சகரியா 7 : 1 (ERVTA)
கர்த்தர் இரக்கத்தையும் கருணையையும் விரும்புகிறார் தரியுவின் நான்காவது ஆட்சியாண்டில் கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது ஒன்பதாவது மாதத்தின் நான்காம் நாள். (அது கிஸ்லே எனப்படும்)
சகரியா 7 : 2 (ERVTA)
பெத்தேல் ஜனங்கள் சரேத்சேரையும், ரெகெம்மெலேகும், அவனது ஆட்களையும் சில கேள்விகள் கேட்க கர்த்தரிடம் அனுப்பினார்கள்.
சகரியா 7 : 3 (ERVTA)
அவர்கள் தீர்க்கதரிசிகளிடமும், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள ஆசாரியர்களிடமும் சென்றனர். அம்மனிதர்கள் அவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டனர்: “பல ஆண்டுகளாக ஆலயத்தின் அழிவுக்காக நாங்கள் துக்கம் கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் ஐந்தாவது மாதத்திலும்நாங்கள் அழுவதற்கும், உபவாசிப்பதற்கும் தனியான காலத்தை நியமித்திருந்தோம். நாங்கள் இதனைத் தொடரவேண்டுமா?”
சகரியா 7 : 4 (ERVTA)
நான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்றேன்
சகரியா 7 : 5 (ERVTA)
“ஆசாரியர்களுக்கும் இந்த நாட்டிலுள்ள பிறருக்கும் இதனைக் கூறு. நீங்கள் ஐந்தாவது மாதத்திலும், ஏழாவது மாதத்திலும், உபவாசம் இருந்து 70 வருடங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டினீர்கள். ஆனால் அந்த உபவாசம் எனக்காகவா?
சகரியா 7 : 6 (ERVTA)
இல்லை. நீங்கள் உண்ணுவதும், குடிப்பதும் எனக்காகவா? இல்லை. இது உங்கள் சொந்த நலனுக்காக.
சகரியா 7 : 7 (ERVTA)
தேவன் முற்கால தீர்க்கதரிசிகளைக் கெண்டு இதே செய்தியைச் சொல்லியிருக்கிறார். எருசலேம் ஒரு வளமான நகரமாக ஜனங்களால் நிறைந்திருந்தபோது அவர் இவற்றைச் சொன்னார். எருசலேமைச் சுற்றியுள்ள நகரங்களிலும் நெகேவ், மேற்கத்திய மலை அடிவாரங்களிலும் ஜனங்கள் வாழ்ந்த காலத்தில் தேவன் இவற்றைச் சொன்னார்.”
சகரியா 7 : 8 (ERVTA)
இதுதான் சகரியாவுக்கான கர்த்தருடைய செய்தி.
சகரியா 7 : 9 (ERVTA)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “எது நன்மையும் நேர்மையும் கொண்டதோ அவற்றை நீ செய்ய வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.
சகரியா 7 : 10 (ERVTA)
விதவைகளையும், அநாதைகளையும், அயல் நாட்டாரையும், ஏழைகளையும் துன்புறுத்தாதேயுங்கள். ஒருவருக்கொருவர் தீமைச் செய்ய எண்ணவும் வேண்டாம்!” என்றார்.
சகரியா 7 : 11 (ERVTA)
ஆனால் அந்த ஜனங்கள் கேட்க மறுத்தனர். அவர்கள் அவர் விரும்பியதை செய்ய மறுத்தனர். அவர்கள் தங்கள் காதுகளை மூடினார்கள். எனவே, தேவன் என்ன சொல்கிறார் என்பதை கேட்க முடியவில்லை.
சகரியா 7 : 12 (ERVTA)
அவர்கள் மிகவும் கடின மனமுடையவர்கள். அவர்கள் சட்டங்களுக்கு அடிபணிவதில்லை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தனது ஆவியைக்கொண்டு தனது ஜனங்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாக செய்திகளை அனுப்பினார். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை. எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மிகவும் கோபமுற்றார்.
சகரியா 7 : 13 (ERVTA)
ஆகவே சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “நான் அவர்களைக் கூப்பிட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. இப்பொழுது அவர்கள் என்னைக் கூப்பிட்டால், நான் பதில் சொல்லமாட்டேன்.
சகரியா 7 : 14 (ERVTA)
நான் மற்ற நாடுகளை, ஒரு புயலைப்போன்று அவர்களுக்கு எதிராகக் கொண்டுவருவேன். அவர்கள் அந்த நாடுகளை அறியமாட்டார்கள். ஆனால், இந்த நாடு பிற நாடுகள் வந்து போன பிறகு அழிக்கப்படும். இந்த செழிப்பான நாடு அழிக்கப்படும்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14