சங்கீதம் 38 : 1 (ERVTA)
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல். கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும். என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
சங்கீதம் 38 : 2 (ERVTA)
கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர். உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
சங்கீதம் 38 : 3 (ERVTA)
நீர் என்னைத் தண்டித்தீர். இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன. நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர். என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
சங்கீதம் 38 : 4 (ERVTA)
தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன். என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
சங்கீதம் 38 : 5 (ERVTA)
நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன். இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
சங்கீதம் 38 : 6 (ERVTA)
நான் குனிந்து வளைந்தேன். நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
சங்கீதம் 38 : 7 (ERVTA)
காய்ச்சலினாலும் வலியினாலும் என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
சங்கீதம் 38 : 8 (ERVTA)
நான் பெரிதும் தளர்ந்து போகிறேன். வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
சங்கீதம் 38 : 9 (ERVTA)
என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர். என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
சங்கீதம் 38 : 10 (ERVTA)
என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது. என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
சங்கீதம் 38 : 11 (ERVTA)
என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை. என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
சங்கீதம் 38 : 12 (ERVTA)
என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள். பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள். என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
சங்கீதம் 38 : 13 (ERVTA)
நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன். நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
சங்கீதம் 38 : 14 (ERVTA)
நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன். என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
சங்கீதம் 38 : 15 (ERVTA)
கர்த்தாவே எனக்கு ஆதரவளியும். எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
சங்கீதம் 38 : 16 (ERVTA)
நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள். நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள். செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
சங்கீதம் 38 : 17 (ERVTA)
தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன். என் நோவை என்னால் மறக்க இயலாது.
சங்கீதம் 38 : 18 (ERVTA)
கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன். என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
சங்கீதம் 38 : 19 (ERVTA)
என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள். அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
சங்கீதம் 38 : 20 (ERVTA)
என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர். ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன். நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
சங்கீதம் 38 : 21 (ERVTA)
கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
சங்கீதம் 38 : 22 (ERVTA)
விரைந்து வந்து எனக்கு உதவும்! என் தேவனே, என்னை மீட்டருளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22