1 நாளாகமம் 17 : 1 (IRVTA)
தேவன் தாவீதிற்கு வாக்குத்தத்தம் செய்தல் தாவீது தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே தங்கியிருக்கிறேன்; யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.
1 நாளாகமம் 17 : 2 (IRVTA)
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.
1 நாளாகமம் 17 : 3 (IRVTA)
அன்று இரவிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:
1 நாளாகமம் 17 : 4 (IRVTA)
நீ போய், என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாழும்படி நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
1 நாளாகமம் 17 : 5 (IRVTA)
நான் இஸ்ரவேலை வரச்செய்த நாள்முதல் இந்த நாள்வரை நான் ஒரு ஆலயத்திலே வாழாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கும், ஒரு தங்குமிடத்திலிருந்து மற்றொரு தங்குமிடத்திற்கும் போனேன்.
1 நாளாகமம் 17 : 6 (IRVTA)
நான் எல்லா இஸ்ரவேலோடும் உலாவி வந்த எந்த இடத்திலாவது, நான் என்னுடைய மக்களை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாரையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாமலிருக்கிறது என்ன என்று ஏதேனும் ஒரு வார்த்தை சொன்னது உண்டோ?
1 நாளாகமம் 17 : 7 (IRVTA)
இப்போதும், நீ என்னுடைய ஊழியக்காரனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
1 நாளாகமம் 17 : 8 (IRVTA)
நீ போன இடமெல்லாம் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன்.
1 நாளாகமம் 17 : 9 (IRVTA)
நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலவும், நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நியமித்தேன்.
1 நாளாகமம் 17 : 10 (IRVTA)
உன்னுடைய எதிரிகளையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் யெகோவா உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
1 நாளாகமம் 17 : 11 (IRVTA)
நீ உன்னுடைய பிதாக்களிடத்தில் போக, உன்னுடைய நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன்னுடைய மகன்களில் ஒருவனாகிய உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவனுடைய ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன்.
1 நாளாகமம் 17 : 12 (IRVTA)
அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன்.
1 நாளாகமம் 17 : 13 (IRVTA)
நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; உனக்கு முன்னிருந்தவனைவிட்டு என்னுடைய கிருபையை நான் விலகச்செய்ததுபோல, அவனைவிட்டு விலகச்செய்யாமல்,
1 நாளாகமம் 17 : 14 (IRVTA)
அவனை என்னுடைய ஆலயத்திலும் என்னுடைய ராஜ்ஜியத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கச்செய்வேன்; அவனுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
1 நாளாகமம் 17 : 15 (IRVTA)
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லா தரிசனத்தின்படியும் தாவீதுக்கு சொன்னான்.
1 நாளாகமம் 17 : 16 (IRVTA)
தாவீதின் ஜெபம் அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, யெகோவாவுடைய சமூகத்திலிருந்து: தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?
1 நாளாகமம் 17 : 17 (IRVTA)
தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்கு சிறியதாக இருக்கிறது என்று தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகு காலத்திற்கு முன்பு சொன்ன செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனிதனாகப் பார்த்தீர்.
1 நாளாகமம் 17 : 18 (IRVTA)
உமது அடியானுக்கு உண்டாகும் மேன்மையைப்பற்றி, தாவீது அதன்பின்பு உம்மோடு சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்.
1 நாளாகமம் 17 : 19 (IRVTA)
யெகோவாவே, உமது அடியானுக்காக, உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியச்செய்யும்படி, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
1 நாளாகமம் 17 : 20 (IRVTA)
யெகோவாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை.
1 நாளாகமம் 17 : 21 (IRVTA)
உமது மக்களாகிய இஸ்ரவேலுக்கு நிகரான மக்களும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே தேசத்தை தேவனாகிய நீர் உமக்கு மக்களாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களால் உமக்கு புகழ்ச்சியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது மக்களுக்கு முன்பாக தேசங்களைத் துரத்தி,
1 நாளாகமம் 17 : 22 (IRVTA)
உமது மக்களாகிய இஸ்ரவேலர்கள் என்றைக்கும் உமது மக்களாக இருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.
1 நாளாகமம் 17 : 23 (IRVTA)
இப்போதும் யெகோவாவே, தேவரீர் அடியானையும் அவனுடைய வீட்டையும்குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
1 நாளாகமம் 17 : 24 (IRVTA)
ஆம், அது நிலைத்திருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா இஸ்ரவேலுக்கு தேவன் என்றும், உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக உறுதியானதென்றும் சொல்லப்படுவதால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவுங்கடவது.
1 நாளாகமம் 17 : 25 (IRVTA)
உனக்கு வீடு கட்டுவேன் என்று என்னுடைய தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்செய்ய, உமது அடியானுக்கு மனதைரியம் கிடைத்தது.
1 நாளாகமம் 17 : 26 (IRVTA)
இப்போதும் யெகோவாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
1 நாளாகமம் 17 : 27 (IRVTA)
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி, அதை ஆசீர்வதித்தீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
❮
❯