ரோமர் 1 : 1 (ERVTA)
இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது: தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
ரோமர் 1 : 2 (ERVTA)
தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
ரோமர் 1 : 3 (ERVTA)
(3-4)அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார்.
ரோமர் 1 : 4 (ERVTA)
ரோமர் 1 : 5 (ERVTA)
கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன்.
ரோமர் 1 : 6 (ERVTA)
ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.
ரோமர் 1 : 7 (ERVTA)
தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது. தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
ரோமர் 1 : 8 (ERVTA)
நன்றியின் பிரார்த்தனை முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ரோமர் 1 : 9 (ERVTA)
(9-10)ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும்.
ரோமர் 1 : 10 (ERVTA)
ரோமர் 1 : 11 (ERVTA)
நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன்.
ரோமர் 1 : 12 (ERVTA)
நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.
ரோமர் 1 : 13 (ERVTA)
சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.
ரோமர் 1 : 14 (ERVTA)
கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன்.
ரோமர் 1 : 15 (ERVTA)
அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.
ரோமர் 1 : 16 (ERVTA)
நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும்.
ரோமர் 1 : 17 (ERVTA)
தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.” ஆபகூக் 2:4-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ரோமர் 1 : 18 (ERVTA)
அனைவரும் பாவிகளே தேவனுடைய கோபம் பரலோகத்தில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக மக்களால் செய்யப்படும் அனைத்து பாவங்களும், பிழைகளும் தேவனுடைய கோபத்துக்குக் காரணம். அவர்களிடம் உண்மை இருக்கிறது. ஆனால் தமது பாவ வாழ்வால் உண்மையை மறைத்து விடுகிறார்கள்.
ரோமர் 1 : 19 (ERVTA)
தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.
ரோமர் 1 : 20 (ERVTA)
தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது.
ரோமர் 1 : 21 (ERVTA)
தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது.
ரோமர் 1 : 22 (ERVTA)
மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள்.
ரோமர் 1 : 23 (ERVTA)
அவர்கள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவனின் மகிமையை விட்டொழிந்தார்கள். மக்கள் அந்த மகிமையை சாதாரண மண்ணுலக மக்களைப் போன்றும், பறவைகள், மிருகங்கள், பாம்புகள் ஆகியன போன்றும் உள்ள உருவ வழிபாட்டுக்கு மாற்றிவிட்டார்கள்.
ரோமர் 1 : 24 (ERVTA)
மக்கள் பாவங்களால் நிறைந்து, கெட்டவற்றைச் செய்யவே விரும்பினர். எனவே தேவன் அவர்களை விட்டு விலகி, பாவ வழியிலேயே அவர்கள் தொடர்ந்து செல்ல விட்டுவிட்டார். அதனால் மக்கள் ஒவ்வொருவரும் தம் சரீரங்களை அவமானப்படுத்தி முறையற்ற வாழ்வில் தம்மைக் கெடுத்தனர்.
ரோமர் 1 : 25 (ERVTA)
தேவனுடைய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் தேவனை வணங்கவில்லை. அவர் அவர்களைப் படைத்தவர்! தேவன் என்றென்றும் புகழப்படுவதற்குரியவர். ஆமென்.
ரோமர் 1 : 26 (ERVTA)
மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர்.
ரோமர் 1 : 27 (ERVTA)
அவ்வாறே ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். அதனால் தவறான காமவெறியினால் ஆண்களோடு ஆண்கள் அவலட்சணமாக உறவு கொண்டதால் அந்த அக்கிரமத்துக்குரிய தண்டனையையும் தம் சரீரத்தில் பெற்றுக்கொண்டனர்.
ரோமர் 1 : 28 (ERVTA)
தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர்.
ரோமர் 1 : 29 (ERVTA)
எல்லாவிதமான பாவம், தீமை, சுயநலம், வெறுப்பு போன்றவை அனைத்தும் அவர்களிடம் நிறைந்து காணப்பட்டன. அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, பொய், வம்பு ஆகியவற்றைக் கொண்டவர்களாய் விளங்கினர்.
ரோமர் 1 : 30 (ERVTA)
ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர்.
ரோமர் 1 : 31 (ERVTA)
அவர்கள் முட்டாள்களாய் இருந்தனர். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினர். அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டியதே இல்லை.
ரோமர் 1 : 32 (ERVTA)
அவர்களுக்கு தேவனுடைய சட்டம் தெரியும். இதுபோல் பாவம் செய்கிறவர்கள் மரணத்துக்கு உரியவராவார் என்பதையும் அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் அத்தகைய பாவங்களையே தொடர்ந்து செய்தனர். அதோடு இவ்வாறு பாவம் செய்கிற மற்றவர்களையும் பாராட்டி வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32