ரோமர் 6 : 1 (ERVTA)
பாவத்தினால் மரணம்; கிறிஸ்துவினால் வாழ்வு எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும் மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா?
ரோமர் 6 : 2 (ERVTA)
முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்?
ரோமர் 6 : 3 (ERVTA)
நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒரு பாகமாகிவிட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம்.
ரோமர் 6 : 4 (ERVTA)
ஆகையால் நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
ரோமர் 6 : 5 (ERVTA)
கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம்.
ரோமர் 6 : 6 (ERVTA)
நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம்.
ரோமர் 6 : 7 (ERVTA)
எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான்.
ரோமர் 6 : 8 (ERVTA)
நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும்.
ரோமர் 6 : 9 (ERVTA)
கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது!
ரோமர் 6 : 10 (ERVTA)
அவர் பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். இப்போது அவருக்கு தேவனோடு புதிய வாழ்க்கை உள்ளது.
ரோமர் 6 : 11 (ERVTA)
அவ்வாறே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
ரோமர் 6 : 12 (ERVTA)
ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக.
ரோமர் 6 : 13 (ERVTA)
நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6 : 14 (ERVTA)
பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.
ரோமர் 6 : 15 (ERVTA)
நீதிக்கு அடிமைகள் அதனால் இப்போது என்ன செய்யலாம்? நாம் சட்டவிதிக்குக் கீழ்ப்படாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா?
ரோமர் 6 : 16 (ERVTA)
கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள்.
ரோமர் 6 : 17 (ERVTA)
கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரோமர் 6 : 18 (ERVTA)
நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள்.
ரோமர் 6 : 19 (ERVTA)
இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6 : 20 (ERVTA)
முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
ரோமர் 6 : 21 (ERVTA)
நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது.
ரோமர் 6 : 22 (ERVTA)
ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும்.
ரோமர் 6 : 23 (ERVTA)
பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23