சங்கீதம் 104 : 1 (ERVTA)
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்! நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
சங்கீதம் 104 : 2 (ERVTA)
ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர். நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
சங்கீதம் 104 : 3 (ERVTA)
தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர். அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக் காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
சங்கீதம் 104 : 4 (ERVTA)
தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர்.* தேவனே...உண்டாக்கினீர் அல்லது “உமது தூதர்களை ஆவியாக உருவாக்கினீர்” எனப்படும். உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.
சங்கீதம் 104 : 5 (ERVTA)
தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர். எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.
சங்கீதம் 104 : 6 (ERVTA)
நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர். தண்ணீர் மலைகளை மூடிற்று.
சங்கீதம் 104 : 7 (ERVTA)
நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று. தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
சங்கீதம் 104 : 8 (ERVTA)
தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று, பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
சங்கீதம் 104 : 9 (ERVTA)
நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர். தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.
சங்கீதம் 104 : 10 (ERVTA)
தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர். பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது.
சங்கீதம் 104 : 11 (ERVTA)
நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
சங்கீதம் 104 : 12 (ERVTA)
வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
சங்கீதம் 104 : 13 (ERVTA)
மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன.
சங்கீதம் 104 : 14 (ERVTA)
மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார். நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம். அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன.
சங்கீதம் 104 : 15 (ERVTA)
நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும் நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும், நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார்.
சங்கீதம் 104 : 16 (ERVTA)
லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
சங்கீதம் 104 : 17 (ERVTA)
அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.
சங்கீதம் 104 : 18 (ERVTA)
காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.
சங்கீதம் 104 : 19 (ERVTA)
தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர். எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும்.
சங்கீதம் 104 : 20 (ERVTA)
எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
சங்கீதம் 104 : 21 (ERVTA)
தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.
சங்கீதம் 104 : 22 (ERVTA)
அப்போது சூரியன் எழும்பும், மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.
சங்கீதம் 104 : 23 (ERVTA)
அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.
சங்கீதம் 104 : 24 (ERVTA)
கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
சங்கீதம் 104 : 25 (ERVTA)
சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
சங்கீதம் 104 : 26 (ERVTA)
நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.
சங்கீதம் 104 : 27 (ERVTA)
தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன. தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
சங்கீதம் 104 : 28 (ERVTA)
தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
சங்கீதம் 104 : 29 (ERVTA)
நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். அவை சோர்ந்து மரிக்கும். அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
சங்கீதம் 104 : 30 (ERVTA)
ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.
சங்கீதம் 104 : 31 (ERVTA)
கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்! கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
சங்கீதம் 104 : 32 (ERVTA)
கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும். அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.
சங்கீதம் 104 : 33 (ERVTA)
என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
சங்கீதம் 104 : 34 (ERVTA)
நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
சங்கீதம் 104 : 35 (ERVTA)
பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக. என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! கர்த்தரை துதியுங்கள்!
❮
❯