1 கொரிந்தியர் 7 : 1 (IRVTA)
திருமணத்தைக்குறித்த போதனைகள் நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது.
1 கொரிந்தியர் 7 : 2 (IRVTA)
ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 3 (IRVTA)
கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 4 (IRVTA)
மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
1 கொரிந்தியர் 7 : 5 (IRVTA)
உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள்.
1 கொரிந்தியர் 7 : 6 (IRVTA)
இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 7 (IRVTA)
எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது.
1 கொரிந்தியர் 7 : 8 (IRVTA)
திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும்.
1 கொரிந்தியர் 7 : 9 (IRVTA)
ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது.
1 கொரிந்தியர் 7 : 10 (IRVTA)
திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
1 கொரிந்தியர் 7 : 11 (IRVTA)
பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.
1 கொரிந்தியர் 7 : 12 (IRVTA)
மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 13 (IRVTA)
அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 14 (IRVTA)
ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 7 : 15 (IRVTA)
ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 16 (IRVTA)
மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்?
1 கொரிந்தியர் 7 : 17 (IRVTA)
தேவன் அவனவனுக்குப் பங்களித்தது எப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கவேண்டும். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம் செய்கிறேன்.
1 கொரிந்தியர் 7 : 18 (IRVTA)
ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் இல்லாதவனாக இருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனம் இல்லாதவனாக அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.
1 கொரிந்தியர் 7 : 19 (IRVTA)
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதே முக்கியமான காரியம்.
1 கொரிந்தியர் 7 : 20 (IRVTA)
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 21 (IRVTA)
அடிமையாக நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ விடுதலையாக முடியுமானால், அதை செய்.
1 கொரிந்தியர் 7 : 22 (IRVTA)
கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய விடுதலைபெற்றவனாக இருக்கிறான்; அப்படியே விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்ட விடுதலைபெற்றவன் கிறிஸ்துவினுடைய அடிமையாக இருக்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 23 (IRVTA)
நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமைகளாகாமல் இருங்கள்.
1 கொரிந்தியர் 7 : 24 (IRVTA)
சகோதரர்களே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்குமுன்பாக நிலைத்திருக்கவேண்டும்.
1 கொரிந்தியர் 7 : 25 (IRVTA)
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 26 (IRVTA)
அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன்.
1 கொரிந்தியர் 7 : 27 (IRVTA)
நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே.
1 கொரிந்தியர் 7 : 28 (IRVTA)
நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 29 (IRVTA)
மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும்,
1 கொரிந்தியர் 7 : 30 (IRVTA)
அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், வாங்குகிறவர்கள் வாங்காதவர்கள்போலவும்,
1 கொரிந்தியர் 7 : 31 (IRVTA)
இந்த உலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாக அனுபவிக்காதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இந்த உலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.
1 கொரிந்தியர் 7 : 32 (IRVTA)
நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
1 கொரிந்தியர் 7 : 33 (IRVTA)
திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.
1 கொரிந்தியர் 7 : 34 (IRVTA)
அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்.
1 கொரிந்தியர் 7 : 35 (IRVTA)
இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 36 (IRVTA)
ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும்.
1 கொரிந்தியர் 7 : 37 (IRVTA)
ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 38 (IRVTA)
இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 39 (IRVTA)
மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள்.
1 கொரிந்தியர் 7 : 40 (IRVTA)
ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.
❮
❯