சங்கீதம் 107 : 1 (ERVTA)
#0புத்தகம் 5
(சங்கீதம் 107-150) கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்! அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
சங்கீதம் 107 : 2 (ERVTA)
கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும். கர்த்தர் பகைவரிமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 107 : 3 (ERVTA)
கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார். அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.
சங்கீதம் 107 : 4 (ERVTA)
அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள். ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சங்கீதம் 107 : 5 (ERVTA)
அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி, சோர்வடைந்து போனார்கள்.
சங்கீதம் 107 : 6 (ERVTA)
எனவே அவர்கள் உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார்.
சங்கீதம் 107 : 7 (ERVTA)
தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.
சங்கீதம் 107 : 8 (ERVTA)
அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும் அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
சங்கீதம் 107 : 9 (ERVTA)
தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார். பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.
சங்கீதம் 107 : 10 (ERVTA)
தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள். அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
சங்கீதம் 107 : 11 (ERVTA)
ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள். மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள்.
சங்கீதம் 107 : 12 (ERVTA)
அவர்கள் செய்த காரியங்களால் தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார். அவர்கள் இடறி வீழ்ந்தார்கள். அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை.
சங்கீதம் 107 : 13 (ERVTA)
அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள். தேவன் அவர்கள் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 107 : 14 (ERVTA)
அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார். அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார்.
சங்கீதம் 107 : 15 (ERVTA)
அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
சங்கீதம் 107 : 16 (ERVTA)
நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார். அவர்களின் வெண்கலக் கதவுகளை தேவனால் உடைக்க முடியும். அவர்களின் வாயிற் கதவுகளின் இரும்புக் கம்பிகளை தேவனால் சிதறடிக்க முடியும்
சங்கீதம் 107 : 17 (ERVTA)
சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள். தங்களுடைய குற்றங்களுக்காக அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள்.
சங்கீதம் 107 : 18 (ERVTA)
அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள். அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.
சங்கீதம் 107 : 19 (ERVTA)
அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள். அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
சங்கீதம் 107 : 20 (ERVTA)
தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார். எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
சங்கீதம் 107 : 21 (ERVTA)
அவரது அன்பிற்காகவும், அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
சங்கீதம் 107 : 22 (ERVTA)
அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.
சங்கீதம் 107 : 23 (ERVTA)
சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள். பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
சங்கீதம் 107 : 24 (ERVTA)
கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள். கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
சங்கீதம் 107 : 25 (ERVTA)
தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
சங்கீதம் 107 : 26 (ERVTA)
அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது. மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
சங்கீதம் 107 : 27 (ERVTA)
அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள். மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
சங்கீதம் 107 : 28 (ERVTA)
அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
சங்கீதம் 107 : 29 (ERVTA)
தேவன் புயலை நிறுத்தினார். அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
சங்கீதம் 107 : 30 (ERVTA)
கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள். அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
சங்கீதம் 107 : 31 (ERVTA)
அவரது அன்பிற்காகவும், அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
சங்கீதம் 107 : 32 (ERVTA)
பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள். முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்பேது அவரை வாழ்த்துங்கள்.
சங்கீதம் 107 : 33 (ERVTA)
தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார். நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார்.
சங்கீதம் 107 : 34 (ERVTA)
தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார். அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.
சங்கீதம் 107 : 35 (ERVTA)
தேவன் பாலைவனத்தை மாற்றினார். அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று. தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
சங்கீதம் 107 : 36 (ERVTA)
தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார். அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.
சங்கீதம் 107 : 37 (ERVTA)
அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள். அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள். அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.
சங்கீதம் 107 : 38 (ERVTA)
தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.
சங்கீதம் 107 : 39 (ERVTA)
திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும், அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.
சங்கீதம் 107 : 40 (ERVTA)
தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார். பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
சங்கீதம் 107 : 41 (ERVTA)
பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார். இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
சங்கீதம் 107 : 42 (ERVTA)
நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
சங்கீதம் 107 : 43 (ERVTA)
ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான். அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.
❮
❯