நீதிமொழிகள் 15 : 1 (ERVTA)
ஒரு சமாதானமான பதில் கோபத்தை மறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும்.
நீதிமொழிகள் 15 : 2 (ERVTA)
அறிவுள்ளவன் பேசும்போது மற்றவர்கள் அதைக் கேட்க விரும்புவார்கள். ஆனால் அறிவற்றவன் முட்டாள்தனமாகவே பேசுவான்.
நீதிமொழிகள் 15 : 3 (ERVTA)
எல்லா இடங்களிலும் என்ன நடை பெறுகிறது என்று கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார். நல்லவர்கள் தீயவர்கள் அனைவரையும் கர்த்தர் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
நீதிமொழிகள் 15 : 4 (ERVTA)
தயவான வார்த்தைகள் வாழ்வளிக்கும் மரம் போன்றது. ஆனால் பொய்யான வார்த்தைகள் மனிதனின் ஆவியை அழித்துவிடும்.
நீதிமொழிகள் 15 : 5 (ERVTA)
முட்டாள்தனமான மனிதன் தன் தந்தையின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிடுவான். ஆனால் அறிவுள்ளவனோ, ஜனங்கள் தனக்குப் போதிக்கவரும்போது கவனித்துக் கேட்கிறான்.
நீதிமொழிகள் 15 : 6 (ERVTA)
நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன.
நீதிமொழிகள் 15 : 7 (ERVTA)
அறிவுள்ளவர்கள் பேசும் பேச்சு உனக்குப் புதிய தகவல்களைத் தருபவையாக இருக்கும். அறிவில்லாதவர்கள் பேசுவதோ கேட்கப் பயனில்லாததாக இருக்கும்.
நீதிமொழிகள் 15 : 8 (ERVTA)
தீயவர்கள் கொடுக்கிற பலிகளைக் கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களைக் கேட்பதில் கர்த்தர் மகிழ்கிறார்.
நீதிமொழிகள் 15 : 9 (ERVTA)
தீயவர்களின் வாழ்க்கை முறையைக் கர்த்தர் வெறுக்கிறார். நல்லவற்றைச் செய்ய முயல்கிறவர்களைக் கர்த்தர் நேசிக்கிறார்.
நீதிமொழிகள் 15 : 10 (ERVTA)
ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.
நீதிமொழிகள் 15 : 11 (ERVTA)
கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார்.
நீதிமொழிகள் 15 : 12 (ERVTA)
அறிவற்றவன் தவறு செய்யும்போது தான் சுட்டிக் காட்டப்படுவதை வெறுக்கிறான். அவன் அறிவுள்ளவர்களிடம் அறிவுரைக் கேட்பதை வெறுக்கிறான்.
நீதிமொழிகள் 15 : 13 (ERVTA)
ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.
நீதிமொழிகள் 15 : 14 (ERVTA)
அறிவுள்ளவன் மேலும் அறிவைப் பெற விரும்புகிறான். அறிவில்லாதவனோ மேலும் முட்டாள் ஆவதை விரும்புகிறான்.
நீதிமொழிகள் 15 : 15 (ERVTA)
சில ஏழைகள் எப்போதும் துக்கமாக இருக்கிறார்கள். ஆனால் மனதில் மகிழ்ச்சி கொண்ட ஜனங்களுக்கு வாழ்க்கை ஒரு விருந்தாகும்.
நீதிமொழிகள் 15 : 16 (ERVTA)
ஒருவன் ஏழையாக இருந்து கர்த்தரை மதிப்பது சிறந்ததாகும். ஒருவன் செல்வனாக இருந்து துன்பப்படுவதைவிட இது மேலானதாகும்.
நீதிமொழிகள் 15 : 17 (ERVTA)
வெறுப்புள்ள இடத்தில் ஏராளமாக உண்பதைவிட அன்புள்ள இடத்தில் கொஞ்சம் உண்பதே நல்லது.
நீதிமொழிகள் 15 : 18 (ERVTA)
எளிதில் கோபப்படுகிறவர்கள் துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறார்கள். பொறுமையுள்ளவர்களோ சமாதானத்துக் குரியவர்கள்.
நீதிமொழிகள் 15 : 19 (ERVTA)
எல்லா இடங்களிலும் சோம்பேறி துன்பம் அடைகிறான். ஆனால் நேர்மையானவனுக்கு வாழ்வு எளிதாக இருக்கும்.
நீதிமொழிகள் 15 : 20 (ERVTA)
அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.
நீதிமொழிகள் 15 : 21 (ERVTA)
முட்டாள்தனமானவற்றைச் செய்வதில் அறிவற்றவன் மகிழ்கிறான். அறிவுள்ளவனோ சரியானவற்றைச் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறான்.
நீதிமொழிகள் 15 : 22 (ERVTA)
ஒருவன் போதுமான அறிவுரையைப் பெறாவிட்டால் அவனது திட்டங்கள் தோல்வியுறும். ஆனால் அறிவுள்ளவர்களின் அறிவுரைகளைக் கவனமுடன் கேட்கிறவன் தன் செயல்களில் வெற்றிபெறுகிறான்.
நீதிமொழிகள் 15 : 23 (ERVTA)
நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.
நீதிமொழிகள் 15 : 24 (ERVTA)
வாழ்விக்கும் வழியைக் கடைபிடித்துத் வாழ்வடையும் நல்லவன், கீழ் நோக்கிச் செல்லும் மரணத்தின் பாதையைத் தவிர்த்துவிடுகிறான்.
நீதிமொழிகள் 15 : 25 (ERVTA)
வீண் பெருமை கொண்ட ஒருவனுக்குரிய எல்லாவற்றையும் கர்த்தர் அழிப்பார். ஒரு விதவைக்குரிய அனைத்தையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
நீதிமொழிகள் 15 : 26 (ERVTA)
கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.
நீதிமொழிகள் 15 : 27 (ERVTA)
ஏமாற்றிப் பொருட்களைப் பெற்றுக்கொள்பவன், தன் குடும்பத்துக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொண்டவனாவான். நேர்மையாக இருப்பவனுக்கோ துன்பம் இல்லை.
நீதிமொழிகள் 15 : 28 (ERVTA)
நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.
நீதிமொழிகள் 15 : 29 (ERVTA)
தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.
நீதிமொழிகள் 15 : 30 (ERVTA)
ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக் கொள்ளச் செய்கின்றன.
நீதிமொழிகள் 15 : 31 (ERVTA)
நீ தவறு செய்கிறாய் என்று சொல்பவர்களைக் கவனிப்பவன் மிகவும் புத்திசாலி ஆகிறான்.
நீதிமொழிகள் 15 : 32 (ERVTA)
ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான்.
நீதிமொழிகள் 15 : 33 (ERVTA)
கர்த்தரை மதிக்கிறவன் அறிவுள்ளவனாகக் கற்றுக்கொள்கிறான். ஒருவன் உண்மையாகவே கர்த்தரை மதிப்பதற்கு முன்பு அவன் பணிவுள்ளவனாக இருக்கவேண்டும்.
❮
❯