சங்கீதம் 139 : 1 (ERVTA)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
சங்கீதம் 139 : 2 (ERVTA)
நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர். வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
சங்கீதம் 139 : 3 (ERVTA)
கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர். நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
சங்கீதம் 139 : 4 (ERVTA)
கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
சங்கீதம் 139 : 5 (ERVTA)
கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன் புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர். நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
சங்கீதம் 139 : 6 (ERVTA)
நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
சங்கீதம் 139 : 7 (ERVTA)
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
சங்கீதம் 139 : 8 (ERVTA)
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
சங்கீதம் 139 : 9 (ERVTA)
கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
சங்கீதம் 139 : 10 (ERVTA)
அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.
சங்கீதம் 139 : 11 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
சங்கீதம் 139 : 12 (ERVTA)
ஆனால் கர்த்தாவே, இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை. இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
சங்கீதம் 139 : 13 (ERVTA)
கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர். என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139 : 14 (ERVTA)
கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்! நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர். நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
சங்கீதம் 139 : 15 (ERVTA)
நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர். என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
சங்கீதம் 139 : 16 (ERVTA)
என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர். உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர். நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
சங்கீதம் 139 : 17 (ERVTA)
உமது எண்ணங்கள் எனக்கு முக்கியமானவை தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
சங்கீதம் 139 : 18 (ERVTA)
நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும். நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
சங்கீதம் 139 : 19 (ERVTA)
தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும். அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
சங்கீதம் 139 : 20 (ERVTA)
அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள். அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
சங்கீதம் 139 : 21 (ERVTA)
கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன். உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
சங்கீதம் 139 : 22 (ERVTA)
அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன். உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
சங்கீதம் 139 : 23 (ERVTA)
கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
சங்கீதம் 139 : 24 (ERVTA)
என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும். நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24