஜாக்கள் 10 : 21 (IRVTA)
ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை.
1 இராஜாக்கள் 10 : 22 (IRVTA)
ராஜாவிற்குக் கடலிலே ஈராமின் கப்பல்களோடு தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
1 இராஜாக்கள் 10 : 23 (IRVTA)
பூமியின் எல்லா ராஜாக்களையும்விட, ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாக இருந்தான்.
1 இராஜாக்கள் 10 : 24 (IRVTA)
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்காக, எல்லா தேசத்தை சேர்ந்தவர்களும் அவனுடைய முகத்தின் தரிசனத்தைத் தேடினார்கள்.
1 இராஜாக்கள் 10 : 25 (IRVTA)
ஒவ்வொரு வருடமும் அவரவர் தங்களுடைய காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், நறுமணப்பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
1 இராஜாக்கள் 10 : 26 (IRVTA)
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு 1,400 இரதங்கள் இருந்தது, 12,000 குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
1 இராஜாக்கள் 10 : 27 (IRVTA)
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
1 இராஜாக்கள் 10 : 28 (IRVTA)
சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள்.
1 இராஜாக்கள் 10 : 29 (IRVTA)
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை 600 வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.
❮
❯