வெளிபடுத்தல் 21 : 1 (ERVTA)
புதிய எருசலேம் பிறகு நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன். முதலாவது வானமும், பூமியும் மறைந்து போயிற்று. இப்போது கடல் இல்லை.
வெளிபடுத்தல் 21 : 2 (ERVTA)
தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டுக் கீழே இறங்கிவரும் பரிசுத்த நகரைக் கண்டேன். தேவன் அனுப்பிய அந்நகரமே புதிய எருசலேம்.* புதிய எருசலேம் தேவனுடைய மக்கள் அவரோடு வாழும் பரிசுத்த நகரம். அது, தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல தயார்படுத்தப்பட்டது.
வெளிபடுத்தல் 21 : 3 (ERVTA)
சிம்மாசனத்திலிருந்து ஓர் உரத்தகுரல் கேட்டது: “இப்போது தேவனுடைய வீடு அவரது மக்களோடு உள்ளது. அவர் அவர்களோடு வாழ்வார். அவர்களே அவரது மக்களாக இருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடிருந்து அவர்களுடைய தேவனாய் இருப்பார்.
வெளிபடுத்தல் 21 : 4 (ERVTA)
அவர்களின் கண்களில் வடியும் கண்ணீரை தேவன் துடைப்பார். இனிமேல் அங்கே மரணம் இருக்காது. துக்கமும், அழுகையும், வேதனையும் இல்லாமல் போகும். பழைய முறைகள் எல்லாம் போய்விட்டன” என்றது.
வெளிபடுத்தல் 21 : 5 (ERVTA)
சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.
வெளிபடுத்தல் 21 : 6 (ERVTA)
சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன்.
வெளிபடுத்தல் 21 : 7 (ERVTA)
எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு மகனாகவும் இருப்பான்.
வெளிபடுத்தல் 21 : 8 (ERVTA)
ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார்.
வெளிபடுத்தல் 21 : 9 (ERVTA)
ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான்.
வெளிபடுத்தல் 21 : 10 (ERVTA)
அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது.
வெளிபடுத்தல் 21 : 11 (ERVTA)
அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது.
வெளிபடுத்தல் 21 : 12 (ERVTA)
அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
வெளிபடுத்தல் 21 : 13 (ERVTA)
கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன.
வெளிபடுத்தல் 21 : 14 (ERVTA)
நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
வெளிபடுத்தல் 21 : 15 (ERVTA)
என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனின் கைகளில் நகரையும் அதன் வாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்காகப் பொன்னாலான ஒரு அளவு கோல் இருந்தது.
வெளிபடுத்தல் 21 : 16 (ERVTA)
அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி[† ஸ்தாதி 1 ஸ்தாதி 200 அடிகள் நீளம் கொண்டது. ரோமானிய மைலில் எட்டில் ஒரு பங்கு. ] நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது.
வெளிபடுத்தல் 21 : 17 (ERVTA)
அத்தூதன் மதிலையும் அளந்தான். அது மனித அளவின்படி அதாவது தூதனுடைய முன்னங்கையால் 144 முழ உயரம் இருந்தது.
வெளிபடுத்தல் 21 : 18 (ERVTA)
அச்சுவர் வைரக்கல்லால் ஆனது. நகரம் தூய பளிங்கு போன்ற தங்கத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
வெளிபடுத்தல் 21 : 19 (ERVTA)
நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம்.
வெளிபடுத்தல் 21 : 20 (ERVTA)
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம். ஏழாவது சுவர்ணரத்தினம். எட்டாவது படிகப்பச்சை. ஒன்பதாவது புஷ்பராகம். பத்தாவது வைடூரியம். பதினோராவது கல் சுநீரம். பன்னிரண்டாவது சுகந்தி.
வெளிபடுத்தல் 21 : 21 (ERVTA)
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.
வெளிபடுத்தல் 21 : 22 (ERVTA)
அந்நகரத்தில் ஆலயம் எதையும் நான் காணவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதன் ஆலயமாக இருக்கின்றனர்.
வெளிபடுத்தல் 21 : 23 (ERVTA)
அந்நகரத்துக்கு ஒளி தர சூரியனோ சந்திரனோ தேவையில்லை. தேவனுடைய மகிமை அங்கு ஒளி வீசுகிறது. ஆட்டுக்குட்டியானவரே அங்கு ஒளியாக இருக்கிறார்.
வெளிபடுத்தல் 21 : 24 (ERVTA)
இரட்சிக்கப்படுகிற மக்கள் அனைவரும் அதின் ஒளியில் நடப்பார்கள். உலகில் உள்ள அரசர்கள் தம் மகிமையை அந்நகருக்குள் கொண்டு வருவார்கள்.
வெளிபடுத்தல் 21 : 25 (ERVTA)
எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந்நகரில் இரவு என்பதே இல்லை.
வெளிபடுத்தல் 21 : 26 (ERVTA)
அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும்.
வெளிபடுத்தல் 21 : 27 (ERVTA)
சுத்தமற்ற எதுவும் அந்நகருக்குள் நுழைவதில்லை. வெட்கப்படத்தக்க செயல்களைச் செய்பவர்களும் பொய் சொல்பவர்களும் அந்நகருக்குள் பிரவேசிப்பதில்லை. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எவருடைய பெயர்கள் எழுதப்பட்டுள்ளனவோ அவர்கள் மட்டுமே அங்கு போகமுடியும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27