நீதிமொழிகள் 18 : 1 (ERVTA)
சிலர் மற்றவர்களைச் சுற்றி இருப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தாம் செய்ய விரும்புவதையே செய்வார்கள். யாரேனும் இவர்களுக்கு அறிவுரை சொல்லப்போனால், அது இவர்களைக் கோபமடையச் செய்யும்.
நீதிமொழிகள் 18 : 2 (ERVTA)
மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர்.
நீதிமொழிகள் 18 : 3 (ERVTA)
ஜனங்கள் தீயவர்களை விரும்பமாட்டார்கள். ஜனங்கள் அந்த அறிவற்றவர்களைக் கேலிச்செய்வார்கள்.
நீதிமொழிகள் 18 : 4 (ERVTA)
ஞானமுள்ளவனின் வார்த்தைகள் ஆழமான ஞானக் கிணற்றிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தைப் போன்றது.
நீதிமொழிகள் 18 : 5 (ERVTA)
ஜனங்களை நியாயந்தீர்ப்பதில் நேர்மையாக இரு. நீ குற்றம் செய்தவர்களை விட்டுவிடுவாயானால் அது நல்லவர்களுக்கு நன்மை செய்ததாக இராது.
நீதிமொழிகள் 18 : 6 (ERVTA)
அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும்.
நீதிமொழிகள் 18 : 7 (ERVTA)
அறிவற்றவன் பேசும்போது, அவன் தன்னையே அழித்துக்கொள்வான். அவனது சொந்த வார்த்தையே அவனை ஆபத்துக்குள்ளாக்கும்.
நீதிமொழிகள் 18 : 8 (ERVTA)
ஜனங்கள் எப்பொழுதும் வம்புகளை விரும்பிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு நல்ல உணவு வயிற்றுக்குள் போவதைப் போன்றிருக்கும்.
நீதிமொழிகள் 18 : 9 (ERVTA)
ஒருவன் கெட்ட செயல்களைச் செய்வது, பொருட்களை அழிப்பது போன்றதாகும்.
நீதிமொழிகள் 18 : 10 (ERVTA)
கர்த்தருடைய நாமத்தில் மிகுந்த பலம் உண்டு. இது உறுதியான கோபுரத்தைப் போன்றது. நல்லவர்கள் அவரிடம் ஓடிச் சென்று பாதுகாப்பைப் பெறுகின்றனர்.
நீதிமொழிகள் 18 : 11 (ERVTA)
செல்வந்தர்கள், தங்கள் செல்வம் தங்களைக் காக்குமென்று நம்புகின்றனர். அது வலிமையான கோட்டையைப்போன்றது என எண்ணுகின்றனர்.
நீதிமொழிகள் 18 : 12 (ERVTA)
பெருமைகொண்ட ஒருவன் விரைவில் அழிந்துபோவான். பணிவாக இருப்பவன் கனத்தைப் பெறுகிறான்.
நீதிமொழிகள் 18 : 13 (ERVTA)
நீ பதில் சொல்வதற்குமுன்பு, மற்றவர் பேசி முடிக்கவிடு. இது உனக்கு அவமானத்தைத் தராது. உன்னை முட்டாளாகவும் ஆக்காது. அப்படியானால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளவும், மூடனாகக் காணப்படவும்மாட்டாய்.
நீதிமொழிகள் 18 : 14 (ERVTA)
நம்பிக்கையுடைய ஒருவன் நோயிலிருந்து விடுபடமுடியும். ஆனால் ஒருவன் தன்னை இழந்து போனவனாக எண்ணினால் அனைத்து நம்பிக்கைகளும் போய்விடும்.
நீதிமொழிகள் 18 : 15 (ERVTA)
அறிவுள்ளவன் மேலும் கற்றுக்கொள்ள விரும்புவான். அவன் மிகுதியான அறிவுக்காகக் கவனமாகக் கேட்பான்.
நீதிமொழிகள் 18 : 16 (ERVTA)
நீ முக்கியமான மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குப் பரிசு கொண்டு போ. அப்போது நீ அவர்களை எளிதில் சந்திக்கலாம்.
நீதிமொழிகள் 18 : 17 (ERVTA)
இன்னொருவன் வந்து கேள்வி கேட்கும்வரை ஒருவன் பேசுவது சரியானது போலவே தோன்றும்.
நீதிமொழிகள் 18 : 18 (ERVTA)
வலிமையான இரண்டுபேர் வாதம் செய்துக்கொண்டிருந்தால், குலுக்கல் சீட்டு மூலமே வாதமுடிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீதிமொழிகள் 18 : 19 (ERVTA)
நீ உன் நண்பனை அவமானப்படுத்தினால், அவனை வசப்படுத்துவது வலிமையான சுவர்களை உடைய நகரத்தை வெல்வதைவிடக் கடினமானதாகிவிடும். குறுக்குக் கம்பிகள்கொண்ட அரண்மனைக் கதவுகளின் தடுப்பைப் போல விவாதங்கள் ஜனங்களைப் பிரிக்கின்றன.
நீதிமொழிகள் 18 : 20 (ERVTA)
நீ சொல்பவை உன் வாழ்வைப் பாதிக்கும். நீ நன்மையைச் சொன்னால் உனக்கு நன்மை ஏற்படும். நீ தீயவற்றைச் சொன்னால் உனக்கும் தீமை ஏற்படும்.
நீதிமொழிகள் 18 : 21 (ERVTA)
மரணம் அல்லது வாழ்வு நேரும்படியாக நாவால் பேசமுடியும். எனவே பேசுவதை நேசிக்கிறவர்கள் அதன் பலனையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
நீதிமொழிகள் 18 : 22 (ERVTA)
மனைவியைக் கண்டுபிடிப்பது நன்மையைக் கண்டுபிடித்ததற்குச் சமமாகும். கர்த்தர் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பதை அவள் காட்டுகிறாள்.
நீதிமொழிகள் 18 : 23 (ERVTA)
ஒரு ஏழை உதவிக்காகக் கெஞ்சுகிறான். ஆனால் செல்வந்தனோ கடினமாகப் பதில் சொல்கிறான்.
நீதிமொழிகள் 18 : 24 (ERVTA)
பேசிச் சிரிக்க நல்லவர்களாக சில நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனைவிடச் சிறந்தவன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24