சங்கீதம் 19 : 1 (ERVTA)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன. தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
சங்கீதம் 19 : 2 (ERVTA)
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும். ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.
சங்கீதம் 19 : 3 (ERVTA)
உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது. நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
சங்கீதம் 19 : 4 (ERVTA)
ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது. அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன. ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.
சங்கீதம் 19 : 5 (ERVTA)
படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும். பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.
சங்கீதம் 19 : 6 (ERVTA)
ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும். அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.
சங்கீதம் 19 : 7 (ERVTA)
கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை. அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும். கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது. அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
சங்கீதம் 19 : 8 (ERVTA)
கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை. அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும். கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை. வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.
சங்கீதம் 19 : 9 (ERVTA)
கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
சங்கீதம் 19 : 10 (ERVTA)
கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை. தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
சங்கீதம் 19 : 11 (ERVTA)
கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன. அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
சங்கீதம் 19 : 12 (ERVTA)
கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது. எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
சங்கீதம் 19 : 13 (ERVTA)
கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும். அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும். நீர் உதவினால் நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
சங்கீதம் 19 : 14 (ERVTA)
என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும். கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14