நீதிமொழிகள் 19 : 1 (ERVTA)
ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது.
நீதிமொழிகள் 19 : 2 (ERVTA)
சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய்.
நீதிமொழிகள் 19 : 3 (ERVTA)
ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.
நீதிமொழிகள் 19 : 4 (ERVTA)
ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள்.
நீதிமொழிகள் 19 : 5 (ERVTA)
இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை.
நீதிமொழிகள் 19 : 6 (ERVTA)
ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
நீதிமொழிகள் 19 : 7 (ERVTA)
ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர் களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள்.
நீதிமொழிகள் 19 : 8 (ERVTA)
ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.
நீதிமொழிகள் 19 : 9 (ERVTA)
பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.
நீதிமொழிகள் 19 : 10 (ERVTA)
ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது.
நீதிமொழிகள் 19 : 11 (ERVTA)
ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது.
நீதிமொழிகள் 19 : 12 (ERVTA)
ஒரு அரசன் கோபத்தோடு இருக்கும் போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.
நீதிமொழிகள் 19 : 13 (ERVTA)
ஒரு முட்டாள் மகன் தன் தந்தைக்கு வெள்ளம் போல நிறையத் தொல்லைகளைக் கொண்டு வருகிறான். ஓயாது குறைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிற மனைவி சொட்டுச்சொட்டாக ஒழுகிக்கொண்டிருக்கும் தண்ணீர் போன்றவள். அது மிகவும் துன்புறுத்தும்.
நீதிமொழிகள் 19 : 14 (ERVTA)
ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.
நீதிமொழிகள் 19 : 15 (ERVTA)
ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.
நீதிமொழிகள் 19 : 16 (ERVTA)
ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.
நீதிமொழிகள் 19 : 17 (ERVTA)
ஏழைகளுக்குப் பண உதவி செய்வது கர்த்தருக்குக் கடன் கொடுப்பது போன்றது ஆகும். அவர்கள் மீது தயவாய் இருந்ததற்காகக் கர்த்தர் அவற்றைத் திருப்பித் தருவார்.
நீதிமொழிகள் 19 : 18 (ERVTA)
உன் மகனுக்குக் கற்றுக்கொடு, அவன் தவறு செய்யும்போது தண்டனைகொடு. அதுதான் ஒரே நம்பிக்கை. இதனை நீ செய்ய மறுத்தால், பிறகு அவன் தன்னையே அழித்துக்கொள்ள நீ உதவுவதாக இருக்கும்.
நீதிமொழிகள் 19 : 19 (ERVTA)
ஒருவன் மிக எளிதில் கோபம் கொண்டால், அதற்குரிய விலையை அவன் கொடுக்க வேண்டியதிருக்கும். அவனை நீ துன்பத்திலிருந்து தப்புவித்தால், அவன் அதனையே மீண்டும் மீண்டும் செய்வான்.
நீதிமொழிகள் 19 : 20 (ERVTA)
அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.
நீதிமொழிகள் 19 : 21 (ERVTA)
ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்.
நீதிமொழிகள் 19 : 22 (ERVTA)
ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.
நீதிமொழிகள் 19 : 23 (ERVTA)
கர்த்தரை மதிக்கிறவன் நல்ல வாழ்வைப் பெறுகிறான். அவன் தன் வாழ்வில் திருப்தியடைகிறான். அவன் துன்பங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
நீதிமொழிகள் 19 : 24 (ERVTA)
சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக் கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம் பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.
நீதிமொழிகள் 19 : 25 (ERVTA)
சிலர் எதற்கும் மரியாதை காட்டமாட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அறிவற்றவன் தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆனால் சிறு சிட்சையே அறிவாளிகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும்.
நீதிமொழிகள் 19 : 26 (ERVTA)
ஒருவன் தன் தந்தையிடமிருந்து திருடி, தன் தாயை பலவந்தமாக வெளியேற்றினால் அவன் மிகவும் மோசமானவன். அவன் தனக்குத்தானே அவமானத்தையும் அவமரியாதையையும் தேடிக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 19 : 27 (ERVTA)
போதனைகளைக் கவனமாகக் கேட்பதை நிறுத்தினால் நீ முட்டாள்தனமான தவறுகளைச் செய்துகொண்டே இருப்பாய்.
நீதிமொழிகள் 19 : 28 (ERVTA)
சாட்சி சொல்ல வருகிறவன் நேர்மையற்றவனாக இருந்தால், தீர்ப்பும் சரியானதாக இராது. தீயவர்கள் சொல்வது தீமையைத் தரும்.
நீதிமொழிகள் 19 : 29 (ERVTA)
மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைப்பவன் தண்டிக்கப்படுவான். அறிவற்றவன் தனக்கான தண்டனையைப் பெறுகிறான்.
❮
❯